‘வந்தே மாதரம்’ தேசப் பற்றுப் பாடலா? அந்தத் தேசத்தில் முஸ்லிம்கள் இல்லையா?
முஸ்லிம்களை வெறுக்கும் ஒரு பாடல், தேசத்தின் பொது கீதமாக இருக்க முடியுமா?
காந்தியின் கருத்தும், தாகூரின் கருத்தும் இதுதான்!
புதுடில்லி, டிச. 22– “இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை வெறுக்கும்படியான கருத்தமைந்த ‘வந்தே மாதரம்’ பாடல், ஒரு நாட்டின் தேசிய கீதப் பாடலாக எப்படி இருக்க முடியும்’’ என்று மக்களவையில் ஆணித்தரமாகப் பேசினார் தி.மு.க கொறடா ஆ.இராசா.
அவரது உரை வருமாறு:
இந்த நாடாளுமன்றம் தனித்த விசித்திர மான ஒரு நிகழ்வை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசியல் வேறுபாடுகளை கடந்து, வந்தேமாதரம் பாடல் இசைக்கப்படும்போது நாம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறோம்; நம்முடைய ஒருமித்த ஒற்றுமையைக் காட்டுவதற்காக! நான் இந்த விவாதத்தை விசித்திர மானது என்று சொல்வதற்கு காரணம், நானறிந்த வரையில் டென்மார்க், நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு மட்டுமே இரண்டு தேசிய கீதங்கள் இருக்கிறதே தவிர, தேசிய கீதம் (National Anthem) என்றும் தேசிய பாடல் (National Song) என்றும் இரு வேறுபட்ட பெயர்களில் இருவேறு வரையறைகளுடன் ஒரு நாட்டுக்கு பாடல்கள் இருந்ததில்லை.
இந்த தேசத்தில் மட்டும்தான் ‘ஜனகனமன’ என்று தேசிய கீதமும், ‘வந்தேமாதரம்’ எனும் தேசிய பாடலும் இருக்கிறது. இதுதான் உலகில் எங்கும் இல்லாத விசித்திரம். நான் இணையத்திலும் ஆக்ஸ்போர்டு அகராதியிலும் கீதம் (anthem), பாட்டு (song) ஆகிய வார்த்தைகளுக்கு என்ன பொருள் விளக்கம் என்று தேடினேன். ஒரு பாட்டு, நாட்டோடு இணைக்கப்பட்டு அந்த நாட்டின் முக்கியத்துவத்திற்காக பாடப்படுமேயானால், அது தேசிய கீதம் (National Anthem), ‘இயற்றப்பட்ட வார்த்தைகளை கோர்த்து இசையோடு பாடுவது’ பாட்டு (song) என்று அதில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. கீதம் (Anthem) என்பதற்குக் கூடுதலாக அதில் சொல்லப்பட்டுள்ள விளக்கம் அது நாட்டு மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதாக அமையக்கூடாது என்பதாகும்.
இருவேறு கருத்துகள் இருக்க முடியாது!
எனவேதான் உயர்ந்த நோக்கத்தோடு நம்முடைய தலைவர்கள் தேசிய கீதம் என்றும், தேசிய பாடல் என்றும் கொண்டு வந்தார்கள். ஜாதியால், மதத்தால், மாநில எல்லை களால் பிரிந்து கிடக்கும் நம்மை ஒன்றிணைத்து நாம் எல்லோரும் ஒரு நாட்டின் பிள்ளைகள் என்று உணர்வதற்கு தேசிய கீதம் ஒன்று அவசியம் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நாட்டுப் பற்றைத் தொடர்ந்து ஊட்டுவதற்கு ஒரு தேசிய கீதம் அவசியம்தான்; ஆனாலும் தேசிய பாடல் என்று ஒன்று ஏன் தேவைப்பட்டது? இந்த இரு பாடல்களையும் இணையானதாகக் கொண்டு வரப்பட்டது எப்படி என்பதற்கு நிறைய கடிதப் போக்குவரத்து வரலாற்றில் ஆவணங்களாக உள்ளன. வந்தேமாதரம் பாடல் விடுதலைப் போராட்டத்திற்கு உணர்ச்சிமயமாக பயன்பட்டது என்பதை இங்கு யாரும் மறுக்க வில்லை. பிரதமர், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கவுரவ் கோகாய், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் திருமதி கக்கோலி கோஷ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய அனைவரும் ஒருமித்த குரலில் இப்போது பாடப்படும் வந்தேமாதரம் பாடலின் பெருமையை சிலாகித்துப் பேசினார்கள். அதற்காக தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்ட வந்தேமாதரம் பாடல் தோன்றிய விதத்தை கேள்விக்கு உள்ளாக்குவதில், விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை.
நாங்கள் எதிர்த் திசையில் பயணிக்கிறோம்!
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமரின் உரையை இந்த அவையில் பலமுறை நான் செவிமடுத்திருக்கிறேன். உண்மையில், பிரதமருக்கு சில வார்த்தைகளின்மீது ஈர்ப்புண்டு; அப்படிப்பட்ட சொற்களில் ஒன்று ‘தாஜா செய்தல்’ அல்லது ‘வலிய திருப்தி படுத்துதல்’ (appeasement). இந்த வார்த்தையில்லாமல் பிரதமர் பேசி முடித்ததில்லை. செங்கோட்டையாக இருந்தாலும், கட்சி மேடை யாக இருந்தாலும் வார்த்தை, குரல், சொல்லாடல் எல்லாம் “தாஜாய்’. அதற்கு அடுத்த வார்த்தை, அவருக்குப் பிடித்தது ‘வாரிசு அரசியல்’ (Nepotism). அவருக்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால், ‘வந்தேமாதரம்’ பாடலுக்காக அவர் யாரை திருப்திபடுத்துகிறார்? எனக்கும்கூட அந்த வார்த்தை பிடிக்கும். ஆனால், இந்த பாடலை பொறுத்தவரை நாங்கள் எதிர் திசையில் பயணிக்கிறோம்.
அவரது உரையிலிருந்து நான்கு கேள்விகள்!
‘வந்தே மாதரம்’ 1870ஆம் ஆண்டு மதிப்பிற்குரிய பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட பாடல், தேசியப் பாடலாக 1950இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்பாடல் மறைமுகமான உருவ வழிபாட்டுக்காகவும், மத வெறுப்புக்கும், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளான பாடலும்கூட. நம் எல்லோரிடமும், அவரவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநிலம் குறித்த பாசம் இருக்கத்தான் வேண்டும். அதற்காக, வரலாற்று உண்மைகளை மறைத்துவிட்டு, நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. நல்லவேளையாக, பாடலை எழுதிய பக்கிம் சந்திர சாட்டர்ஜி இந்த பாடலின்மீது அரசியல் சர்ச்சைகள் வந்தபோது உயிரோடு இல்லை. எனவே, இந்த அவையில் அவர்மீதும், பாடலின்மீதும் வைக்கப்படும் விமர்சனத்திற்கு அவரிடம் விளக்கம் கேட்க முடியாது.
வந்தேமாதரம் பாடலுக்காக இந்தியஅரசு அஞ்சல் தலை வெளியிட்டபோது, பிரதமர் ஆற்றிய உரையில் இருந்து சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். “வந்தேமாதரம் பாடல் இடம் பெற்றுள்ள ‘ஆனந்தமடம்’ என்ற நாவலில் இந்த பாடலை ஒருவர் பாடும்போது, மற்றவர்கள் உணர்ச்சி பெறுகின்றனர். அன்றைக்கு அவர்கள் பெற்ற உணர்ச்சி இன்று 140 கோடி மக்களின் உள்ளங்களில் உள்ள உணர்ச்சி” என்று குறிப்பிட்டுவிட்டு, அந்த பாடலில் இரண்டு பத்திகளை வெட்டி எடுத்துவிட்டதாகவும் அதுதான் பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் என்றும் பிரதமர் பேசியிருக்கிறார். அவரது உரையிலிருந்து நான்கு கேள்விகளை நான் இங்கு எழுப்ப விரும்புகிறேன்.
1) வந்தேமாதரம் பாடலின் இரண்டு பத்திகளை எடுத்தது யார்? அவ்வாறு எடுக்கப்பட்டதுதான் நாட்டு பிரிவினைக்கு வித்திட்டதா?
2) பாடலின் இரண்டு பத்திகளை நீக்கியதில், ‘கொடூரம்’ இருந்தது என்று பிரதமர் சொல்கின்றாரே, அந்தக் ‘கொடூரம்’ எது?
