சென்னை, ஜன.12 தமிழ்நாடு அரசால் கடந்த1996ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், 2023ஆம் ஆண்டு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோருக்கும் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட விருதுகள் அளிக்கப்பட்டதை எதிர்த்து புதுவெண்ணாம்புதூர் என்ற ஊரினை சார்ந்த டி. சிறீதர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தொடுத்த ரிட் மனுவில் 1994 முதல் ‘பெரியார் விருது’ அளிக்கும் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட விருதுகளைத் திரும்பப் பெற்று புதிதாகத் தகுதி பெற்ற நபர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தான் பல்வேறு சமூகப் பணிகளை செய்வதாகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், தனக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேற்கண்ட ரிட் மனு நீதிபதி பி.டி. ஆஷா அவர்கள் முன்பு (9.1.2026) அன்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர்கள் சு. குமாரதேவன், த.வீரசேகரன், ஆர். திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி மனுதாரரின் மனு நிலைக்கத்தக்கதல்ல என்றும், அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.
