லதேஹார், ஜன.19 ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கையில் ‘புனித’ நீராடச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாவங்களைத் தீர்க்கும் என்று மவுனி அமாவாசையை முன்னிட்டு (தை அமாவாசை) கங்கையில் நீராட கங்கை நதிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ஜார்கண்ட் லதேஹார் மாவட்டத்தின் சாலை வழியாகச் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரமிருந்த ஆழமான பள்ளத்தில் தலை கீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்தவர்களில்
80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ‘புனித’ நீராடச் சென்ற இடத்தில் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்ற ஆண்டு இதே நாளில் மவுனி அமா வாசையில், உத்தரப்பிரதேசத்தில் கங்கையில் ‘புனித’ நீராட ஓடிய கூட்டத்தில் மிதிபட்டு 80–க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது தொடர்பாக பிபிசி கள ஆய்வு செய்து சான்றுகளோடு பலியானோர் எண்ணிக்கையை வெளியிட்டது,
ஆனால், அதை உத்தரப்பிரதேச சாமியார் அரசு இன்றுவரை ஒப்புகொள்ளவில்லை. 30 பேர் இறந்ததாகக் கூறி, 17 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் அடையாளம் தெரியாததால் அப்படியே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
