ஆம்ஸ்டர்டாம், ஜன. 2- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நெதர்லாந்தில் 150 ஆண்டு பழைமையான ஆம்ஸ்டர்டாம் கிறிஸ்தவக் கோவிலில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த அக்கோவிலில் 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது திடீரென அதில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதில் 50 மீட்டர் உயர முற்றிலும் உருக்குலைந்தது. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாணவேடிக்கையின் போது நெதர்லாந்தின் பல இடங்களில் தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 16 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதோ ஒரு வீரத்தாய்
குழந்தையை காப்பாற்ற
கடலில் குதித்த துணிவு!
தாயின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அப்படி ஒரு பாசத்தை, கடலில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றியதன் மூலம் பெண் ஒருவர் நிரூபித்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கரீபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ‘கார்னிவல் சன்ரைஸ்’ என்ற சொகுசு கப்பலை பார்வையிட பெண் ஒருவர், தனது 4 வயது குழந்தையுடன் சென்றார். அப்போது தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த குழந்தை எதிர்பாராதவிதமாக கால் தவறி கடலில் விழுந்தது. அதனை பார்த்த அனைவரும் குழந்தையை எப்படி காப்பாற்றுவது என யோசித்து கொண்டிருந்தபோது சற்றும் யோசிக்காத குழந்தையின் தாய் கடலில் குதித்து தனது குழந்தையை காப்பாற்றினார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வருகிறது.
இதனை பார்த்த வலைதளவாசிகளில் ஒருவர், “எப்பேர்பட்ட ஆபத்திலும் நம்மை காப்பாற்றும் முதல் நபர் தாய்தான்” என்று தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.
