காசியாபாத், டிச. 27- உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை பறைசாற்றும் விதமாக, காசியாபாத்தில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராணுவ வீரர்
இந்திய விமானப் படையில் பணியாற்றி, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றவர் யோகேஷ். இவர் காசியாபாத் பகுதியில் வசித்து வந்தார். நேற்று (டிசம்பர் 26) மதியம், அங்குள்ள உள்ளூர் சந்தையில் இருந்து தனது வீட்டிற்கு யோகேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் யோகேஷை வழிமறித்துள்ளனர். அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் யோகேஷின் தலையில் குறிவைத்துச் சுட்டனர். இதில் நிலைகுலைந்து விழுந்த யோகேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
காவல்துறை விசாரணை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், யோகேஷின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் ஏதேனும் உள்ளதா? அல்லது உடனடி ஆத்திரத்தில் நடந்ததா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஒரு வீரருக்கே, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இத்தகைய நிலை ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது என்றும், ராணுவ வீரர்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது” என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
