ஜெய்ப்பூர், ஜன.10- கொவிட்-19 பெருந்தொற்றுக் காலகட்டத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநில அரசின் நண்பகல் உணவுத் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன் தொடர்பில் அம்மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு வியாழக்கிழமை 8.1.2026 அன்று வழக்குப்பதிவு செய்தது.
ராஜஸ்தான் கூட்டுறவுப் பயனீட்டாளர் கூட்டமைப்பு நிறுவன அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 21 பேர்மீது குற்றச் சதி, மோசடி, அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து, உணவு தானியங்கள், எண்ணெய், மற்ற அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களை மாநிலம் முழுவதும் மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 2020-2021ஆம் ஆண்டில் இடம் பெற்ற அத்திட்டத்தில் பேரளவில் முறைகேடுகள் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
தகுதியற்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக விதிமுறைகளைத் தளர்த்தியதன்மூலம் தகுதியான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கையில் பங்கேற்க முடியாமல் போனதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை உறுதிசெய்ததாகச் சொல்லப்பட்டது.
பின்னர் அந்த நிறுவனங்கள் போலியான பெயர்களில் துணை நிறுவனங்களை உருவாக்கியதாகவும் இல்லாத வழங்குநர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் பெயர்களில் விநியோகச் சங்கிலியை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது.
உண்மையில், கொள்முதலோ விநியோகமோ செய்யப்படவில்லை என்றும் அல்லது சிறிய அளவிலேயே செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
எந்தப் பொருளையும் வாங்காமலும் அல்லது விநியோகிக்காமலும் போலியான விலைப்பட்டியல்களை உருவாக்கி, அரசிடமிருந்து பணம் பெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பல சம்பவங்களில், தரம் குறைந்த பொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் ஆயினும் தர, பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப அவை மேற்கொள்ளப்பட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதன்மூலம் மாநில அரசுக்குக் கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஊழல் ஒழிப்புத்துறை தெரிவித்தது.
