ஆத்தூர். டிச. 21– ”மனித வாழ்வின் பெருமை எது?” என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி வாழ்ந்து மறைந்தவர் ஆத்தூர் வேலாயுதம் தங்கவேல்” என்றும், “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஆத்மா மறுப்பிற்காகச் சொல்லப்பட்டது என்றும் சுட்டிக் காட்டி, நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து, கழகத் தலைவர் புகழ் வணக்க உரையாற்றினார்.
பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் மகனும், மாவட்டத் தலைவருமான த.வானவில் மற்றும் குடும்பத்தினர் சார்பில், 17.12.2025 புதன்கிழமை ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள “ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சி”யின் முதல்தள அரங்கில் காலை 11 மணியளவில், ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்திறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் எழுத்தாளர் வே.மதிமாறன் இயற்றிய சுயமரியாதைச் சுடரொளி 104 வயதான ஆ.வே.தங்கவேல் அவர்கள் குறித்த “ஆவணப்படம்” திரையிடப்பட்டது. முன்னதாக கழகத் தலைவர், ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் தோழர்களின் புகழ் வணக்க ஒலி முழக்கங்களோடு திறந்து வைத்தார். உடன் அவருடைய பெயரன், பெயர்த்திகளோடு குடும்பத்தார் இருந்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெய ராமன் அவர்களின் ஒருங்கிணைப்பில் எழுத்தாளர் வே.மதிமாறன், சேலம் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ஆத்தூர் ஆறுமுகம், சி.பி.அய்.மாவட்டச் செயலாளர் கடையன், சி.பி.அய். மாவட்டச் செயலாளர் முருகேசன், தே.மு.தி.க.மாநில செயலாளர் இளங்கோவன், மாவட்ட கழகத் தலைவர் பெரியார் சுரேஷ், அ.தி.மு.க. நகரச் செயலாளர் மோகன், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க.கோபால்ராஜ், வி.சி.க.முத்து ஆகியோர் முன்னிலை வகித்து ஆ.வே.தங்கவேல் அவர்களின் அரிய குணங்களை, கொள்கைப் பற்றை விவரித்து புகழ் வணக்க உரையாற்றினர். கழகத் தலைவருக்கு மாவட்டக் கழக சார்பாகவும், அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் சார்பாகவும் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கழகத் தலைவர் மரியாதை செய்தார். தொடர்ந்து பெரியார் உலகம் நன்கொடை வழங்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், தந்தை பெரியார் எழுதிய, ”மனித வாழ்வின் பெருமை எது?” என்ற புத்தகத்தில் உள்ள தத்துவத்தின் சாரத்தை, பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் வாழ்க்கையோடு பொருத்திப் பேசினார். தொடக்கத்தில், “தங்கவேலுவின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றார். “அவரால் கழகத்திற்குப் பெருமை” என்று பாராட்டினார். அவரது நாணயத்தைப் பெரிதும் புகழ்ந்தார். “அவருக்கு இரண்டு மனம் கிடையாது; ஒன்றுதான். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்” என்றும் சிறப்பித்தார். “தங்கவேலுவின் இணையர் அங்கம்மாள் தங்கவேலுவை விட வீரியமான கொள்கையுடையவர்” என்று புகழ்ந்துரைத்தார். ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது, ஆத்மா மறுப்புக்காகத்தான் என்றும், “இறப்புக்குப் பின், உயிர் வேறொரு உடலில் புகுந்துவிடும் என்பது கடவுள் கற்பனையைவிட மோசமானது” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள தை சுட்டிக் காட்டி, “சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு என்று தங்கவேலு வாழ்ந்தார் என்றும், தனது குடும்பத்தையே கொள்கையோடு வளர்த்தெடுத்தவர்” என்றும் பாராட்டி, “தலைமுறை தலைமுறையாக, ஆ.வே. தங்கவேல் – அங்கம்மாள் இருவரும் கொடுத்த பகுத்தறிவுச் சுடரை, ஏந்திச் செல்லுங்கள்” என்று அவர்தம் குடும்பத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து, தனது புகழ் வணக்க உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், ஆத்தூர் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆ.சுரேஷ், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், மாவட்ட காப்பாளர் விடுதலைச் சந்திரன், நகரத் தலைவர் அண்ணாதுரை, நகரச் செயலாளர் திவாகர், ஆத்தூர் தந்தை பெரியார் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் முருகானந்தம், மாநில அமைப்பாளர் மாயக்கண்ணன், மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, குண்டப்புடையார், மான்விழி, தலைமையாசிரியர் தங்கவேல், காளிதாஸ், சுந்தரம், திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் வேல்முருகன், கார்முகிலன், சத்தியமூர்த்தி, மோகன், மாணவர் கழகப் பொறுப்பாளர் அஜித் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்ந்த தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
