அய்யப்பன் சக்தி சந்தி சிரிக்கிறது! சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு! அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தந்திரி என 12 பேர் கைது! அடுத்து என்ன?

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், ஜன.18– சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.அய் கட்சியை சேர்ந்தவராவார்.

சபரிமலை அய்யப்ப சுவாமி கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998ஆம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.

மேலும், அந்தக் கவசங்களை பராமரிப்புப் பணி செய்து தருவதாகக்கூறி தேவசம்போர்டு அதிகாரிகள் முன்னிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சென்னைக்கு கொண்டுசென்றார் உன்னிகிருஷ்ணன் போற்றி. உயர்நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்காமல் விதிகளை மீறி தங்க கவசங்கள் எடுத்துச் செல்லப்பட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த கவசங்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு திரும்ப கொண்டுவரப்பட்டன.

அப்போது அந்த தங்கக் கவசங்களில் சுமார் 4 கிலோ எடை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஜய் மல்லையா 1999ஆம் ஆண்டு  ஏற்கனவே தங்கம் வழங்கிய நிலையில், மீண்டும் தங்கம் பதிக்க வேண்டிய அவசியம் என்ன? பழைய தங்கம் ஆவியாகிவிட்டதா என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) அமைத்தது உயர்நீதிமன்றம். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்புக் கவசங்கள் மீது பொதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதிந்தது.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியப் புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து தங்கம் சரியாக பராமரிக்காதது, அலுவலக புத்தகத்தை சரியாக பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக சபரிமலை மேனாள் ஆட்சி அலுவலர் முராரி பாபு அக்டோபர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேனாள் நிர்வாக அதிகாரி சி.சுதீஷ்குமார் கடந்த நவம்பர் 1ஆம் தேதியும்,  முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜூ நவம்பர் 6ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தேவசம்போர்டு ஆணையர் என்.வாசு நவம்பர் 11ஆம் தேதி கைதானார்.

தொடர்ந்து தேவசம்போர்டு மேனாள் தலைவர் ஏ.பத்மகுமார் நவம்பர் 20ஆம் தேதி கைதானார். முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ்.சிறீகுமார் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செம்புக் கவசத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த தங்கத் தகடை தனியாக பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி கடந்த டிசம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கருநாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனும் அதே டிசம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது நகைக்கடையில் இருந்து சுமார்  நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் டிசம்பர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஜனவரி 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடைசியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் ஜனவரி 14 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சி.பி.அய் கட்சியைச் சேர்ந்த கே.பி.சங்கரதாஸ் இதயம் சம்பந்தப் பட்ட பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவ மனையில் சென்று கைது செய்துள்ளது சிறப்பு விசாரணைக்குழு. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூட்டத்தில் தங்கம் பூசிய தகடு என குறிப்பிடப்பட்டதை பச்சை மை (இங்க்) பேனாவால் வெட்டி செம்புத்தகடு என திருத்தி உள்ளார் அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார். அதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் விஜயகுமார் மற்றும் கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கையெழுத்து போட்டுள்ளனர். உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தங்கக் கவசங்களை கொடுத்து அனுப்புவதற்காக இந்த தீர்மானம் போடப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், உறுப்பினர்களாக இருந்த விஜயகுமார், கே.பி.சங்கரதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், உறுப்பினர்கள் என ஒட்டுமொத்தக் குழுவும் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.அய் கட்சியை சேர்ந்தவராவார்.

இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், “துவார பாலகர்களின் தங்க கவசங்களை சென்னைக்கு எடுத்துச் செல்வதத்கு அனுமதி அளிக்கும் ஃபைலில் தந்திரி கண்டரரு ராஜீவரரும் கையெழுத்து போட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் தொடருகிறார் கே.பி.சங்கரதாஸ். நீதிபதிகள் மருத்துவமனைக்குச் சென்று கே.பி.சங்கரதாஸை நீதிமன்றக் காவலுக்கு உள்ளாக்கினர். அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை மருத்துவர்கள் கே.பி.சங்கரதாஸை பரிசோதித்த பின்னர், அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். கொள்ளை நடைபெற்ற காலகட்டத்தில் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த கடகம்பள்ளி சுரேந்திரனிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *