ஆசிரியருக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடர் பயணங்கள் இருக்கும் சூழலில், தொலை தூர நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா பயணங்களும் சென்ற ஆண்டுகளில் இணைந்து கொண்டன. தொடர் உழைப்பின் காரணமாகக் காதில் சிறிது தொற்று ஏற்பட்டு, சரித்திரம் காணாத ஒரு மாத ஓய்வு தேவைப்பட்டது. ஆசிரியரைக் காணாமல் தோழர்கள் உளைச்சலில் இருந்தனர். எனினும் மருத்துவமனையில் இருந்தே அறிக்கை எழுதுவது, ஆலோசனைகள் கூறுவது எனக் கழகப் பணிகள் நடந்து கொண்டே தான் இருந்தன.
ஒருமுறை சுற்றுப் பயணத்தில் இருந்த போது, ஆசிரியருக்குக் குரல் பாதிக்கப்பட்டது. பேச்சு சரியாக வரவில்லை, குரல் கட்டிக் கொண்டது, கூடவே இருமலும் வந்து, பெரும் கவலையாகிப் போனது. காரணம் அது முக்கியமான தொடர் பிரச்சாரம். எனினும் இரண்டே நாள்தான், ஆசிரியர் என்ன செய்தார்கள், எப்படி சரி செய்தார்கள் என்றே தெரியவில்லை, மறுநாள் மாலை கணீரென்ற குரல் மேடையில் ஒலிக்கத் தொடங்கியது. இப்படி எத்தனையோ சோதனைகள், சாதனைகளாக மாறியது தான் ஆசிரியரின் வரலாறு!
இந்த இடத்தில் கழுகுகள் குறித்து ஒரு செய்தியை அறிந்து கொள்ள வேண்டும். பறவைகள் இனத்தில், கழுகு மட்டுமே நீண்ட காலம் வாழும் பறவையாகும். கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் உயிர் வாழும். அதன் 40 ஆவது வயதில் அது சந்திக்கும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?
உண்பதற்குப் பயன்படும் அலகுகள் பெரிதாகி, உண்ணவே முடியாத சூழல் உருவாகும். கால் நகங்களும் மிகப் பெரிதாய் வளர்ந்துவிடும். மட்டுமின்றி இறக்கைகள் அடர்த்தியாக வளர்ந்து, பறக்கவே முடியாத நிலை உருவாகும். ஆக பறக்கவோ, இரை தேடவோ, உண்ணவோ முடியாத நிலையில் அது இருக்கும். அந்தக் காலத்தில் கழுகுகள் என்ன செய்யும் தெரியுமா?
பெரிதான தன் அலகுகளைப் பாறையில் தேய்த்து உடைக்கும், கால் நகங்களின் தேவையற்ற பாகங்களைப் பிய்த்து எரியும்,
அடர்ந்த தன் இறக்கைகளை உரித்து எரியும். இப்படித் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள கழுகுகள் எடுத்துக் கொள்ளும் காலம் 5 மாதங்கள்.
எந்தப் பயிற்சியும் இல்லாமல், யாரும் சொல்லிக் கொடுக்காமல் போராடி ஜெயிக்கின்றன கழுகுகள். இந்தக் கொடிய போராட்டங்களுக்குப் பிறகு, கழுகுகள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறது தெரியுமா தோழர்களே? அசந்து விடாதீர்கள்… 30 ஆண்டுகள்!
நாம் ஒரு மனிதரைப் பார்க்கிறோம், பாராட்டுகிறோம் என்பதைக் கடந்து, அவர்களை முன்மாதிரியாய், பாடமாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆலோசனை, அறிவுரை என்று இல்லாமல், ஆக்கப்பூர்வமான செயல்களால் நெஞ்சம் நிறைந்தவர் ஆசிரியர் அவர்கள்! தமிழ்நாட்டு நடைமுறையில் பெரியார் என்றால் அவர் பெரியார் தான், அறிஞர் என்றால் அது அண்ணா தான், முத்தமிழறிஞர் என்றால் அது கலைஞர் தான், ஆசிரியர் என்றால் அது வீரமணி அவர்கள் தான்!
