கேள்வி: சைனஸ் பிரச்சினை என்றால் என்ன?
பதில்: சைனஸ் என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு உறுப்பு. மூக்கின் இரு பக்கமும், தலையின் முன் பக்கத்திலும் இருக்கின்ற காற்றடைத்த பைதான் சைனஸ் ஆகும்.
சைனஸ் வியாதி அல்ல
சைனஸ் என்பது வியாதி அல்ல. உடம்பைப் போர்த்தி இருக்கும் தோலைப் போல, மூக்கு மற்றும் சைனஸ் பகுதிகளில் பரவி இருக்கும். எனவே, மூக்கிலும், சைனசிலும் ஏற்படும் வியாதி ஒரே விதமாக இருக்கலாம். பொதுவாக அலர்ஜியை ‘சைனஸ்’ என்று கூறிக் கொள்வார்கள். அலர்ஜி என்பது காற்றில் இருக்கும் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பொருள்.
மூக்கு சைனஸ் பகுதிகளில் நுழையும்போது ஒவ்வாமை ஏற்பட்டு தொடர் தும்மல், மூக்கு மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுத்தலாம்.
மூக்கடைப்பு ஏற்படுவதனால் சைனஸ் பகுதிகளுக்குச் செல்லும் காற்று தடைப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளலாம்.
அந்த நீர் தேங்கி இருப்பதால் பாக்டீரியா வைரஸ் பூஞ்சை காளான் போன்ற நோய்க் கிருமிகள் வளர்ந்து, அதனால் SINUSITIS ஏற்படலாம். அதற்கு தேவையான நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
அய்ஸ்கிரீம் அலர்ஜியா?
கேள்வி: அலர்ஜிக்கான தீர்வு இருக்கிறதா?
பதில்: முன்பே கூறியதைப் போல 99 சதவீதம் அலர்ஜி காற்றில் மிதக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்களினால் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பது தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இதை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
கேள்வி: அய்ஸ்கிரீம் உள்ளிட்ட குளிரான உணவுப் பொருட்களையோ, பழங்களையோ சாப்பிடுவதனால் அலர்ஜி ஏற்படுமா?
பதில்: உணவுப் பொருட்களால் அலர்ஜி வருவது மிக மிகக் குறைவு. ஆகவே, ஏதாவது ஒரு உணவுப் பொருள் எடுத்துக் கொள்வதனால் அலர்ஜி ஏற்படுவது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக குளிர் பானங்களையோ, பழங்களையோ தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மூக்கில் இரத்தம் வருவது ஏன்?
கேள்வி: மூக்கில் இரத்தம் வருவது அபாயகரமானதா?
பதில்: மூக்கில் இரத்தம் வருவது குறிப்பாக குழந்தைகளுக்கு இரத்தம் வருவது 90 சதவீதம் பயப்படத் தேவை இல்லை. ஏனென்றால், குழந்தைகள் மூக்கை நோண்டுவதால் மட்டுமே இரத்தம் வரும். சில குழந்தைகளுக்கு இரத்தத்தில் வியாதி இருந்தாலோ, மூக்கில் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களைப் போட்டு வைத்தாலோ இரத்தம் வரலாம். அதற்கு சரியான முறையில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெரியவர்களுக்கு மூக்கில் இரத்தம் வருவது ஏதோ ஒரு ஆபத்தான வியாதியின் அறிகுறியாகப் பார்க்க வேண்டும்.
இரத்தக் கொதிப்பு இருப்பவர்களுக்கு மூக்கில் இருந்து இரத்தம் வரலாம் அல்லது மூக்கில் ஏதாவது கட்டி இரத்தக் கட்டியாகவோ அல்லது கேன்சர் கட்டியாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது.
அதற்குத் தேவையான பரிசோதனை செய்து சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.
கேள்வி: மூக்கு நடுத்தண்டு வளைந்து இருப்பது (SEPTAL DEVIATION) வியாதியா?
பதில்: மூக்குத் தண்டு பெரும்பாலானவர்களுக்கு ஏதாவது ஒரு பக்கம் சற்று வளைந்துதான் இருக்கும். எனவே, எல்லோரும் பொதுவாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
மூச்சுவிட சிரமம் ஏற்பட்டாலோ, மூக்கில் இருந்து இரத்தம் வழிவது, அதனால் ஏற்பட்டாலோ அப்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
கேள்வி: மூக்கில் இருந்து துர்நாற்றம் வருவதை எளிதாக எடுத்துக் கொள்ளலாமா?
பதில்: பொதுவாக குழந்தைகளுக்கு அதீத துர்நாற்றம் தொடர்ச்சியாக இருந்தால் முதல் காரணம் மூக்கில் ஏதாவது ஒரு பொருளை (FOREIGN BODY) போட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
துர்நாற்றத்தோடு சேர்ந்து ஒரு பக்க நாசித் துவாரத்தில் இருந்து சீழ் வடிவது, இரத்தம் வருவது, அதனால் ஏற்படலாம். இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நீர்க்கட்டி
கேள்வி: மூக்கு மற்றும் சைனஸ் பகுதிகளில் நீர்க்கட்டி (BOLYP) ஏற்படுவது ஏன்?
பதில்: தொடர்ந்து அலர்ஜி (ஒவ்வாமை) இருப்பவர்களுக்கு நீர்க்கட்டி (BOLYP) வர வாய்ப்புள்ளது?
நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போது ஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
வியாதி முற்றிய நிலையில் மிகவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ பூஞ்சைக் காளான் FUNGUS வளர்ந்து அதனால் உபாதைகள் ஏற்பட்டாலோ எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி செய்து கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அலர்ஜி நோய் தடுப்பு மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
