புதுடில்லி, ஜன. 19– கடந்த இரண்டாயிரத்து இருபத்து நான்கில், ஒன்பது கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, பன்னாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. அய்ரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனை தலைமையிடமாக வைத்து இயங்கும், ‘தி லான்செட் டயபாடீஸ் அண்ட் எண்டோகிரைனாலஜி’, மருத்துவ இதழ் ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில், இரண்டாயிரத்து இருபத்து நான்கில் உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பன்னாட்டு நீரிழிவு நோய் கூட்டமைப்பு, சென்னையில் உள்ள இந்திய நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு நோய் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இணைந்து உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். கடந்த இரண்டாயிரத்து அய்ந்து முதல் இரண்டாயிரத்து இருபத்து நான்கு வரை வரையிலான காலங்களில் பதிவான விபரங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
மொத்தம் இருநூற்று பதினைந்து நாடுகளின் தரவுகளை ஆராய்ந்து, இருநூற்று நாற்பத்து ஆறு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாயிரத்து இருபத்து நான்கில், சீனாவில் 14.8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். ஒன்பது கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், 3.9 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள், உலகளவில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
வரும் இரண்டாயிரத்து அய்ம்பதாம் ஆண்டிற்குள், அமெரிக்காவை பாகிஸ்தான் மிஞ்சிவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது. இரண்டாயிரத்து இருபத்து நான்கில், பதினொன்று சதவீதத்துக்கும் அதிகமானோர், அதாவது இருபது முதல் எழுபத்து ஒன்பது வரையிலான வயதுக்கு உட்பட்ட 58.9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். வரும் இரண்டாயிரத்து அய்ம்பதில், இது, பதிமூன்று சதவீதமாக அதிகரிக்கும். கடந்த இரண்டாயிரத்து இருபத்து நான்கில், உலகளவில் ஒன்பது பேரில் ஒருவர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை அய்ம்பது கோடியை தாண்டியது. இரண்டாயிரத்து அய்ம்பதாம் ஆண்டிற்குள், இது, தொண்ணூறு கோடியாக உயரும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
