கனிமொழி
சென்னை, ஜன.17 ‘தேர்தல் நேரத்தில் மட்டும், பிரதமர் மோடி பொங்கல் கொண்டாடுகிறார்’ என, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினரும், தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி விமர்சித்துள்ளார்
பொங்கலையொட்டி, ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, இந்தாண்டு சென்னையில் இருபது இடங்களில், பதினெட்டாம் தேதி வரை நடக்கிறது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஆயிரத்து அய்நூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள், அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் . இவர்களுக்கு கறி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி, செம்மொழிப் பூங்கா வளாகத்தில் நடந்தது. இதில் ,நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்
பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில், பராசக்தி படக் குழுவினரும் அழைக்கப்பட்டு இருந்தனர். தேர்தலுக்காக மட்டும் பொங்கல் கொண்டாடுபவர்களை பற்றி, நாம் பேசிப் பயனில்லை. தேர்தலுக்கு தேர்தல் தமிழர்களைப் பற்றி, தமிழ்நாட்டைப்பற்றி, தமிழ்மொழி பற்றி அக்கறைப்படக் கூடியவர்கள் போல நடிப்பர் இந்தியை திணிக்க நினைப்பவர்கள்; தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதி மறுப்பவர்கள், தேர்தல் வரும்போது மட்டும் நம்மை ஏமாற்ற முயற்சிப்பர் . மக்களுக்கு அவர்கள் யார் என்று அடையாளம் தெரியும் . அவர்களை நம்பி ஏமாற, தமிழ்நாட்டில் யாரும் இல்லை. பராசக்தி படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை
கலைஞரின் பராசக்தி படமும் படாத பாடுபட்டு தான் வெளிவந்தது. சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளைப் போல, திரைப்பட தணிக்கை வாரியத்தையும், ஒன்றிய அரசு ஆயுதமாக பயன்படுத்த துவங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
