ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை உயர்த்திடுக! மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச.24 இதர பிற்படுத்தப்பட்டவர் கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு உயர்த்த நடவடிக்்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி. வில்சன் வலியுறுத்தினார்.

ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி சமூகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒன்றிய அரசால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வழக்குரைஞர் பி.வில்சன் பேசியதாவது:–

எட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எட்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டுவிட்டன. வாழ்க்கைச் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பணவீக்கமானது ரூபாயின் மதிப்பை சிதைத்துவிட்ட தோடு, பொருளாதார சூழ்நிலைகள் வியத்தகு அளவில் மாறிவிட்டன. இருப்பினும் ஓபிசி கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு எட்டு இலட்சம் என்கிற அளவிலேயே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.3,000 ஆக இருந்தபோது இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தங்கத்தின் இன்றைய மதிப்போ ஒரு கிராமுக்கு ரூ.12,000 எனும் அளவில் 400% அதிகரித்துள்ளது.

கிரீமிலேயர் உச்சவரம்பானது ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் இரண்டு முறை செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் செய்யப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு விட்டது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு புறந்தள்ளியது

தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையமானது இந்த உச்சவரம்பை உயர்த்திட பரிந்துரைத்த நிலையிலும், ஒன்றிய அரசாங்கமானது அதனை ஏற்றுக்கொள்ளாமல்புறந்தள்ளிவிட்டது.

ஒரு விண்ணப்பதாரரின் குடும்ப வருமானத்தைக் கணக்கிடும் போது, ஊதியத்தையும் சேர்த்துக் கணக்கிடும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் நடைமுறை பாகுபாடானதாகும்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டவிரோத நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி யுபிஎஸ்சி அமைப்பும் இதையே செய்கிறது.

1993 ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு முற்றிலும் எதிரானவை!

இத்தகைய நடைமுறைகள், சம்பள வருமானமும், விவசாய வருமானமும் கிரீமிலேயர் கணக்கீட்டில் சேர்க்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறும் 1993 ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு முற்றிலும் எதிரானவை.

இதன் காரணமாக, UPSC தேர்வுகள் மூலம் நடைபெறும் நியமனங்களிலும், கல்வி நிறுவனங் களிலும் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை பெற முயற்சிக்கும் விண்ணப்பதாரர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அரசாங்கமானது தனது கடமையை சரிவர செய்யாத நிலையில், விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவது கவலைக்குரியதாகும்.

கிரீமி லேயர் முறை சீரமைப்பதற்கான நாடாளுமன்றக் குழுவானது, 2019 ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில் இந்த நடைமுறையை கடுமையாகக் கண்டித்ததுடன், உடனடியாக அதை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய பல்கலைக்கழகங்களில்…

இத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. எட்டு ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத இந்த வரம்பு மற்றும் சட்டவிரோத நடைமுறையினால் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஓ.பி.சி. பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 80% காலியாகவே உள்ளது.

27% இடஒதுக்கீடு எங்கே போனது?

மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 2537 பேராசிரியர் பணியிடங்களில், 423 பணியிடங்கள் (16.67%) மட்டுமே ஓ.பி.சி. சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது?

21 IIT , 13 IIM களில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களின் படி, 21 IIT களில், வெறும் 11.2% பேராசிரியர்கள் மட்டுமே ஓபிசி சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதே போன்று 6% பேர் எஸ்.சி. சமூகத்தையும், 1.6% பேர் எஸ்.டி. சமூகத்தையும் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

13 IIM களில், இந்த விகிதம் இன்னும் குறைவாக இருக்கிறது. வெறும் 9.6% பேராசிரியர்கள் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 5% பேர் எஸ்.சி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், 1% பேர் எஸ்.டி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 2 IIT-களிலும் 3 IIM-களிலும், பேராசிரியர் பணியிடங்களில் 90%-க்கும் அதிகமானவை பொதுப் பிரிவினர் வசமே உள்ளது. 8 IIT க்கள் மற்றும் 7 IIM களில் 80% அதிகமான பேராசியர்கள் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இது IIM கல்வி நிறுவனமா அல்லது பொதுப் பிரிவினருக்கான பிரத்யேக மய்யமா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றிய அரசின் பணியாளர் நியமன முறையில் இந்த உச்சவரம்பின் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது.

தற்போதைய குரூப் A அதிகாரிகளில் 18.07% மட்டுமே ஓ.பி.சி. வகுப்பைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.

ஒன்றிய அரசின் முக்கியமான 90 உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளில், ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர்; அவர்களுக்கும் கூட ஒப்பீட்டளவில் குறைந்த முக்கியத்துவம் கொண்ட துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

பணியாளர் நியமன திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் 322 அதிகாரிகளில், 16 பேர் எஸ்.சி. வகுப்பையும்,, 13 பேர் எஸ்.டி. வகுப்பையும், 39 பேர் ஓபிசி வகுப்பையும் சார்ந்தவர்கள்.. மாறாக 254 பேர் உயர் ஜாதியினரைச் சேர்ந்தவர்கள்.

இப்படியான சூழ்நிலையில், ஒன்றிய அரசின் பணிகளுடைய நேர்முகத்தேர்வுகளின் போது, சரியான நபர் காணப்பட வில்லை என்ற பதத்தைப் பயன்படுத்தியோ அல்லது முறைகேடான ரோஸ்டர் முறையின் வழியாகவோ, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பைச் சார்ந்தவர்கள் அடிக்கடி திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றனர்.

இதுதான் சமூக நீதியா?

இந்தியா என்பது திறமையை மதிக்கும் நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சார்ந்தவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தருணத்திலேயே அந்தத் ‘திறமை’ என்ற அளவுகோல் செயலிழந்துவிடுவது போலவே தெரிகிறது.

2014 முதல் ஒவ்வொரு விஷயத்திற்கும் கால நீட்டிப்பு செய்யப்படுவதைத் தவிர எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமூகத்தின் நலன்களுக்காக எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை.

எனவே, அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களின் மூலம் ஓபிசி கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கான வருமான உச்சவரம்பினை உயர்த்திடவும், கிரீமிலேயர் கணக் கீட்டில் உள்ள பாகுபாடான நடைமுறைகளை நீக்கவும், காலியாக உள்ள பணியிடங்களை ஒதுக்கீட்டின் அடிப்படையில் உடனடியாக நிரப்பவும், ஓ.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி. சமூகத்தின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்றாற்போல இடஒதுக்கீட்டை உயர்த் திடவும், பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *