24.04.2023
பெறுதல்:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
பொருள் : தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடக் கோருதல் தொடர்பாக:
தங்கள் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருவதோடு, மாநில உரிமைகளை பறிப்பது உள்ளிட்ட எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் நாசகார கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 12.4.2023 அன்று சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு கூட்டத்தொடரின் நிறைவு நாளில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநிலங்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான தொழிலை ஈர்க்கும் போட்டிகளை சாதகமாக்கிக் கொண்டு தொழில் தொடங்வதற்குப் பல நிறுவனங்கள் நேர்மையற்ற தொழிலாளர் விரோத நிபந்தனைகளைத் திணித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போதைய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தொழிலாளர்கள் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. ஏற்கெனவே, ஒன்றிய பாஜக அரசு தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து இத்தகைய சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற முயற்சித்தபோது, அனைத்து எதிர்க்கட்சிகளோடு திமுகவும் இணைந்து கடுமையாக எதிர்த்து குரலெழுப்பியதை கவனப்படுத்துகிறோம்.
உலகின் அனைத்து நாடுகளும் 8 மணி நேர வேலை என்பதை அங்கீகரித்துள்ளன. பல நாடுகளில் வேலை நேரம் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது. தொழில் நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்த சூழ்நிலையில் வேலை நேரத்தை குறைக்க வேண்டுமென்ற கருத்து உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளிநாட்டிலிருந்து வரும் நிறுவனங்கள் நம் நாட்டில் சட்டத்திற்குப் புறம்பான நிபந்தனைகளை விதித்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் குறைந்த காலத்திற்கு மாநில அரசுகள் தரும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இன்னும் கூடுதலான சலுகைகள் கிடைக்கும் இடங்களுக்கு மாறி விடுகின்றன. நோக்கியா, ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் இதற்கு உதாரணங்களாகும். தற்போதைய சட்டத்திருத்தம் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களிடமும் பெரும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் 100ஆவது ஆண்டு மே தினத்தை கொண்டாடும் சூழ்நிலையில் இச்சட்டத் திருத்தம் வந்திருப்பது மே தின பின்னணியையே நிராகரிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் உள்பட பல கட்டப் போராட்டங்களை நடத்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கு முற்றிலும் எதிராகவுள்ள இந்த சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டுமென நாங்கள் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம். முதல்கட்டமாக சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை நிறுத்தி வைப்பதோடு, சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இப்பிரச்சினையில் மக்கள் நலன் மற்றும் தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டுகிறோம்.
நன்றி.
இப்படிக்கு
கி.வீரமணி கே.எஸ். அழகிரி கே.பாலகிருஷ்ணன்
திராவிடர் கழகம் காங்கிரஸ் சி.பிஅய்(எம்)
ஆர். முத்தரசன் டி. இரவிக்குமார் எம்.பி. இரா.அந்திரிதாஸ்
சிபிஅய் விசிக மதிமுக
கே.ஏ.எம். முகமது அபுபக்கர்
முஸ்லீம் லீக்
எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.,
மநேமக
தி. வேல்முருகன் எம்.எல்.ஏ.
தமிழக வாழ்வுரிமை கட்சி
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (24.4.2023) மாலை 7 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதலமைச்சரிடம் இம் மனுவை வழங்கினார்.