டெஹ்ரான், ஜன. 19- ‘உதவி செய்ய தயாராக இருக்கிறோம். படைகள் வருகின்றன என்றெல்லாம் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்களை ஏமாற்றிவிட்டார். முட் டாள் ஆக்கிவிட்டார்’ என ஈரான் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்
போராட்டம்
ஈரானில் கமேனியின் தலை மைக்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவைக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளவர்களை வன் முறையாளர்கள் எனக்கூறி ஈரான் அரசு ஒடுக்கி வருகிறது. இந்த மோதலில் அய்ந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது
இந்த போராட்டம் துவங்கியது முதல் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். உதவிகள் வந்து கொண்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், அமைதியாக போராடுபவர்களை துன்புறுத்தினால் அமெரிக்க ராணுவம் தலையிடும் எனக்கூறியிருந்தார்
இதனை நம்பி ஏராளமானோர் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ஈரான் அரசு தொலைதொடர்பு வசதிகளை துண்டித்தது. பாதுகாப்பு படையினரை குவித்ததுடன், ஆயுதங்களையும் பயன்படுத்தியது. இதனால், உயிரிழப்பு அதிகரித்ததுடன், பலரை காணவில்லை
ஈரான் உறுதி
மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைத் தளத்தில் இருந்து அத்தியாவசியம் இல்லாத ஊழியர்கள் வெளியேற வேண்டும் என பெண்டகன் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதையும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதையும் நிறுத்துவோம் என ஈரான் தனக்கு உறுதியளித்துள்ளது என டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ராணுவ தலையீடு இருக்காது என அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வரும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அதிர்ச்சி
இது தொடர்பாக டெஹ்ரானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், ஈரானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு டிரம்ப்பே பொறுப்பு. அமெரிக்கப் படைகள் தயாராக உள்ளன என டிரம்ப் கூறியதை நம்பி பலர் போராட்டத்திற்கு வந்தனர். ஆனால், எங்களை ஏமாற்றும் வகையில், ஈரான் அரசுடன் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது யாரையும் கொல்லமாட்டோம் என ஈரான் உறுதியளித்துள்ளதாக கூறுகிறது. இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டோம், முட்டாள் ஆக்கப்பட்டோம் என ஈரானியர்கள் உணர்கின்றனர். அவர் மோசமானவர். அவர் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார் என்றார். மற்றொருவர் கூறுகையில், டிரம்ப் கோழையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.
