இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித்
தலைவரை நீக்கிய சிங்கப்பூர் பிரதமர்
தலைவரை நீக்கிய சிங்கப்பூர் பிரதமர்
சிங்கப்பூர், ஜன. 17- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் சிங்கப்பூர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், பிரிதம் சிங்கை அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த விஷயத்தை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பிரிதம் சிங்கின் குற்றவியல் தண்டனைகளும், அவர் அந்த பதவிக்குத் தகுதியற்றவர் என்பது குறித்த நாடாளுமன்றத்தின் ஆழமான கருத்தும் சேர்ந்து, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது இனி சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி உடனடியாக மாற்று எதிர்க்கட்சித் தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
49 வயதாகும் பிரிதம் சிங், தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர் முன்னாள் எம்.பி. ரயீஷா கான் வழக்கில், நாடாளுமன்ற நிலைக்குழு முன் பொய் கூறினார். இதனால் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு 10,700 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
“அமெரிக்கா உலக ஒழுங்கை சிதைக்கிறது” ஈரான் தூதரகம் கடும் எச்சரிக்கை!
புதுடில்லி, ஜன. 17- அமெரிக்காவின் தன்னிச்சையான செயல்பாடுகள் உலக நாடுகளின் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பதாக, இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் மவுனம் கலைக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஈரான் தூதரகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா பன்னாட்டு விதிகளை மதிக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்படு கிறது. இது உலக நாடுகளுக்கிடையிலான சமநிலையை (World Order) முற்றிலுமாக சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் மவுனமாக இருக்கக் கூடாது. இந்த மவுனம் தொடர்ந்தால், அதன் எதிர்மறையான பாதிப்புகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
அமெரிக்காவின் தற்போதைய செயல்பாடுகள் ஈரானை மட்டும் குறிவைப்பவை அல்ல; அவை உலகளாவிய ரீதியில் பல நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் உறுதித்தன்மையைப் பாதிக்கும் தன்மை கொண்டவை. அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கை உலக நாடுகள் கண்டிக்கத் தவறினால், பன்னாட்டு அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என ஈரான் தூதரகம் எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பன்னாட்டு நீதியைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