3) ‘இன்றும் அந்த பிரிவினை எண்ணம் சிலரால் தொடர்கி றது’ என்று பிரதமர் அங்கு பேசியிருக்கிறார். உண்மையெனில், அந்த சிலர் யார்?
4) பிரதமர் தன் உரையில், ‘வந்தேமாதரம்’ பாடலின் உண்மைக் கனவு’ தோற்கடிக்கப்பட்டது என்று குறிப்பிடு கிறாரே, அந்த உண்மைக் கனவு எது?
இந்த கேள்விகள் பிரதமரின் உரையையொட்டி என் சிந்தனையில் எழுந்தன.
இந்த அரசு, இன்றும் காந்தியை தேசப்பிதா என்று போற்று வது மாதிரி காட்டிக்கொள்கிறது என்பதால், நான் காந்தியிடம் இருந்து தொடங்குகிறேன். உண்மையில், ஆளுங்கட்சிக்கு காந்தி பெயர் சில நேரங்களில் வெறுப்பிற்கு உரிய ஒன்று. 1915 இல் காந்தி வந்தேமாதரப் பாடலை புகழ்வதோடு மட்டுமல்ல, பாடலை எழுதியவரையும் பாராட்டியதுடன் ‘வந்தேமாதரம்’ பாடல் பாடப்படும்போது, அதன் அழகான வரிகளில் நம்மை நாமே இழந்துவிடுகிறோம். இந்தியத் தாய்க்கு நாம் எவ்வளவு உயரிய பெருமைகளை செய்ய முடியுமோ, அதனை இப்பாடலில் தந்துள்ளார்” என்றார் காந்தி.
இந்தப் பெருமையை காந்தி வழங்கிய ஆண்டு 1915. ஆனால், 25 ஆண்டுகள் கழித்து 1940 இல் காந்தி வேறு விதமான கருத்திற்கு வந்தார். “வந்தேமாதரம்” பாடல் மீது உள்ள விமர்சனம் மதம் பற்றிய கூச்சல் அல்ல; அரசியல் கூச்சல். அது இசுலாமியர்களை அவமதிப்பதாக இருப்பதால் பாடப்பட முடியாததாகிவிட்டது” என்பது காந்தியின் பிந்தைய கருத்து.
புதிர்கள் வெளியே வரும்!
1915–க்கும் 1940–க்கும் இடையில் என்ன நடந்தது? 1915 இல் இப்பாடலை எழுதியவரை பாராட்ட காரணமாக இருந்த காரணிகள் என்ன? 1940 இல் அவர், இப்பாடல் பாடப்பட வேண்டியதல்ல என்று முடிவுக்கு வரக் காரணமாக இருந்த சம்பவங்கள் என்ன? இந்த காரணங்களையும், சம்பவங்களையும் இணைத்தும், பொருத்தியும் பார்த்தால் இந்தப் பாடலை சுற்றி இருக்கும் புதிர்கள் வெளியில் வரும்!
1902 இல் வங்காளத்தில் ‘அனுசுலான் சுமிதி’ என்ற ஒரு தீவிரவாத அமைப்பு, சுதந்திரப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி நடத்த வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. இதுபோன்ற அமைப்புகள் ‘பிப்ளாபிஸ் (BIPLABIS) என்ற பெயரில் இயங்கின. இந்த வந்தேமாதரப் பாடலை பிரபலப்படுத்தியது, இந்த அமைப்புகளே. இரகசியமாக இயங்கும் இந்த இயக்கத்தை ஆங்கில அரசு உளவுத்துறை மூலம் துப்ப றிந்து விவரங்களை சேகரித்தபோது, இந்த அமைப்பில் இசுலாமியர்களை சேர்த்துக்கொள்வதில்லை என்ற செய்தி தெரிய வந்தது. இதுகுறித்து அரசு விசாரித்தபோது, “இந்த அமைப்பில் சேரும்போது இந்து மதத்தின் புனிதங்களை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்த பிறகுதான் சேர்க்கப்படுகிறார்கள்; அதனால் இசுலாமியர்களுக்கு இதில் இடமில்லை என்ற செய்தியும் தெரிய வந்தது. போராட்டம் நாட்டுக்கானது என்றாலும், பாடப்படும் பாடல் வந்தேமாதரம் என்றாலும், இசுலாமியர்கள்விலக்கி வைக்கப்பட்டதிலிருந்து ‘மதவாதம்’ முளைவிட்டது. இந்த தேசத்தில், அப்போது முதல் வந்தேமாதரம் பாடல் இந்துக்களுக்கு மட்டுமானது என்ற எண்ணம் துவங்கியது.
