நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

24 மணி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு தீர்ப்பைத் தர முடியும் என்றால்,
அதே 24 மணி நேரத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி
கண்டனக் குரல் எழுப்பக்கூடிய ஆற்றல் கருஞ்சட்டைக்கு உண்டு!
நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!
திராவிடர் கழக சிறப்புக் கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரை

சென்னை, ஜன.9  24 மணி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு தீர்ப்பைத் தர முடியும் என்றால், அதே 24 மணி நேரத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி கண்டனக் குரல் எழுப்ப முடியும் என்ற ஓர் ஆற்றல் கருஞ்சட்டைக்கு உண்டு. நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றார் திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி.

Contents

கடந்த 11.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி  சிறப்புரை ஆற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

‘‘மத கலவரங்களுக்கு
உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா?’’

‘‘மத கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா?’’ என்கிற சட்டப்பூர்வ ஆய்வரங்கத்திற்குத் தொடக்க உரையாற்றிய திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களே, நிறைவாக சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், பகுத்தறிவு ரீதியாகவும், இந்த பிரச்சினைக் குறித்து விளக்கமாக உரையாற்றவிருக்கின்றற ஆசிரியர் அவர்களே, பதவியில் இருந்த போதும், இல்லாத நேரத்திலும் துணிச்சலாக மனதில் பட்டதைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற ஆற்றல்மிக்க நீதியரசர் என்கிற அந்தப் பெயருக்கு ஏற்றவாறு நடந்து கொண்டிருக்கிற, நடந்து கொண்டு வருகிற மரியாதைக்குரிய அரிபரந்தாமன் அவர்களே, திரளாகக் கூடியிருக்கின்ற தோழர்களே உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கருஞ்சட்டைக்கு உண்டு!

ஒரே நாளில், 24 மணி நேரத்திற்குள்ளாகவே மனுதாக்கல் செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு தீர்ப்பை உன்னால் தர முடியும் என்றால், அதே 24 மணி நேரத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி கண்டனக் குரல் எழுப்ப முடியும் என்ற ஓர் ஆற்றல் இந்தக் கருஞ்சட்டைக்கு உண்டு என்பதை நிரூபிக்கின்ற வகையில், நம்முடைய ஆசிரியர் அவர்கள், நேற்றைய தினம் முடிவெடுத்து, 24 மணி நேரத்தில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றால், இங்கே அரங்கத்திலே இருக்கின்றவர்கள் மட்டுமல்ல, இதை நம்மை விட உற்று நோக்கிக் கொண்டிருப்பவர்கள், பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், இந்த அரங்கத்திலே இருப்பவர்கள் குறைவாக இருந்தாலும், இதை கூர்ந்து கவனிக்கக்கூடிய ‘அவாளு’க்கு இங்கே என்ன நடக்கிறது என்பதை இந்நேரம் இங்கிருந்தே ஒளிபரப்பின் மூலமாக, உட்கார்ந்து, அயர்ந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த அரங்கத்தைப் பொறுத்தமட்டில் எனக்கு பின்னால் உரையாற்றவிருக்கின்ற, இரண்டு பேரும், சட்டரீதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய நிலைமைகள், நீதிமன்றங்கள், நீதிபதிகள் எவ்வாறெல்லாம் தங்களுடைய பணியை ஆற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்க இருக்கிறார்கள்.

மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!

இன்றைக்கு இந்தத் தீர்ப்பை வழங்கியவர்களுக்கு மட்டுமல்ல, ஒரு சிலவற்றை நியாயப்படுத்தி, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சிக்கலாமா? அல்லது அதற்குக் கட்டுப்படாமல் நடப்பது தவ றில்லையா? என்று பேசுபவர்கள் நம்மிலேயும் பலர் இருக்கிறார்கள்; அப்படிப்பட்டவர்களுக்கு நான் கடந்த கால வரலாற்று நிகழ்ச்சி ஒன்றிரெண்டை நினைவு கூர விரும்புகிறேன். நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை, நிரூ பித்து அதை தூள் தூளாக்கிய கட்சி திராவிட இயக்கம் என்பதை, கடந்த கால வரலாற்றை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

