சிறீஹரிகோட்டா, ஜன. 17- ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 12ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.
சி-62 (PSLV C-62) ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. ராக்கெட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அதிர்வு மற்றும் பாதை விலகல் காரணமாக, அதில் அனுப்பப்பட்ட 16 செயற்கைக்கோள்களும் விண்வெளியில் தொலைந்து போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கடல்சார் கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.என்-1 (அன்வேஷா) இந்த ராக்கெட்டின் முதன்மை இலக்காகும். இதனுடன் இந்திய மாணவர்களின் செயற்கைக்கோள், தனியார் நிறுவனங்களின் சோதனை செயற்கைக் கோள்கள், ஸ்பெயின் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 15 சிறிய செயற்கைக் கோள்கள். இவை அனைத்தும் 505 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டியவை.
நடந்தது என்ன?
சுமார் 260 டன் எடையுள்ள பி.எஸ்.எல்.வி. -டிஎல் ரக ராக்கெட் 14.1.2026 அன்று காலை 10.18 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாகச் செயல்பட்டன. இருப்பினும், மூன்றாம் நிலை செயல்பாட்டில் இருந்தபோது திடீர் சிக்கல் உருவானது.
ராக்கெட் பயணிக்க வேண்டிய பாதையில் விலகல் ஏற்பட்டு, அதிர்வுகள் அதிகரித்தன. இதனால் ராக்கெட்டின் வேகம் மற்றும் செயல்திறன் குறைந்து, சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களைச் செருகும் முயற்சி தோல்வியடைந்தது. ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடங்களிலேயே இந்தத் திட்டத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தத் தோல்வி இந்தியாவின் விண் வெளித் திட்டங்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தோல்விக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் குழு சிறீஹரிகோட்டாவில் முகாமிட்டு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
“ராக்கெட் புறப்பட்ட விநாடியிலிருந்து அது பாதை மாறிய தளம் வரை உள்ள அனைத்துத் தரவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. முழுமை யான ஆய்வுக்குப் பின்னரே தொழில் நுட்பக் கோளாறு குறித்த தெளிவான அறிக்கை வெளியிடப்படும்,” என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
