மும்பை, டிச.20 மகாராட்டிர மாநில விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த மாணிக் ராவ் கோகடே, 30 ஆண்டு களுக்கு முந்தைய மோசடி வழக்கில் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமை வேண்டுகோளை ஏற்று பதவியிலிருந்து விலகினார்.
மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோதரர் சுனில் கோகடே ஆகியோர் 1995-ஆம் ஆண்டு, குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டைப் பெற திட்ட மிட்டனர். இதற்காக தங் களது ஆண்டு வருமானம் வெறும் ரூ. 30,000 மட்டுமே எனப் பொய்க் கணக்கு காட்டினர். நகரில் தங்களுக்குச் சொந்த வீடு இல்லை எனப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.இதன் மூலம் முதலமைச்சரின் 10 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் வீட்டைப் பெற்றனர். இந்த முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் துக்காராம் டிகோலே (மறைவுற்ற) தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நாசிக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. சுமார் 30 ஆண்டு களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி நாசிக் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாணிக்ராவ் கோகடே மற்றும் அவரது சகோதரர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண் டனை மற்றும் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நாசிக் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையைச் சமீபத்தில் உறுதி செய்தது. தண்டனை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோகடேயை உடனடியாகப் பதவியி லிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த இலாகாக்கள் பறிக்கப்பட் டன. பின்னர் அஜித்பவார் அவரைப் பதவியிலிருந்து விலகக் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் பதவி விலகினார்.