திராவிட இயக்கம் இல்லை என்று சொன்னால்…

குறிப்பாக அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து அந்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது. அப்படி வந்த அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளை பயன்படுத்திக் கொண்டு, இதே தமிழ்நாட்டிலே, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட கம்யூனல் ஜி.ஓ. – இந்தக் கம்யூனல் ஜி.ஓ. என்றால், என்ன என்பதை இன்றைய தலைமுறைக்குத் தெரிந்தால், இந்த இயக்கத்தைத் தவிர, வேறு எந்த இயக்கத்திலும் எவனும் கையெழுத்துப் போடக்கூடாது, நன்றி உள்ளவனாக இருந்தால்! காரணம், இந்த இயக்கம் இல்லை என்று சொன்னால், அரசாங்கத்திலே பணியாற்றுகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்குமா? நீதிக்கட்சி இல்லை என்றால் என்பதை, இன்றைய இளைய தலை முறைக்கு உணர்த்துவதற்கு இந்தத் தீர்ப்பு போன்ற தீர்ப்புகள் வந்ததால், விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. அதன் மூலமாக ஒரு எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்படி இந்த அரசு உத்தியோகப் பணிகளிலே இட ஒதுக்கீடு வந்தது என்பதற்குரிய வரலாறு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலே, பொப்பிலி அரசர் ஆட்சி காலத்திலே, இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்து போயிருக்கின்ற கர்நூலுக்குப் பக்கத்தில் ஒரு தாசில்தார் அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய போகின்ற நேரத்தில், 42 பேர் அந்த தாசில்தார் அலுவலத்தில் பணியாற்றினார்கள். இப்போது இருக்கின்ற மின்விசிறிகளைப் போல அந்தக் காலத்தில் இல்லையாம்; எங்கள் காலத்தில் எனக்கு தெரியும்; வில்லேஜ் முனிசிபல் ஆபீசில் ஃபங்கா தான் இருக்கும்; கிராம நகராட்சி அதிகாரி அமர்ந்து கொண்டிருப்பார். அதெல்லாம் இன்றைக்கு இருக்கின்ற தலைமுறையினருக்குத் தெரியாது. இதையெல்லாம் நாம் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்காத கார ணத்தினால், அவர்களுக்குத் தெரியாதவர்களிடம் போய் நிற்கிறார்கள்.

நீதிக்கட்சியின் வழித்தோன்றல்கள்தான் நாங்கள்!

அந்த 42 பேரில், 43 ஆவது ஆள் அந்த ஃபங்கா இழுக்கக்கூடியவன். அவன் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன். எஞ்சி இருக்கக்கூடிய 42 பேரும் குறிப்பிட்ட தாசில்தாருக்குச் சொந்தக்காரர்கள்; அவர் சார்ந்த பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அப்போது அங்கே ஆய்வுக்குச் சென்ற நீதிக்கட்சி அமைச்சர், எப்படி ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களை நியமிக்கின்ற அதிகாரம், தாசில்தாருக்குத்தான் இருக்கிறது. ஆகவே, அந்த தாசில்தார், 42 பேரையும் தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களை, தன்னு டைய ஜாதிக்காரர்களை ஏற்படுத்தி கொண்டார் என்ப தற்குப் பிறகுதான், சர்வீஸ் கமிஷன் என்ற ஒன்றை உருவாக்கி, அதில், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் பிரதிநிதித்துவம் வாங்கிக் கொடுத்த கட்சி, நீதிக்கட்சியாகும். அதனுடைய வழித்தோன்றல்கள்தான் இன்றைக்கு இருக்கிற நாங்கள் எல்லாம்.

1920–1921 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அந்த இட ஒதுக்கீடு, கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டவுடன், முதன் முதலில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருகிறது.

செண்பகம் துரைராஜ் வழக்கு!