மனக்கசப்பை தோற்றுவித்தது!
அதுமட்டுமல்ல, இசுலாமியர்கள் தொழுகையில் இருக்கும்போதே, அந்தவழியாகச் சென்ற இந்து அமைப்பினர் வேண்டுமென்றே வந்தேமாதரம் பாடலை சப்தமிட்டு பாடிக் கொண்டே ஊர்வலமாக சென்றுள்ளனர். இச்செயல் இரு மதப் பிரிவினர் இடையே மனக் கசப்பை தோற்றுவித்தது. இவையெல்லாம் ஆவணங்களாக கொடுக்கப்பட்டு இப்போது ஆவணக் காப்பகத்தில் உள்ளது. மீண்டும் 1907 இல் இசுலாமியர்கள் வந்தேமாதரம் பாடலை பாடக்கூடாது என்று காவி வண்ணத்தில் உள்ள காகிதங்களை அச்சிட்டு வழங்கியதோடு, சுதேசி இயக்கத்தில் இசுலாமியர்களை சேர்க்க மறுத்தனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் 1905லிருந்து 1915 வரை படிப்படியாக அதிகமாகிக் கொண்டே வந்தன. வங்காளம் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இந்நிகழ்வுகள் தீவிரம் அடைந்ததால் 1907 ஜூலை 16ஆம் தேதி இப்பிரச்சினை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவா திக்கப்பட்டது. அதையொட்டி அரவிந்த் கோஷ், இந்து-முஸ்லீம் ஒற்றுமைதான் தேச விடுதலைக்கு அவசியம் என்று வேண்டுகோள் விடுத்தார். என்றாலும், சச்சரவுகள் நீடித்தன;
அதையொட்டி இந்து-முஸ்லீம் பிளவு வரத் தொடங்கியது. இந்தப் பாடலை இசுலாமியர்கள் பாடக் கூடாது என்று மட்டுமல்ல, சுதேசி இயக்கத்தில் இசுலாமியருக்கு இட மில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. பிரிவினை அப்போதே தொடங்கிவிட்டது. ஆனால், பிரதமர் கேட்கிறார் வந்தேமாதரப் பாடலை சிதைத்தது யார்? என்று. பாடலை அல்ல, தேச பாடலால் ஒற்றுமையை சிதைத்தது உங்கள் முன்னோர்கள்தான்; இசுலாமியர்கள் அல்ல! (கூச்சல்… குறுக்கீடுகள்). இப்படிப்பட்ட நிகழ்வுகள் வங்காளத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கும் பரவிய நேரத்தில், பாடலை எழுதிய பக்கிங் சந்திர சாட்டர்ஜி குறித்தும், அவர் எழுதிய பிற நூல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அபத்தமானவை மட்டுமல்ல; அவதூறானவை!
அவர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவல் உள்ளிட்ட அவரது நூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நாவலில்தான் பின்னாளில் இந்த வந்தேமாதரம் பாடல் நுழைக்கப்பட்டது. சாட்டர்ஜி எழுதிய எல்லா நூல்களையும் ஆய்வு செய்த டேனிகா சர்க்கார் என்ற வரலாற்று ஆய்வாளர், இந்த நாவலில் இடம்பெற்றுள்ள உரையாடல்கள்மீது விமர்சனங்களை வைத்துள்ளார். அந்த உரையாடல்கள் அபத்த மானவை மட்டுமல்ல, அவதூறானவை.
