மராத்திய மாநிலத்தில் ஒரு மாநாடு!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

– வி.சி.வில்வம்

தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியார் கொள்கைகளைச் சிறப்பாகச்  செயல்படுத்தி வருவது மராத்திய மாநிலம். பெரியார் காலம் தொட்டே இந்தத் “தோழமை” தொடர்கிறது! இதுதொடர்பான முழு தகவல்களையும் “வடநாட்டில் பெரியார்” எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆவணமாக்கித் தந்துள்ளார்கள்.

இதில் மும்பைக்குக் கூடுதல் சிறப்புண்டு. பெரியார் அய்ந்து முறை, முறையே 1940, 1941, 1950, 1959, 1970 ஆகிய ஆண்டுகளில் மும்பை சென்றுள்ளார்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்!

இதில் பெரியார் – அம்பேத்கர் சந்திப்புகள், உரையா டல்கள், விருந்தோம்பல், ஒருங்கிணைந்த புரிதலோடு மாநாடுகளில் கலந்து கொள்ளுதல், கூட்டங்களில் தலைமைத் தாங்குதல், கடிதப் பரிமாற்றங்கள், நூல் உருவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இன்றைக்குப் பெரியார் வேறு; அம்பேத்கர் வேறு என்கிற பிரிவினையை ஏற்படுத்தி, பிளவுபடுத்த நினைக்கும் ஆரிய சூழ்ச்சிக்குப் பலியாகிறவர்கள் அறிய வேண்டிய செய்தி இது!

மும்பைக்கு 1940 ஆம் ஆண்டில் பெரியார் பயணம் செய்தபோது, வியக்கத்தக்க இரண்டு நிகழ்வுகள் நடந்தன. தாராவி பகுதியில் வசித்த தமிழர்கள் ‘பெரியார் வாழ்க’ என முழக்கமிட்டதுடன், ஹிந்தி ஒழிக எனவும் “தெறிக்க” விட்டுள்ளனர். இன்றைக்கு மும்பையில், “எங்களுக்கு ஹிந்தி வேண்டாம், மராத்தியே போதும்”, எனக் குரல்  கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அங்கே பொருளீட்ட சென்ற தமிழர்கள் அம்மாநில நலன் காத்திட 85 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் தலைமையில் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள் என்றால், நமது சுயமரியாதையின் வீச்சு எவ்வளவு உயர்ந்தது பாருங்கள்!

கட்டுரை

தலைமைக்குக் கட்டுப்படும் மும்பை!

1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் “திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நான்கே ஆண்டுகளில்  மும்பையில் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் பெரியாரின் முதல் பயணம் என்பது 1940 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அன்றைக்குப் பெரியார் காலம் தொடங்கி இன்றைக்கு ஆசிரியர் காலம் வரை, தலைமைக் கழகம் அறிவிக்கும் அத்தனைப் போராட்டங்களையும் உடனே செய்பவர்கள் மும்பைத் தோழர்கள். பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை 1953 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெரியார் அறிவித்தார். அதேநாளில் மும்பையில் பிள்ளையார் சிலையை   உடைக்க முயற்சி செய்து, காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட வரலாறுகள் எல்லாம் நம்மிடையே உண்டு!

பெரியார் மணியம்மை திருமணம் என்னும் ஏற்பாட்டின் போது, தமிழ்நாட்டைப் போலவே மும்பையிலும் திராவிட இயக்கத்தவர்களிடம்  சில சலசலப்புகள் எழுந்துள்ளன. ஆனால் மும்பைத் தோழர்கள் அதற்குரிய பதில்களை விளக்கியதுடன், பெரியாரின் தொலைநோக்குப் பார்வைக்கும் பலம் சேர்த்து, இயக்கத்தைப் பாதுகாத்து நின்றனர்! சற்றொப்ப 1300 கிலோமீட்டர் தூரத்தில் வசித்தாலும் பெரியாரின் நோக்கத்தை, தமிழ்நாட்டின் நலனைப் புரிந்து கொண்டு செயல்பட்டவர்கள் மும்பைத் தோழர்கள்! அதுமட்டுமின்றி 1952 ஆம் ஆண்டு பம்பாய் மாகாணத் திராவிடர் கழக 2 ஆவது மாநாட்டில் அன்னை மணியம்மையார் அவர்களைத் தலைமையேற்க வைத்து, தந்தை பெரியார் சிறப்புரை ஆற்ற ஏற்பாடு செய்திருந்தனர் தோழர்கள்.