செண்பகம் துரைராஜ் என்கிற ஒரு பார்ப்பனப் பெண்மணி. மருத்துவக் கல்லூரியில் அப்ளிகேஷன் போட்டதாகச் சொல்லுகிறார். ஆனால், அப்ளிகேஷன் போடவே இல்லை. அதைக் காரணம் காட்டி, பிற்ப டுத்தப்பட்டவர்களுக்கு, கம்யூனல் ஜி.ஓ. இருக்கின்ற காரணத்தினால், எனக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்கவில்லை; ஆகவே, இது அநீதி என்று ஒரு ரிட் பெட்டிஷனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள். Under Article 256. அதில், செண்பகம் துரைராஜ் சார்பாக ஆஜராகக் கூடியவர் அல்லாடி கிருஷ்ணசாமி என்கிற மூத்த வழக்குரைஞர். எதிர்த்து வாதாடக்கூடிய அரசு வழக்குரைஞர், வி.கே.திரு வேங்கடாச்சாரி. யார் அந்த அல்லாடி கிருஷ்ணசாமி என்று சொன்னால், Constitution Assembly இல் உறுப்பினராக இருந்தவர். அவரே அந்த செண்பகம் துரைராஜூக்கு வாதாடுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி கொடுத்திருக்கிற தீர்ப்பே இறுதியானது அல்ல என்பதை இன்றைக்கு ஆணவமாகப் பேசுகின்ற அந்த மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தந்தை பெரியாரும்,
பேரறிஞர் அண்ணாவும்!

சென்னை உயர்நீதிமன்றம், செண்பகம் துரை ராஜூவுக்குச் சாதகமாக தீர்ப்புக் கொடுத்தது. கம்யூனல் ஜி.ஓ. ஷட்டவுன் ஆகிறது.  1951 இல் நடக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்கிறார்கள். உச்சநீதிமன்றத்திலும் அந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. அந்த நேரத்திலேதான், தமிழ்நாட்டிலே மிகப்பெரிய கிளர்ச்சியை, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் செய்தனர்.

அன்றைக்கு அண்ணா அவர்கள் சொன்னது, ‘‘திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி’’ என்று சொன்னது, இந்த நேரத்தில்தான் சொன்னார். நல்ல வாய்ப்பாக, அன்றைக்கு தமிழ்நாட்டினுடைய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பச்சை தமிழர் என்று பெரியாரால் போற்றப்பட்ட பெருந்தலை வர் காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காரணத்தினால், ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பையே மாற்றுகின்ற வல்லமை, சக்தி, திராவிட இயக்கத்திற்கு, அந்தப் போராட்டத்திற்கு இருந்தது என்பதை எடுத்து வைப்பதற்காகச் சொல்லுகிறேன்

உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பையே
முறியடித்துக் காட்டுகிற வல்லமை உண்டு!

அந்தப் போராட்டம், தமிழ்நாடு முழுவதும் வெடித்த வுடன். பண்டித ஜவகர்லால் நேருவிடத்திலே, பெருந்தலைவர் காமராஜர் எடுத்துச் சொல்லி, அர சியலமைப்புச் சட்டத்தினுடைய முதல் திருத்தத்தையே கொண்டுவந்த பெருமை இந்தத் திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. ஆகவே, நீங்கள் தருகின்ற தீர்ப்பே, இறுதிவரையில் நிற்கும் என்று நினைக்காதீர்கள். இதுபோல் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பையே முறியடித்துக் காட்டுகிற வல்லமை இந்த மேடையில் இருக்கிற எங்களுக்கு உண்டு; இந்த மண்டபத்தில் இருக்கிற எங்களுக்கு உண்டு. இந்தத் திடலை இன்று உணர்ச்சிமயமாக உருவாக்கி, தமிழ்ச் சமுதாயத்திடம் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை தமிழர்களிடம் சொன்னால், நிச்சயமாக நீதிமன்றங்களில் கலவரம் ஆரம்பித்துவிடும். பல பேருக்கு, நமக்கே தெரியவில்லை. நம்மவர்களுக்கே புரியவில்லை. ஜி.ஆர்.சுவாமிநாதனை, தனிப்பட்ட முறையில், எங்களுக்கும், அவருக்கும் வாய்க்கால் தகராறா? எனக்கு 80 வயது ஆகிறது; ஆசிரியருக்கு 93 வயது ஆகிறது. அரிபரந்தாமன் அவர்களுக்கு 72 வயதாகிறது. அவரோடு தனிப்பட்ட தகராறுக்கு எந்தவிதமான காரணமும் கிடையாது.

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில்
உருளுவதற்குத் தயாரா?

