மோடியை மறைமுகமாக கிண்டல் செய்கிறாரா டிரம்ப்
புதுடில்லி, ஜன. 8– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளதாகக் கிளம்பியுள்ள தகவல்கள் இந்திய அரசியலில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்பின் சர்ச்சை விமர்சனம்
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய டொனால்ட் டிரம்ப், சில தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூட திருமண ஊர்வலங்களில் அசிங்கமாக ஆடுவதைப் போல அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள் என்று கிண்டல் செய்துள்ளார். இது பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், “எனக்கு விருப்பமில்லாத நிலையிலும், மோடி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். முன்னாள் நண்பர் என்ற முறையில் அவரைச் சந்திக்க அனுமதி அளித்தேன்” என்று டிரம்ப் கூறியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2013 நிகழ்வு
அன்று மன்மோகன் சிங் செய்த அதிரடி: 2013-ம் ஆண்டு அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி (தேவயானி கோப்ரகடே) அவமானப்படுத்தப்பட்டார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், உடனடியாகச் செயல்பட்டு டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கான பாதுகாப்பைத் திரும்பப் பெற்றார். சில முக்கிய அமெரிக்க அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதோடு, அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் ரத்து செய்தார். இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து அமெரிக்கா மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
அன்றைய அரசு காட்டிய துணிச்சலை இன்றைய அரசு காட்டத் தவறுவது ஏன் என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரம் வரும் நாட்களில் இந்திய – அமெரிக்க உறவுகளில் பிரதிபலிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

