உழவன் – உழைப்பின் அடையாளமாம் தைப் பொங்கலே வருக!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உலக நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழியின் அடிப்படையில் வெவ்வேறு பெயர்களில் அறுவடைத் திருவிழா (Harvest Festival) கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் – இனப் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

உழைப்பின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் விழாவைப் பார்ப்பனர்கள் ஏற்பதில்லை – கொண்டாடுவதும் இல்லை.

வேத சாஸ்திர, ஸ்மிருதிகளின் அடிப்படையை மறந்தும் விட்டு விடக் கூடாது என்பதில் உறுதி கொண்ட பார்ப்பனர்கள் பொங்கலை ஏற்றுக் கொள்வதில்லை. என்றாலும் ‘சங்கராந்தி’ என்று பெயர் சூட்டி, அதிலும் அறிவுக்குப் பொருத்தமற்ற புராணக் கதைகளை கட்டவிழ்த்து விட்டனர். அதனால் தான் தீபாவளியை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குப் பொங்கலைப் பார்ப்பனர்கள் ஏற்பதுமில்லை – கொண்டாடுவதும் இல்லை.

உழைக்காமல் அதே நேரத்தில் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி வாழ்வது என்பதை ஒரு வாழ்வியல் முறையாகவே கொண்டவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

விவசாயத்தைப் பற்றி அவர்களின் மனுதர்மம் சொல்லுவது எள்ளலுக்குரியது! இதோ மனுதர்மம் கூறுகிறது.

‘‘பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ?’’ (மனுதர்மம் அத்தியாயம் 10 – சுலோகம் – 84).

அதே மனுதர்மம் பத்தாவது அத்தியாயம் 83ஆவது சுலோகம் என்ன சொல்லுகிறது?

‘பிராமண, க்ஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்த போதும், உடல் முயற்சியும், பிறர் தயவை நாடத்தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. அதைத்தான் நேரில் இயற்றாவிடினும் தனது ஜீவனத்தை முன்னிட்டு, தக்க ஆட்களைக் கொண்டு தனக்காக விவசாயமும் செய்விக்கலாம்’’ என்கிறது மனுதர்மம்.

எவ்வளவுத் தந்திரமும் சூழ்ச்சியும் இதில் சூள் கொண்டு இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘விவசாயம் பாவத் தொழில்’ என்று ஓரிடத்தில் அடித்துச் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தில் ‘தமக்காக பிறரைக் கொண்டு விவசாயமும் செய்விக்கலாம்’ என்பது தந்திரோபதாயம் அல்லவா!

காரணம் ‘விவசாயம் பாவத் தொழில்’ என்று அதனைப் புறக்கணித்து விட்டால், தங்கள் வயிறும் நிரம்பாதே – பசி, பட்டினியால் வாடி வதங்கி உயிர் நீக்கும் அபாயம் உள்ளதே!

தாங்கள் வியர்வை சிந்தாமல், உழைக்காமல் வாழ வேண்டும்; அதே நேரத்தில் பிறன் உழைப்பைச் சுரண்டி வாழும் ஒட்டுண்ணியாகக் காலத்தைக் கடத்த வேண்டும் என்பதை சாஸ்திர ரீதியாக ஆக்கி விட்டால், பக்தியில் மூழ்கிய மக்கள் அதில் காரணக் காரியத்தைச் செலுத்தாமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா – அந்தத் தந்திரம் என்பது பார்ப்பனர்களின் குருதியோடு கலந்துவிட்ட ஒன்றாகும்.

1921ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள். அந்தச் சமயம் ‘கும்பகோணம்’ சங்கராச்சாரியார் (கவனிக்கவும் ‘காஞ்சிபுரம்’ என்பது பிற்காலத்தில் செருகப்பட்டது).  அப்பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன் வந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.

