மத்தியபிரதேசம், டிச.24 மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, காவல்துறையினர் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் சவிதாவை குடும்பத்தினருடன் செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
உருவப் பொம்மைக்கு இறுதிச் சடங்கு
சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப் பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதிச் சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொலிகளை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்வி களை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சவிதாவின் சகோதரர் கூறும்போது, “எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல ஆண்டு வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச் சடங்கு” என தெரிவித்தார்.