நான் அந்த வாக்கியங்களை இங்கு படிக்க விரும்புகிறேன். ஒரு உரையாடலில், “இந்த விபச்சாரிகளின் மக்களை விரட்டாவிட்டால், இந்துக்கள் அழிந்துவிடுவார்கள்’ என்று வருகிறது. யார் அந்த விரட்டப்பட வேண்டியவர்கள் என்று வெளிப்படையாக சொல்லப்படாவிட்டாலும், அது யாரைக் குறிக்கிறது என்பதை நாமே புரிந்து கொள்ளலாம். “நாம் எப்போது இந்த மசூதிகளை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்டப் போகிறோம்” என்று அந்த உரையாடல் தொடர்கி றது. இதுமட்டுமல்ல, அப்போது நடைபெற்ற நவாப்களின் ஆட்சிக்கு எதிராக சில வசனங்கள் அதில் உள்ளன. “நாம் மதத்தை இழந்தோம்; ஜாதியை இழந்தோம்; குடும்பப் பெருமையை, சமூக அந்தஸ்தை இழந்தோம்; இப்போது வாழ்க்கையையே தொலைக்கப் போகிறோம்; இந்த அருவறுப்பான மனிதர்களை வெளியேற்றாமல், நாம் எப்படி இந்து தத்துவத்தை நிலைநிறுத்த முடியும்? என்று இன்னொரு உரையாடல் தொடர்கிறது. இப்படிப்பட்ட புத்தகங்கள் சாட்டர்ஜியால் எழுதப்பட்டு இருந்தன. எனவே, அவைகள் சமூகத்தின் பிளவுக்குப் பயன்படுத்தப்பட்டன. இன்னொரு சம்பவத்தை இந்த அவையில் பகிர விரும்புகிறேன். வங்காளத்தில் ஈசுவர சந்திர வித்யாசாகர் என்பவர் பெண் உரிமைக்காக பாடுபட்டார்.
அவைத்தலைவர் அவர்கள் அறிந்திருக்கக் கூடும். அவர் பெண் விடுதலை, பெண் கல்வி, கைம்பெண் மறுமணம் ஆகியவற்றிற்காகப் போராடியவர். அவர் அதற்காக போராட்டம் நடத்தி, 20,000 கையெழுத்துக்களை பெற்று வங்காள ஆளுநரிடம் மனு ஒன்றினை அளித்தார். உரிய சட்டம் வரவேண்டும் என்பதற்காக! அதை எதிர்த்து 28,000 கையெழுத்துக்களை பெற்று இந்து மதத்தின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்று எதிர்மனு கொடுத்தவர் வந்தேமாதரம் பாடலாசிரியர் சாட்டர்ஜி. எனவே, இந்த வெட்டப்பட்ட பாடல் வரிகள் ஆங்கிலேயருக்கு எதிராக மட்டுமல்ல; இசுலாமியருக்கும் எதிரானதுதான். நாடறிந்த பொதுவுடைமை சிந்தனையாளர் மஜிம்தார் “சுதந்திரப் போராட்டத்தில் தியாகத்தை மதமாகவும், மதத்தை தியாகமாக வும் பார்த்த தவறை செய்தவர் பக்கிங் சந்திர சாட்டர்ஜி” என்று அறுதியிட்டுக் கூறினார்.
இன்று, நீங்கள் வந்தேமாதரம் பாடலை பிரேத பரி சோதனை செய்து கொண்டே இருக்கிறீர்கள். இந்த பாடலால் எழுந்த எழுச்சியை மட்டுமல்ல, வரலாற்றில் நிகழ்ந்த மற்ற சம்பவங்களையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது நடைபெற்ற சம்பவங்கள் எப்படி மதப் பிரிவினையை தூண்டின என்பதை விளக்குகிறேன்.
வெளிப்படையான ஓலங்கள்
கேட்கத் தொடங்கின!
1937 இல் நாட்டில் மதக்கலவரம் உக்கிரமடைந்து, உச்சம் தொட்ட நேரத்தில் வெளிப்படையான ஓலங்கள் கேட்கத் தொடங்கின. காங்கிரஸ் கட்சி அதுகுறித்து கவலைப்பட வேண்டியதாயிற்று. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் சார்பில் நேரு அறிக்கை ஒன்றை அளித்தார். அதில் “காங்கிரஸ் கட்சியில் கணிசமான அளவில் இசுலாமியர்கள் உள்ளனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். மூத்த, திறமையான தேசிய இஸ்லாமிய தலைவர்கள் பலர் காங்கிரசில் உள்ளனர். இசுலாமியர்களை நாம் நீண்டநாட்களாக அலட்சியப்படுத்தி வருகிறோம் என்பதை நாம் உணர வேண்டியதுடன், அதற்கான சரியான அணுகுமுறையை மேற்கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டும்” என்று குறிப்பிட்டார். நேருவின் செய்தி ‘நிலைமையை சரி செய்ய வேண்டும்’ என்பது. அதன்படி, ‘சரி செய்ய முடிவும்’ எடுக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான மாதம். அந்த மாதத்தில் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் தாண்டி மதநல்லிணக்கமும் ஜனநாயகமும் உறுதி செய்யப்பட்டது.
இந்தப் பிரச்சினையில்
இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
அப்போது, நேரு, சுபாஷ்சந்திர போசுக்கு எழுதிய கடிதத்தில் “வந்தேமாதரம் குறித்த சர்ச்சையும் வெளிப்படையான கூச்சலும் பிளவுவாதிகளால் உருவாக்கப்பட்டவை என்றாலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி, அவைகளுக்கு நாம் இடம்தர முடியாது” என்று எழுதினார். முதன்முதலாக இப்பாடல் குறித்து காங்கிரசில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சுபாஷ்சந்திர போசுக்கு எழுதப்பட்ட கடிதம் (கூச்சல்… போஸ் என்ன சொன்னார் என்று கூச்சல்). அவசரப்படாதீர்கள். நான் அதற்கும் வருகிறேன். சுபாஷ்சந்திர போஸ் வந்தேமாதரம் பாடலை ஆதரித்தார்; கவலைப்படாதீர்கள். நான் அதை மறுக்கவில்லை. நேரு, சுபாஷ்சந்திர போசை ரவீந்திரநாத் தாகூருடன் பேசுமாறு பணித்தார்.
சர்தார் வல்லபாய் படேலும், ராஜேந்திர பிரசாத்தும்கூட வந்தேமாதரம் பாடலை என்ன செய்யலாம் என்று தாகூருக்கு எழுதி விளக்கம் கேட்டனர். ஏன், தாகூருக்கு இந்தப் பிரச்சி னையில் இவ்வளவு முக்கியத்துவம்? என்னுடைய அருமை நண்பர் காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் இங்கே பாடினாரே தாகூரின் கீதாஞ்சலி!
“எங்கே மனம் அச்சமற்று தலை செம்மாந்து நிமிர்கிறதோ-
எங்கே அறிவு விடுதலை பெற்று விளங்குகிறதோ-
எங்கே ஜாதி மதப் பிளவுகளால் உலகம் உடையாமல்
ஒன்றுபட்டு நிற்கிறதோ-
எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து சொற்கள்
வெளிப்படுகின்றவனவோ-
எங்கே பகுத்தறிவு வெள்ளம் மூடநம்பிக்கை என்னும்
பாலைவனத்தில் வீழ்ந்து பாழ்படாமல் இருக்கிறதோ –
எங்கே விடாமுயற்சியின் கரங்கள் இலட்சியத்தை நிறைவு செய்கிறதோ-
அங்கிருந்து என் அன்னை நாடு விழித்தெழட்டும்!
என்று தாகூர் பாடினார் அந்தப் பாடலில். அந்த தாகூர் மீதுதான் இத்தனை அழுத்தம்.ஏன்? அவர்தான் 1896 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வந்தேமாதரம் பாடலை முதன்முதலாக இசை அமைத்து பாடினார். அதனால்தான் நேரு, பட்டேல், போஸ், ராஜேந்திரபிரசாத் இத்தனை பேரும் தாகூருக்கு எழுதினார்கள்.
இதுதான் நடைபெற்ற வரலாறு!
இதற்கிடையே காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. செயற்குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு ஆறு நாட்களே இருந்தபோது, அக்டோபர் 20ஆம் தேதியன்று நேரு, சுபாஷ்சந்திர போசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் “ஆனந்த மடம் நாவலின் ஆங்கிலப் பிரதியை நான் படிக்கும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றேன். அந்த நாவலின் பின்புலத்தையும் உரையாடல்களையும் படித்தால் அது இசுலாமியர்களை எரிச்சலுக்கு உட்படுத்துவதாகத்தான் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதான் நடைபெற்ற வரலாறு. எனவே, வந்தேமாதரம் பாடல் பிரச்சினை எல்லோ ராலும் தாகூரிடம் தள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்தது? இந்தப் பாடல் குறித்து ஆய்வு செய்ய ஒரு துணைக்குழு அமைக்கப்பட்டது. யார் யாரெல்லாம் அந்த குழுவில் இடம் பெற்றார்கள்? அபுல்கலாம் ஆசாத், பண்டித நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றம் நரேந்திரதேவ் இவர்கள் எல்லாம் உறுப்பினர்கள். தாகூர் ஒருங்கிணைப்பாளர். எனவே, தாகூரிடம்தான் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.
தாகூர் என்ன பதிவு செய்தார்? “நான்தான் முதன்முதலில் வந்தேமாதரம் பாடலை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் 1896ஆம் ஆண்டு இசை அமைத்துப் பாடினேன். வந்தே மாதரம் பாடலை அதன் பின்புலத்தோடு முழுமையாக படித்தால் பக்கிங் சந்திர சாட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் பாடல் இசுலாமியர்களை காயப்படுத்துகிறது என்பது உண்மைதான்! பாடலின் சில பத்திகளில் கவிதை அழகும், நயமும் தெரிந்தாலும், அதை பொது இடங்களில், நிகழ்ச்சி களில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று பதிவு செய்தார்.
இந்த நிகழ்வுகளைச் சங்கிலித் தொடராக இணைத்துப் பாருங்கள்; அப்போது தெரியும் யார் இந்த பாடலால் பயன் பெற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் என்று! 1937 மார்ச் மாதம் முகமதுஅலி ஜின்னா காந்திக்கு கடிதத்தில் “வந்தேமாதரம் பாடலின் சில வரிகளை நீக்கிவிட்டாலும், அல்லது முழுமையாக அப்படியே வைத்துக் கொண்டாலும் முஸ்லிம் லீக், அந்தப் பாடலை முற்றாக புறக்கணிக்கிறது, ஏற்க மாட்டோம்” என்று எழுதினார். ஆனால், பிரதமர் மோடியோ, இசுலாமியர்களை ‘தாஜா’ செய்யவும், திருப்திபடுத்தவும் வந்தேமாதரம் பாடல் வெட்டப்பட்டது என்கிறார்.
இசுலாமியர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை!
ஆனால், இசுலாமியர்களோ, அப்பாடலை ஏற்றுக் கொள்ளவே இல்லை . சில வரிகளை மட்டுமே வெட்டிவிட்ட இப்பாடலை ஏற்றுக் கொண்டதால் உண்மையில் திருப்தி அடைந்தது இந்துக்கள்தான். 1939, ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவின்படி, முழுமையான பாடலை பாட அனுமதிக்க முடியாது என்று செய்த பரிந்துரை, காந்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முழு பாடலை பொது நிகழ்ச்சியில் பாடக்கூடாது என்று காந்தி முடிவெடுத்தார். இதுதான் நடந்த வரலாறு! அதற்குப் பிறகுதான், விடுதலை பெற்ற இந்தியாவில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அரசியல் நிர்ணய சபையில், நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து இப்போதைய வந்தேமாதரம் பாடல் வரிகள் தேசிய பாடலாக (National Song) ஏற்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வுகளும் உண்மைகளும் இவ்வாறிருக்க, பிரதமர் மோடி முழு வந்தேமாதரம் பாடலின் கனவை சிதைத்து விட்டதாக கதறுகிறார். வந்தேமாதரம் பாடலின் கனவு என்னவென்று விளக்கவுரை தருகின்ற அளவிற்கு ’நான் தகுதி உடையவன் அல்ல’ என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்த அவையில் இந்த அரசின் நடத்தையை கடந்த 11 ஆண்டுகளாக கவனிப்பன் என்ற முறையில், பிரதமர் குறிப்பிடும் வந்தேமாதர பாடலின் கனவு எது என்பதை, என்னால் உணர முடிகிறது . இசுலாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கி இந்த தேசத்தை “இந்து ராஷ்டிரம்” என்று அறிவிப்பதுதான் அந்த கனவு! என் உரையை, நான் எங்கோ படித்த மூன்று வரிகளோடு முடிக்க விரும்புகிறேன்.
மோசஸ் கடலைப் பிளந்தார்;
முகமது நிலவைப் பிளந்தார்;
பிரதமர் மோடி, மதத்தால் இந்த தேசத்தை பிளக்கிறார்!
இவ்வாறு ஆ.இராசா உரையாற்றினார்.