செயலிலும் தீரர்கள்!

குடிஅரசு, திராவிடநாடு, விடுதலை உள்ளிட்ட திராவிட இயக்கப் பத்திரிகைகள் அனைத்தும் மும்பைக்குச் சென்றுள்ளன. அதற்கான முகவராக ஏ.பி.நெல்லையப்பா இருந்துள்ளார். மும்பையின் பல்வேறு இடங்களுக்கும் சென்று, வீடுகள் தோறும் இந்தப் பத்திரிகைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கு மகாராட்டிரா மாநிலத் தலைவராக இருக்கும் பெ.கணேசன், இளைஞராக இருந்தபோது இந்த விநியோகப் பணியைச் செய்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி மும்பையின் தாராவி, மட்டுங்கா, புனே உள்ளிட்ட பல பகுதிகளில் சுயமரியாதைத் திருமணங்களும் அந்தக் காலத்திலே நடைபெற்றுள்ளன. குறிப்பாகத் தாலி மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றுள்ளன. இந்தத் திருமணங்களை ஆர்.பி.அய். அமைப்பினர், பொதுவுடமைத் தோழர்கள், காங்கிரஸ் கட்சியினர், தொழிற்சங்கவாதிகள், மராத்தியர்கள் எனப் பெருந்திரள் மக்கள் வேடிக்கைப் பார்க்கவே அங்கு சென்றுள்ளனர்.

அதேபோன்று தமிழ்நாட்டில் சூட்டுவதைப் போலவே இனவுணர்வு, மொழியுணர்வு, காரணப் பெயர்கள், வரலாற்றுப் பெயர்கள், தத்துவத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி, அதற்கு விழாவும் எடுத்துள்ளார்கள். 1950 கால கட்டத்திலே மும்பைத் தெருக்களில் தமிழ் நூலகம் வந்துவிட்டது. இதுதவிர பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வை ஊட்டும் தமிழ்ப் பத்திரிகைகளும் வெளியாகத் தொடங்கிவிட்டன. சிறு, சிறு துண்டறிக்கைகளைத் தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கி தமிழர் வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் நடக்கத் தொடங்கி 80 ஆண்டுகள் ஆகிவிட்டது!

மதில் சுவர்கள்!

அந்தக் கோட்டையின் அடிப்படைக் கட்டுமானமாக, பாதுகாப்பு மதில் சுவர்களாக, மராத்திய மண்ணின் வேர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மானமிகு வாளர்கள் பொ.தொல்காப்பியன், எம்.மோசஸ், ஜோசப் ஜார்ஜ், பெ.மந்திரமூர்த்தி, திராவிடன், த.மு.ஆர்யசங்கரன், ஆர்.ஏ.சுப்பையா, சி.என்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.அன்பழகன், என்.ஏ.சோமசுந்தரம், வி.நடேசன், ஞா.இராவணன், எஸ்.இராசு, எஸ்.பெருமாள், ஏ.பி.நெல்லையா, சு.நெல்லையப்பா, மாரா.சு.இசக்கி, சி.வேலாயுதம், ம.தயாளன், பி.இரத்தினசாமி, மு.தருமராசன் போன்றோர்!

தமிழ்நாட்டில் என்னென்ன போராட்ட வடிவங்கள் உள்ளதோ அதில் பெரும்பான்மையை அவர்களும் செய்து வருகின்றனர். பொதுக் கூட்டங்கள், தெரு முனைக் கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், பயிற்சி வகுப்புகள், பாடல்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், நூல்கள் வெளியீடு என அனைத்தும் இதில் அடங்கும்!

மும்பையில் இத்தனை ஆண்டு காலமாக இயக்கம் நடத்துகிறார்கள் என்றால் மராத்திய மாநில மக்கள், அங்குள்ள பல்வேறு அமைப்பினர், சமூக, கலாச்சார இயக்கங்கள், அரசு அதிகாரிகள் எனப் பலதரப்பிலும்  நல்ல உறவுடன் இருந்து வருகின்றனர்.

