புதுடில்லி, ஜன. 7– தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் இதற்கெனத் தனிச் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், துணை தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அய்ந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வாக்குப்பதிவு மய்யங்களில் பணியாற்றும் பணியாளர்களின் தேவை.பாதுகாப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட வேண்டிய ஒன்றிய ஆயுதப்படை காவல் துறையினரின் எண்ணிக்கை தேர்தல் கால மேலாண்மை மற்றும் சட்டம், ஒழுங்கு பராமரிப்பு, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நிர்வாக ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