ஆக, காதில் ஏற்பட்ட தொற்று சிறிது சரியான நிலையில், ஆசிரியர் திருச்சி வருகிறார். நீண்ட நாட்கள் ஆனதால் (இரண்டு மாதம் தான்) ஆசை, ஆசையாய் ஆசிரியரைப் பார்க்கப் போனார்கள். “அய்யா, நல்லா இருக்கீங்களா?”, என நாம் கேட்பதற்குள், அய்யா நம்மைப் பார்த்துக் கேட்டுவிடுவார். அன்றைய நாளில்தான் மும்பையில் இரண்டு நாட்கள் மாநாடு நடத்த வேண்டும், அதிலும் ‘மும்மொழி’யில் இருக்க வேண்டும், இந்தியத் தலைவர்கள் பலரையும் அழைக்க வேண்டும், தமிழ்நாட்டுத் தோழர்களையும் கொண்டு செல்ல வேண்டும் என ஆசிரியர் கூறினார்கள்.
நமக்கு ஒன்றுமே புரியவில்லை; வியப்பு, வியப்பு, வியப்பின் மேல் வியப்பு! சற்று உடல்நலன் குன்றி, சரியானதும் திருச்சி வந்து, அன்றே அந்தந்த தோழர்களுக்குத் தேவையான செய்திகளைப் பகிர்ந்து கொண்டு, மும்பை மாநாட்டுச் செய்தியையும் கூறினார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்! உடல் நலன் பாதிப்பு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை, அதனால் ஏற்படும் உடல் சோர்வு, பிறகு தேவைப்படும் ஓய்வு, மருந்து, மாத்திரைகள் எனத் தம்மைப்பற்றி சிந்திக்க ஆயிரம் இருக்கிறது.
ஆனால் சிறிது இடைவெளி கிடைத்ததும் பயணம் மேற்கொண்டு, தமிழ்நாட்டுத் தோழர்களைச் சந்தித்ததோடு, மும்பை மாநாடு, அது நடத்தப்பட வேண்டிய விதம் என அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்கிறார் என்றால், இவையனைத்தையும் ஆசிரியர் எப்போது சிந்தித்திருப்பார்? மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதா? வீட்டில் வலியோடு அமர்ந்திருந்த போதா? சென்னை – திருச்சியின் 5 மணி நேரப் பயணத்தின் போதா…. நம்மால் எதையுமே கணிக்க முடியவில்லை. கணிக்க முடியாததால் தான் ஆசிரியர் நமக்குத் தலைவராக இருக்கிறார்.
அன்று மாலையே மும்பைக்குத் தொடர்பு கொண்டு தோழர்களிடம் பேசுகிறோம். அவர்களுக்கு ஒரே வியப்பு! மும்பையில் மாநாடா? அதுவும் இரண்டு நாட்களா? மும்மொழியிலா? என விழிகளை விரிக்கிறார்கள். காரணம் இரண்டு. ஆசிரியர் உடல்நலன் சரியாகி தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணம் கூட பெரிதாகத் தொடங்கவில்லை, அப்படியிருக்க மும்பைக்கு வர இருக்கிறார்கள் என்கிற பெரும் மகிழ்ச்சி! அடுத்தது இரண்டு நாள் மாநாடு நடத்தக்கூடிய நல்வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இருந்து சற்றொப்ப 1300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது மும்பை. அங்கு 50, 100 பேர் கூட இல்லை. 10 தோழர்களே இருக்கிறார்கள். நமது இயக்கத்திற்கு எண்ணிக்கை முக்கியமில்லை; நாம் இயங்குவதற்கு வயதும் தடையில்லை! 10 தோழர்களே இருந்தாலும், பலநூறு மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.
எனவே இரண்டு நாள் மாநாடு, மும்மொழி மாநாடு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு என அனைத்தும் அவர்கள் மனதில் சட்டென்று பதிந்துவிட்டது. ஆசிரியர் தேதி அறிவிக்கட்டும்; காத்திருக்கிறோம் என்றார்கள்!
நாமும் காத்திருப்போம்!
(தொடரும்…)
