ஈரானில் 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு
வாசிங்டன், ஜன. 18– ஈரான் அரசு 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் ஈரானின் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 100 நகரங்களுக்கு மேல் பரவி உள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்தது. நிலைமை சீரான பின்னர் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சூறையாடுபவர்கள், “கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்கள்” என அரசு கூறியது. இதனால், அந்நாட்டு தண்டனை சட்டத்தின்படி, கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறுகையில்,
ஈரானில் 800 பேரை தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை அவர்கள் ரத்து செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஈரானில் 800க்கும் மேற்பட்டோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன் டிரம்ப் கூறும்போது, “போராட்டக்காரர்களை படுகொலை செய்வது நிறுத்தப்பட்டு விட்டது என தகவல் கிடைத்துள்ளது’’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட
75 நாடுகளுக்கு குடிவரவு விசா நிறுத்தம்
75 நாடுகளுக்கு குடிவரவு விசா நிறுத்தம்
அமெரிக்கா அதிரடி!
வாசிங்டன், ஜன. 18– அமெரிக்க அரசு ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடிவரவு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்கிறது என அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. விசா பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறுமதிப்பீடு செய்யப்படும் வரை, விசா விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு என குறிப்பிட்ட காலக்கெடு ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த முடிவின் மூலம், உலகில் உள்ள கிட்டத்தட்ட 200 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசா பெற்று வருபவர்கள் அமெரிக்க அரசின் பொது நலத்திட்டங்களை அதிகம் சார்ந்து இருக்கக்கூடும் என்ற கவலையினால், இந்த 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தடை பெரும்பாலும் குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு தற்போது இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 21 முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் பட்டியலில் ரஷ்யா, பாகிஸ்தானும் அடங்கும்.
பாதிக்கப்பட்ட 75 நாடுகள்
ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹாமாஸ், பங்களாதேஷ், பார்படாஸ், பெலாரஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், பர்மா (மியான்மர்), கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி அய்வரி (Cote d’Ivoire), கியூபா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, பிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினியா, ஹைட்டி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன்.