ஆனால், அவர் தொடர்ந்து,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்த பிறகு, தொடர்ந்து இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கவேண்டும் என்ற ஒரு வைராக்கி யத்தோடு செயல்படுவாரேயானால், இதற்கு ஒரு வடிகால் வேண்டும்; அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இப்போது அவரே வெளியில் வந்து மாட்டிக் கொண்டார். இன்றைக்கு அவர் வழங்கிய தீர்ப்பிற்காக சில பேர் ஆதரிக்கிறார்கள். இன்றைக்குக்கூட எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்,  ‘‘நீதிமன்றத்தைப் பயமுறுத்துகிறார்கள்; நீதிமன்றத்தை மிரட்டுகிறார்கள்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று நம்மைக் கண்டிக்கின்ற எடப்பாடி பழனிசாமியை நோக்கி, ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். இதே நீதிபதிதான், கரூரில் ஒரு தீர்ப்பு சொன்னார். என்ன தீர்ப்பு அது?

‘‘பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு போன எச்சில் இலையில் உருண்டால், மோட்சத்துக்கு டிக்கெட் கிடைக்கும்’’ என்று சொன்னவர்தான் இதே நீதிபதி. நான் எடப்பாடியை நோக்கிக் கேட்கிறேன், உள்ளபடியே அந்தத் தீர்ப்பை நீங்கள் ஏற்று கொள்வதாக இருந்தால், எச்.ராஜா சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையில், எடப்பாடி உருளுவதற்குத் தயாரா என்று கேட்டால், அதில் என்ன தவறு இருக்கிறது. அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டவர், இந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா!

சட்டம் – ஒழுங்கு என்பது
மாநில பிரச்சினை

ஆகவே, இதுபோல ஒரு சில்லுண்டித்தனமாக, அது மட்டுமல்ல,  ஒரு உள்நோக்கத்தோடு, இரண்டு நாளைக்கு முன்பு ஒரு தாக்கீது விடுக்கிறார்; அதில் ஒன்றிய ஆட்சியின் உள்துறை செயலாளருக்கு அழைப்பு விடுக்கிறார்.  இது முழுக்க முழுக்க மாநில பிரச்சினை. சட்டம் – ஒழுங்கு என்பது மாநில பிரச்சினை. எல்லாமே மாநில பிரச்சினை.

வழக்குப் போடுகின்ற அதிகாரம்
PSO–க்களுக்குக் கிடையாது!

அவருக்கு அந்த உரிமையே கிடையாது; சென்ட்ரல் செக்யூரிட்டி போர்ஸ் என்பது, சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதி மன்றத்திலும் உள்ள நீதிபதிகளுடைய பாது காப்புக்காக வந்திருக்கின்றவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய வேலை, அதுதான். மிக அழகாக, நம்முடைய அரிபரந்தாமன் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஒன்றைச் சொன்னார். அமைச்சர்களுடன் PSO ஒருவர் வருவார்.  அவரும் காவல்துறையைச் சார்ந்தவர்தான். அவர் எதிரில் நீங்கள் சண்டை போட்டால், வழக்குப் போடுகின்ற அதிகாரம் அவருக்குக் கிடையாது. தன்னுடைய எல்லை எதுவோ, அதோடு நிற்கவேண்டும். முதலமைச்சரோடு வருகின்ற செக்யூரிட்டி ஆபீசர், அங்கே ஓர் அசம்பாவிதம் நடந்தால்கூட, அந்த PSO  சம்பந்தப்பட்டவரைக் கொண்டு போய், அங்கே இருக்கின்ற காவல் நிலை யத்தில்தான் ஒப்படைக்கவேண்டுமே தவிர, அவருக்கு வழக்குப் போடுகின்ற அதிகாரம் கிடையாது.  இது கூட தெரியாதவர், அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்றார் என்றால், நான் எப்படி சிரிப்பது என்று எனக்குத் தெரிய வில்லை.

காரணம், இவர்கள் இப்படி தீர்ப்பு கொடுத்தால், அது ஆண்டவனுடைய வாக்கு என்று கருதிக்கொண்டு, அதைப் பாராட்டி பேசுகின்ற முட்டாள்களும் நம்மில் பலர் இருக்கின்ற காரணத்தினால்தான், அவன் பேசுகிறான்.

2011 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில்
ஒரே ஒரு பார்ப்பனர் நீதிபதிதான்!

