பெலகாவி, டிச.22 கருநாடகாவில் 13 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பிரபல சாமியாருக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெலகாவி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி கடத்தல்
கருநாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்வர் சுவாமி (30). இவர் ராய்பாக் பகுதியில் யாகங்கள் வளர்ப்பது, திருமணங்களை நடத்தி வைப்பது போன்ற புரோகித வேலைகளைச் செய்து வந்ததால், அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானவராக இருந்துள்ளார்.
கடந்த மே மாதம் 13-ஆம் தேதி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு லிஃப்ட் கொடுப்பதாகக் கூறி தனது காரில் ஏற்றியுள்ளார். ஆனால், சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு கடத்திச் சென்றுள்ளார்.
பாலியல் அத்துமீறல்
மந்திராலயத்தில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மே 14-ஆம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னரும் விடாமல், சிறுமியை மீண்டும் கருநாடகாவின் பாகல்கோட் பகுதிக்கு அழைத்து வந்து அங்கேயும் பாலியல் கொடுமை செய்துள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 15 அன்று மகாலிங்கபூர் பேருந்து நிலையத்தில் சிறுமியை இறக்கிவிட்ட அவர், “நடந்ததை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்” என மிரட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஏற்ெகனவே சிறுமி காணாமல் போனது குறித்துப் புகார் அளிக்கப்பட்டிருந்ததால், ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். விசாரணையில் சாமியாரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
கைது செய்து வழக்கு
கண்காணிப்பு கேமரா ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லோகேஷ்வர் சுவாமி மீது பெலகாவி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் 78ஆவணங்கள் ஆதாரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி சி.எம். புஷ்பலதா, குற்றங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி குற்றவாளிக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கி, அதனை வங்கி வைப்புத் தொகையாக வைக்க உத்தர விட்டார்.
தீர்ப்புக்கு பிறகு வெளியே வந்த சாமியார் காவல்துறை வாகனகத்தில் இருந்து தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசும் போது இது ஆன்மிகத்திற்கு நெருக்கடியான காலம் – விரைவில் தர்மம் வெல்லும் – மீண்டும் என்னுடைய ஆன்மிகப் பணியை தொடருவேன் என்று கூறியுள்ளார்.
