நெல்லை, டிச.23- வள்ளியூர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளம்பெண்கள் தயாராகி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீர தீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடந்து வந்தது. இளவட்டக் கல்லை அலேக்காக தூக்கி தோள்மேல் வைத்து பின்னோக்கி தூக்கி வீசும் வாலிபருக்கு, இளம் பெண்ணை மணம் முடிப்பது அந்தக் காலத்தில் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது.
இந்தக் கல்லுக்கு கல்யாணக் கல் என்ற பெயரும் உண்டு. இந்த கல் சுமார் 45, 60, 80, 90 மற்றும் 110 கிலோ என பல்வேறு எடை கொண்டதாக இருக்கும். உருண்டையாக, வழுவழுப்பாக எந்தவித பிடிப்பும் இருக்காது. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் அணைத்து, லேசாக எழுந்து முழங்காலுக்கு நகர்த்த வேண்டும். பின் னர் முழுவதும் நிமிர்ந்து நின்று கல்லை நெஞ்சுப்பகுதிக்குக் கொண்டுவந்து தோள் பட்டைக்கு நகர்த்தி சுமக்க வேண்டும்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள்
பின்னர் அதனை பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும். தற்போது இளவட்டக்கல் தூக்கும் பழக்கம் வழக்கம் மறந்து போனாலும், மறைந்து போகவில்லை.
இதற்குச் சான்றாகநெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டுப் போட்டி பொங்கல் விழா தோறும் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால் சற்று வித்தியா சம் உண்டு. அந்தக் காலத்தில் ஆண்கள் மட்டுமே இளவட்டக் கல்லை தூக்கிய நிலையில், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என பெண்களும் மல்லுக்கட்டுகிறார்கள்.
தீவிர பயிற்சி
தற்போது பொங்கல் விழா நெருங்கி வருவதால் இந்தக் கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் இளவட் டக் கல்லைத் தூக்கி சுமக்கும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்குமேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்தி வைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. வடலிவிளை பகுதியில் நடைபெ றும் இளவட்டக்கல் போட்டியைக் காண ஏராளமானோர் ஆண்டுதோறும் வருகிறார்கள்.
சாலை விதிகளை மீறுவோரைக் கட்டுப்படுத்த
சட்டை பொத்தானில் பொருத்தப்படும் நவீன கேமரா
காவல் துறையினர் நடவடிக்கை!
சென்னை, டிச. 23- போக்குவரத்து காவல் துறையினரின் நடவடிக்கை, வாகன ஓட்டிகளின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வசதியாக, வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல் துறையினருக்கு நவீன ‘பாடி வோன் கேமரா’ (Body worn camera) விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.
சாலை விதிகள்
போதையில் வாகனம் ஓட்டுவோர், அதிவேகமாக வாகனங்களை இயக்குவோர், வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் தடையை மீறி செல்வோர், ஒரே இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிச் செல்வது உட்பட பல்வேறு வகையான போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.
இந்த அபராதங்களை நேரடியாக களத்தில் நின்றும், ஆங்காங்கே உள்ள கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்தும் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் விதிக்கின்றனர். தற்போது, ‘ஏஅய்’ தொழில் நுட்பத்துடனும் அதிக திறன் கொண்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலமும் விதிமீறல் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
சட்டை பொத்தானில் நவீன கேமரா
இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத சாலைகளில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும்போது சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல நேரங்களில் தகராறு ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போக்குவரத்து காவல் துறையினருக்கு ‘பாடி வோன் கேமரா’ வழங்கப்பட்டது. இந்த கேமராக்களை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவல் துறையினர் தங்களது சீருடையில் நெஞ்சுப் பகுதியில் உள்ள சட்டை பட்டனில் மாட்டி வைத்துக் கொள்வார்கள்.
இதன் மூலம் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளின் உரையாடல்கள் அந்த பாடி ஒன் கேமராவில் தெளிவாக பதிவாகி விடும். யார் மீது தவறு உள்ளது என்றும் தெரிந்து விடும்.
ஆனால், இந்த கேமரா பயன்பாட்டில் இருக்கும் போது அதிகமாக சூடாவதாகவும், போதுமான நேரம் சார்ஜ் நிற்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதை போக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ‘பாடி வோன் கேமரா’ சென்னை போக்குவரத்து காவலில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது நாள்தோறும் 5 போக்குவரத்து உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒன்று வீதம் வழங்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது.இதில் பதிவாகும் நிகழ்வுகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க முடியும். மேலும், 2 நாட்கள் முழுமையாக சார்ஜ் நிற்கும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து போக்குவரத்து காவல் துறையினருக்கும் விரைவில் வழங்கப்பட உள்ளதாக காவல் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
