கீவ், ஜன. 10- உக்ரைன் மீதான போரில், ஒலியை விட பத்து மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய அதிநவீன ‘ஆரெஷ்னிக்’ (Oreshnik) ரக ஏவுகணையை ரஷ்யா மீண்டும் பயன்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (8.1.2026) இரவு தொடங்கி நேற்று (9.1.2026) அதிகாலை வரை நடத்தப்பட்ட இந்த சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக, கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனின் நீப்ரோ நகரில் முதன்முதலாக ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணையை ரஷ்யா ஏவியது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் வேகம்
இது ஒலியைப் போல 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடியது. தடுக்க முடியாதது: உலகின் எந்தவொரு நவீன வான்பாதுகாப்பு அமைப்பாலும் இந்த ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இது நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கக்கூடிய புதிய வகை ஏவுகணையாகும்.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள போலந்து நாட்டின் எல்லைக்கு அருகாமையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அய்ரோப்பிய நாடுகளின் இறையாண்மையைக் குலைக்கும் ஒரு பொறுப்பற்ற நடவடிக்கை என பல்வேறு நாட்டு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) என கருதப்பட்டது. ஆனால், இது ஒரு அதிநவீன நடுத்தர தொலைவு ஏவுகணை என்பதை ரஷ்யா பின்னர் உறுதிப்படுத்தியது.