‘‘கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவது ஒரு சிறப்புத்தான் அதை வரவேற்க வேண்டும்’’ என்று பதில் கொடுத்தார் காந்தியார் (ஆதாரம்: ‘தமிழ்நாட்டில் காந்தி’’ பக்கம் 378).

அதே கும்பகோணம் (காஞ்சி) சங்கராச்சாரியார் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஒன்றைச் சொல்லுவதைப் பார்க்க வேண்டும்.

‘‘இப்பொழுது ஏற்பட்டிருக்கிறபடி ஒரு பெரிய தப்பபிப்ராயம் என்னவென்றால், சாஸ்திரோத்தமான வர்ணாசிரம கர்மத்தில் பிராமணனுக்குத் தான் செளகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்கிற எண்ணம் இது சுத்தப் பிசகு!

நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிராம்மணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்குக் குறைச்சலானதல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஷ்டானங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயக்காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்? இந்த சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும் வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரிச் செய்ய பிராம்மணனுக்கு ‘ரைட்’ ஏது?’’

(சங்கராச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதியின் ‘தெய்வத்தின் குரல்’’ இரண்டாம் பாகம் பக்கம் 1013–1014).

இந்தப் பார்ப்பனர்களை ஜில்லென்று பழைய சாதத்தைச் சாப்பிடக் கூடாது என்று யார் கையைப் பிடித்து இழுத்தார்கள்? சங்கராச்சாரியார் சொல்லுகிறபடி எத்தனைப் பார்ப்பனர்கள் விரதம், உபந்நியாசம் என்று சொல்லி வயிற்றைக் காயப் போடுகிறார்கள்?

இதே சங்கராச்சாரியார்தானே ‘கம்யூனல் ஜி.ஓ.’வினால் பிராம்மணர்கள் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்று புலம்பிதற்குக் காரணம் என்ன?

திராவிடம் என்றால் உழைப்பு! ஆரியம் என்றால் அடுத்தவர் உழைப்பைச் சுரண்டுதல் என்பதும் புரிகிறதல்லவா!

உழைப்பின் பெருமையைப் போற்றக் கூடாது என்பதால்தான்  தை பொங்கலைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்!’ என்பதையும் ஒப்புக் கொள்வதில்லை. விவசாயத்தின் அறுவடையைக் கண்டு மகிழும் நாளை – உழைப்பை வெறுக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

நாட்டில் நடைபெறும் சித்தாந்தப் போர் என்பது பார்ப்பனர்ப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் திராவிடர் தம் சித்தாந்தப் போர் ஆகும்.

அதனால்தான் திராவிடர் இயக்கம் பொங்கல் விழாவை முன்னிறுத்தி வருகிறது. பொங்கல் மலர்களை வெளியிட்டு வந்தது. பொங்கல் வாழ்த்து என்று மடல்களை அனுப்பி அளவளாவும் பண்பினைச் செயல்படுத்திக் காட்டியது.

இடைக்காலத்தில் இந்தப் போக்கு மங்கியிருப்பது உண்மைதான்! என்றாலும் மீண்டும் திராவிடப் பொங்கலை வீதிகளில் எல்லாம் கொண்டாடச் செய்ய உறுதியெடுப்போம்!

தைப் பொங்கல் நாள் எப்பொழுது வரும் என்று குழந்தைகள் முதல் முதியோர் வரை ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் நிலையை உருவாக்குவோம்!

திராவிடர் கழகத்தின் தலைமை நிலையத்தின் சார்பில் கடந்த 32 ஆண்டுகளாகப் பொங்கல் விழாவைப் பூரிப்போடு கொண்டாடி வருகிறது.

ஓணம் விழாவை வாமன விழா என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதையும் இந்த இடத்தில் நினைவு கூர்கிறோம்.

எல்லா இடத்திலும் அரங்கேற்றப்படும் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க இப்பொங்கல் பொன்னாளில் சூளுரைப்போம்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

பொங்கலோ பொங்கல்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *