பெலகாவி, டிச.21 கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசி களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் தொலைக் காட்சி பார்ப்பதிலும் கவனம் செலுத்தினர்.
இதை கவனித்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி மாணவர்களிடம் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது மகாராட்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிராம மக்கள் நாள்தோறும் 2 மணி நேரம் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை கட்டுப் படுத்த முடிவு செய்து இருப்பது தெரியவந்தது. எனவே அதே போன்று இங்கும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
அதன்படி கிராம மக்களை அழைத்து இது குறித்து தெரிவித்தார். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர். அந்த சைரன் அன்றாடம் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும் கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணிவரை 2 மணி நேரம் கைப்பேசி, தொலைக்காட்சியை அணைத்து விடுகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