மிகக் குறிப்பாகத் தாம் வாழும் மாநிலத்திற்குத் தீங்கு விளைவிக்காமலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும், பெரியார் இயக்கத்திற்கே உரிய கட்டுப்பாடுடன் செயலாற்றுகின்றனர்!

100 மகளிர்! 100 புத்தகங்கள்!

இப்படியான மகிழத்தக்க மராத்திய மாநிலத்தில் தான் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. சனிக்கிழமை (03.01.2026) மாலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு தொடங்க  இருக்கிறது. மாநாட்டுப் பேருரையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கவுள்ளார்கள். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்களை மகளிர் திறந்து வைக்கவுள்ளார்கள்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் அந்த மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக இயக்க வரலாற்றில் பெரும்பங்கு வகித்த மகளிரில் 54 பேர் நேர்காணல் செய்யப்பட்டு, “கொள்கை வீராங்கனைகள்” எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. அதன் நூல் அறிமுகமும் அம்மாநாட்டில் நிகழ இருக்கிறது. இந்நிகழ்வில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 100 மகளிர் 100 நூல்களை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள். ஆசிரியருடன் மும்பை மகளிர் 100 பேர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியும் அங்கே நடைபெற இருக்கிறது.

மும்மொழி மாநாடு!

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) ஆங்கிலம் மற்றும் மராத்திய மொழிகளில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வுகளில் மகாராட்டிர காங்கிரஸ் தலைவர்கள், பிற கட்சிப் பொறுப்பாளர்கள், அம்பேத்கரிய இயக்கங்களின் தலைவர்கள், சமூகநீதி அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உணவு இடைவேளையின் போது காணொலி காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நாட்கள், மூன்று மொழிகளில் நடைபெற இருக்கும் இந்த மாநாடுகளில் மும்பை திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மகளிர் இயக்கங்கள் மற்றும் இனவுணர்வு, மொழியுணர்வு கொண்ட பல்வேறு அமைப்புகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தொலைத்தூரத்தில் இருந்து வருகை தரும் தோழர்களுக்குப் பேருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து தொடர்வண்டி மற்றும் விமானத்தின் மூலம் 60 தோழர்கள் வரை கலந்து கொள்ள தயாராய் இருக்கின்றனர். மாநாடுகள் முடிந்து ஒருநாள் சுற்றுப்பயணமும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரலாறு பதிவு செய்யும்!

இப்படியான பல்வேறு பணிகளையும், கடந்த ஒரு மாதமாக மும்பைத் தோழர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்று செய்து வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்றைக்கு மாநாட்டுத் தேதியை அறிவித்தார்களோ, அந்த நிமிடம் முதல் இப்போது வரை, அவர்களின் உழைப்பு ஈடுஇணையற்றது. காரணம் மும்பை எனும் பெரு நகரத்தில் ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் வசிக்கிறார்கள். அனைவரும் ஓர் இடத்தில் சந்திக்கவே பல மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டும். அவற்றையெல்லாம் கடந்து, வழக்கம் போல தங்கள் முத்திரையைப் பதித்து, மேலுமொரு வரலாற்றுச் சாதனையை அவர்கள் படைக்க இருக்கிறார்கள்!

இந்தப் பணிகளில் சு.குமணராசன், பெ கணேசன், அ.இரவிச்சந்திரன், இ.அந்தோணி, பெரியார் பாலா, ஜெ.வில்சன், அ.கண்ணன், சிவ.நல்லசேகரன், க.வளர்மதி, த.நெல்லையா குமார் ந.சிற்றரசு, அ.அறச்செல்வன், சி.முத்துப்பாண்டி, இ.வனிதா, ம.சுமதி, காரை கரு.இரவீந்திரன், சங்கர் திராவிடர், அழகர் ராஜா உள்ளிட்டு மேலும் பல அமைப்புகளின் தோழர்களும் களத்தில் நிற்கின்றனர்!

மும்பை, பாண்டூப் பகுதியில், பிரைட் உயர்நிலைப் பள்ளியில், கல்வித் தந்தை தேவதாசன் அரங்கில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாடு மும்பை திராவிடர் கழகத்திற்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும் மேலும் ஒரு மைல்கல் என்பதை வரலாறு பதிவு செய்து கொள்ளும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *