கொல்கத்தா, டிச.29– நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் சொந்தத் தொகுதியின் பாவனிப்பூரில் மட்டும் 21.7 சதவீத வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா முதலமைச்சராக உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதியில் மம்தா போட்டியிட்டார். நந்திகிராம் மற்றும் பாவனிபூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் நந்தி கிராம் தொகுதியில் மம்தா தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் மம்தாவின் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுவேந்திர அதிகாரி பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை வீழ்த்த மம்தா களமிறங்கினார். ஆனால் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி 1 லட்சத்து 10 ஆயிரத்து 764 ஓட்டுகள் பெற்ற நிலையில் மம்தா 1 லட்சத்து 8 ஆயிரத்து 808 ஓட்டுகள் வாங்கி 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். அதேவேளையில் பாவனிபூர் சட்டமன்றத் தொகுதியில் மம்தா 85,263 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,428 ஓட்டுகள் மட்டுமே பெற்ற நிலையில் மம்தா 58,835 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டைப் போல் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் எஸ்.அய்.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்தது. நேற்று (28.12.2025) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மம்தா சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாவனிபூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 21.7 சதவீதம் பேரின் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 44,787 வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி மாதம் இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 295 என்ற அளவில் இருந்தது. தற்போது எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு பிறகு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 509 ஆக சரிந்துள்ளது.
இந்த தொகுதி மம்தாவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வென்று தான் முதல் முறையாக மம்தா முதலமைச்சர் ஆனார். அதன்பிறகு 2016 சட்டமன்ற தேர்தலிலும் மம்தா இங்கு தான் வாகை சூடினார்.
இப்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்ற நிலையில் பாவனிபூர் தான் அவருக்கு கைக்கொடுத்தது. இதனால் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மம்தா இங்கு தான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் பாவனிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 44,787 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