இங்கே படித்தார்களே, எத்தனை பேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்? என்று.  2011 இல், கலைஞர் அவர்கள் ஆட்சியை விட்டு கீழே இறங்குகின்றபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரே ஒரு பார்ப்பனர்தான் இருந்தார். இன்றைக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்? வழக்குரைஞர்களாக இருப்பவர்கள் சிந்திக்கிறார்களா, என்றால், இல்லை.

ஆகவே, இதையெல்லாம் கேட்கக்கூடிய தரு ணத்துக்கு நாம் தள்ளப்படுகிறோம். நமக்கும், அவருக்கும் தனிப்பட்ட தகராறு இ்லலை. அவர், ராஜ்பவனில் அமர்ந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். வகுப்பு எடுக்கிறார். போனாரா, இல்லையா? இல்லை என்று மறுக்கட்டும்!

ஆக, இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆசிரியர் அவர்கள் இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். நான் நிச்சயமாக சொல்கிறேன், எப்படி 1950 இல், அதோடு மட்டுமல்ல, இதே போல்தான் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ரூ.9,000 உச்சவரம்பு வந்த நேரத்திலே, நீதிமன்றத்திலே வழக்கு நடந்தது. அந்த வழக்கில், நமக்குப் பாதகமாகதான் தீர்ப்பு வந்தது. அப்படி இருந்தாலும், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த லில், அன்றைக்கு இருந்த முதலமைச்சர், இந்தச் சட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சரின் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்று போன காரணத்தி னால், அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தைக் கூட்டவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தீர்ப்பு கூறினார்கள்.

ஆயுதம் எடுக்கவேண்டிய அவசியம் பெரியாருக்கு இல்லை!

ஆக, மக்கள் மன்றத்தின் முன்னால், இது போன்ற போலித்தனமான, கேவலமான, சில்லுண்டித்தனமான தீர்ப்பு வருமேயானால், அதை முறியத்துக் காட்டுகிற வல்லமை, இந்த மேடையில் இருக்கக்கூடிய இயக்கங்க ளுக்கு உண்டு; என் முன்னால் அமர்ந்திருக்கக்கூடிய உங்களுக்கு உண்டு. இந்தப் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி, மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். தேர்தல் நெருங்குகின்ற போது, இதுபோன்று ஏதாவது செய்து செய்யலாம் என்று பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றைச் சொல்லுகிறேன், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இதே போல்தான், நடக்காத ஒரு சம்பவத்தை வைத்து, ‘‘பெரியார், ராமனை செருப்பால் அடித்தார்’’ என்று சொன்னார்கள். பெரியார், யாரையும் செருப்பால் அடிக்கமாட்டார். வார்த்தையாலேயே கொண்டு சாகடிக்கக்கூடிய சக்தி, பெரியாருக்கு உண்டு. அவர் ஆயுதத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தத் தேர்தலில், பெரியார் செருப்பாலடித்தார் என்று சொல்லி, அதைப் பெரிய ‘பூதாகரமாக’ ஆக்கினார்கள்.  திடீர் என்று ஒருத்தர் வந்தார்; அவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ராம்லீலா மைதானத்துக்கே கொண்டு போனார்கள்; ஆனால், தேர்தல் முடிவு என்னாயிற்று தெரியுமா? இதுவரை அந்த ரெக்கார்டை யாரும் உடைக்கவில்லை; 184 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆக, இது போன்ற எண்ணங்களை கொண்டுவந்து, தேர்தலுக்கு முன்பாக யாராவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். ஆகவே, அந்த நீதிபதியினுடைய முடிவுகள் எப்படி இருக்கும் என்ப தைப் பற்றி எனக்குப் பின் உரையாற்றக்கூடிய நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் தெளிவாகச் சொல்வார்.

நிச்சயமாக நாம் வெல்லுவோம்!

ஒரு பழமொழி சொல்வார்கள், ‘மங்கை சூதகமானால், கங்கைக்குப் போகலாம்; கங்கையே சூதகமானால் என்ன செய்வது?’’ என்பதுதான் அது. இப்போது மங்கை சூதகம் ஆயிட்டாள்; தெரிந்து போய்விட்டது. இப்போது கங்கையைத் தேடி நாம் போயிருக்கிறோம்.

நிச்சயமாக நாம் வெல்லுவோம் என்று சொல்லி, விடைபெறுகிறேன்.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *