ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்!
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற
‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!
விழுப்புரம் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ‘‘திராவிட மாடல் அரசு”க்கு அக்மார்க் முத்திரை குத்தி உரை
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற
‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!
விழுப்புரம் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ‘‘திராவிட மாடல் அரசு”க்கு அக்மார்க் முத்திரை குத்தி உரை
விழுப்புரம், டிச. 19 ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நாங்கள் நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்! யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்.
- ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்! யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை! விழுப்புரம் பரப்புரைக் கூட்டத்தில் கழகத் தலைவர் ‘‘திராவிட மாடல் அரசு”க்கு அக்மார்க் முத்திரை குத்தி உரை
- புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை!
- தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
- “குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான்!”
- ‘‘அமித்ஷா ஒன்றும், பெர்னாட்ஷா அல்ல!”
- யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை?
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மரியாதை!
‘‘இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி! இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.ஆட்சி” விளக்கப் பரப்புரை தொடர் கூட்டம் மற்றும் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா திராவிடர் கழக விழுப்புரம் மாவட்டம் சார்பில் கடந்த 16.12.2025 அன்று மாலை 5 மணிக்கு, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மழை காரணமாக, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நிகழ்ச்சி, மாற்றப்பட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், விழுப்புரத்தில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மரியாதை செய்தார். அங்கிருந்து கலைஞர் அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்தார். மிகுந்த எழுச்சியோடு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சே.வ. கோபண்ணா தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். தி.மு.க. மேனாள் அமைச்சர்; துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி முன்னிலை வகித்து உரையாற்றினார். அதேபோல், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர்; மேனாள் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ச.தமிழ்ச்செல்வி பிரபு, தி.மு.க. விழுப்புரம் நகரச் செயலாளர் இரா.சர்க்கரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடர்ஒளி சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சவுரிராஜன், ஜாதி கலந்தோர் சங்கப் பொறுப்பாளர் அ.ஜாக்குலின் இராமச்சந்திரன், திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
தொடர்ந்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆகியோர் ஆசிரியருக்கு மரியாதை செய்தும், ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியும் சிறப்பித்தனர். அதன் பிறகு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள் தோழர்கள் சாரை சாரையாக வந்து கழகத் தலைவருக்குப் பயனாடை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் மரியாதை செய்தனர். பிறகு ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா நடைபெற்றது. பெயர்கள் வாசிக்க வாசிக்க, உரியவர்கள் கழகத் தலைவரிடம் காசோலைகளை வழங்கி மகிழ்ந்தனர். கழகத் தலைவர் மேனாள் அமைச்சர் பெருமக்களுக்கு மரியாதை செய்து மகிழ்ந்தார். முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அரங்கம் நிறைந்து காணப்பட்ட பெண்களையும், ஆண்களையும் கண்டு கழகத் தலைவர் உற்சாகம் மிகுந்து காணப்பட்டார். அந்த உற்சாகம் முகத்தில் மட்டுமல்ல, மேடையில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களை விளித்துப் பேசும் போதும் பளிச்சென்று வெளிப்பட்டது. அதாவது, மேனாள் அமைச்சர் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரை விளிக்கும் போது, ‘‘தி.மு.க.வின் கொள்கைக் கோட்டையாக இந்தப் பகுதியை உருவாக்கிய அருமைத் தோழர்; என்னாளும் கொள்கைக்காரர் பொன்முடி அவர்களே… சில முடிகள் போகும்… வரும்… ஆனால், இந்தப் பொன்முடி இருக்கிறதே, அது என்றைக்கும் போகாது” என்றும், மேனாள் அமைச்சர் மஸ்தான் அவர்களை விளிக்கும் போது, “இந்த மஸ்தான் தான் மோடி மஸ்தான்களை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். இந்த மஸ்தானிடம் மோடி மஸ்தான் கதைகள் எல்லாம் நடக்காது” என்றும், “எல்லோரும் என்னை வரவேற்றீர்கள். ஆனால், நகர்மன்றத் தலைவர் ச.தமிழ்ச்செல்வி அவர்கள் என்னை வரவேற்றது இந்த நகரமே என்னை வரவேற்றது போல. காரணம், அவர்தான் இந்த நகர்மன்றத் தலைவர். இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி. ஆகவே, அவர்களைப் பாராட்டினாலே அத்தனை மகளிரையும் பாராட்டியது போல” என்றும், தி.மு.க. நகரச் செயலாளர் சக்கரை அவர்களைப் பற்றி விளிக்கும் போது, “இந்தக் கொள்கை மற்றவர்களுக்குக் கசப்பு. செயல் வீரர் சக்கரையின் தொண்டு எங்களுக்கு எப்போதும் இனிப்பு” என்றும், அரங்கத்தில் பெண்கள் அதிகமாக இருந்ததைச் சுட்டிக்காட்டி, “இங்கே மகளிர் தான் பெரும்பான்மை; ஆண்கள் சிறுபான்மை” என்றும் விளித்துப் பேசுவதில் கூட, திராவிடர் இயக்கத்தின் கொள்கையை நகைச்சுவையாகக் கலந்து, சரளமாகப் பேசிக்கொண்டே… போனார். மேடையில் இருந்த பெருமக்களும், மக்களும் சிரித்தும், கைதட்டியும் ஓய்ந்தே போயினர். அந்த அளவுக்கு அரங்கத்திற்குள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
“குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான்!”
தொடர்ந்து அதே வேகம் கொஞ்சமும் குறையாமல், திராவிடர் இயக்கத்தின் பெண்ணுரிமை தொடர்பான கருத்துகளை தொடர்ந்து பேசினார். அதாவது, “சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்” என்று பெரியார் சொன்னதை சுட்டிக்காட்டினார். அதை இன்னமும் ஆழமாக விளக்க, “குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான்” என்றார். அப்படிப்பட்ட பெண்களுக்குத்தான் மனுதர்மம் கல்வி, சொத்து, திருமண உரிமைகளை மறுத்திருந்தது. இதையெல்லாம் ஒழிக்கத்தான் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் கண்டார். பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தார். இன்றைக்கு ஓரளவுக்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன. அதற்கான சான்றுதான் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஒரு பெண்” என்றார். அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி! என்றார். தொடர்ந்து அவர், “இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அம்பேத்கர் சட்டம் செய்தார். அந்த சட்டத்தை இப்போது தூக்கி எறிந்துவிட்டு தான் மறுபடியும் மனுதர்மத்தை கொண்டு வரத் துடிக்கிறது சங்பரிவார் கூட்டம். இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி” என்று, இந்திய அரசியல் சட்டத்தையும், மனு தர்மத்தையும் இரண்டு கைகளில் வைத்துக் கொண்டு விளக்கினார்.
மேலும் அதே கருத்தை வலியுறுத்த, “பிறவி பேதம் – பாலியல் பேதம் இல்லாத சமூகத்தை உருவாக்கத்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது. திராவிடர் இயக்கம் தொண்டு செய்தது. அதன் பலன் தான், பெண்கள் போராடாமலேயே நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பெண்களுக்கு, ஆண்களுக்குச் சமமாக 50–க்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறினார். தொடர்ந்து அந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம், ”பிறவி பேதம்” வேண்டும் என்பதுதான் மனுதர்மம்; இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; ‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்பதுதான் நமது கோட்பாடு! இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி!” என்றும் இருவேறு தத்துவங்களின் கொள்கைகளை விளக்கி, எது நமக்குத் தேவை என்பதை உணர்த்தினார்.
‘‘அமித்ஷா ஒன்றும், பெர்னாட்ஷா அல்ல!”
மேலும் அவர், ‘திராவிட மாடல்’ அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் அனைத்து மத மக்களும் பேதமில்லாமல் வாழ்ந்து வருவதை, “மதத்தால் வேறுபட்டாலும் மனத்தால் ஒன்றுபட்டவர்கள்” என்று சொல்லிப் புரிய வைத்தார். இப்படி அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தான்; ‘திராவிட மாடல்’ ஆட்சியைத்தான் ஒழித்துக் கட்டுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருவதை சுட்டிக்காட்ட அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உள்துறை அமைச்சர், ’தி.மு.க.வை வரும் தேர்தலில் துடைத்து எறிந்துவிடுவேன்’ என்று நாகரிகம் இல்லாமல் பேசியதைச் சுட்டிக்காட்டி, “வடக்கில் இருந்து வந்தவர்கள் தான் இங்கே துடைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கியிருக்கிறோம். குஜராத் அரசு விழாவில் பேசும்போது கூட அவருக்குத் தி.மு.க.தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு ஸ்டாலின், அவர்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதுதான் நாங்கள் பெற்ற முதல் வெற்றி; இதுதான் அவர்கள் பெற்ற முதல் தோல்வி” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறிவிட்டு, ‘‘அமித்ஷா ஒன்றும், பெர்னாட்ஷா அல்ல” என்று சொல்லி, அதற்கு மேல் அதை நீட்டாமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் பற்றி அரிய வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். சாதனைகளை பட்டியலிட்டார். “பானை செய்கிறவன் பானை செய்யணும்; மலம் அள்ளுகிறவர்கள் மலம் அள்ள வேண்டும்; குப்பை கூட்டுகிறவர்கள் குப்பை கூட்ட வேண்டும்; பார்ப்பான் மட்டும் படிக்க வேண்டும்” என்று மனு தர்மத்திற்கு இலக்கணம் சொன்னார். அந்த மனுதர்மம் தான் மறுபடியும் அரியணை ஏறத்துடிக்கிறது என்றும் மக்களை எச்சரித்தார். அதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி என்று விளக்கம் கொடுத்தார். அந்த மனுதர்மம் ஆட்சிக்கு வரத்தான் ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடிகளை தமிழ்நாட்டுக்கு தந்து கொண்டிருக்கிறது என்பதையும் வரிசையாக என்னென்ன நெருக்கடிகள் என்பதை நிதி, நீதி, ஆளுநர் என்று விவரித்தார். இதனூடே சில மின்மினிப் பூச்சிகள் ஒப்பனையிட்டு வந்து செல்வதையும் போகிற போக்கில் விமர்சித்தார். எல்லாவற்றையும் தாண்டி தமிழ்நாடு அரசு; ‘திராவிட மாடல்’ அரசு வெற்றி பெற்று வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திருப்பரங்குன்றத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். காந்தியார் பெயரை நீக்கி இருக்கிறார்கள், ஓட்டைத் திருடுகிறார்கள் என்ற நடப்பு செய்திகளையும் கோர்வையாகச் சொல்லி, புரட்சிக்கவிஞரின், ‘‘ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்; உதையப்பர் ஆகிவிட்டால்; ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார்; உணரப்பா நீ” என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, ‘‘நாம் உதையப்பர் ஆக வேண்டாம். ஓட்டப்பர் ஆகி, உங்கள் ஓட்டை உங்கள் நலன் காப்பாளர்களுக்கு போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆகவே, மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசு வரும். மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளைத் தொடருவார்கள். நீங்கள் உங்கள் வாக்குரிமையை உறுதி செய்யுங்கள்.
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை?
பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நாங்கள் நிற்க மாட்டோம்; வலியுறுத்திக் கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்; ஆனால், யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற அக்மார்க் முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!” என்று கூறி, தொடங்கும் போது இருந்த உற்சாகம் சிறிதும் குறையாமல் அதே வேகத்துடனும், வீரியத்துடனும் பேசி, தமது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக நகரத் தலைவர் இ.இராசேந்திரன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் இளமாறன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.இரமேஷ், மாவட்டக் காப்பாளர் கொ.பூங்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.சக்கரவர்த்தி, கி.கார்வண்ணன், விழுப்புரம் நகரச் செயலாளர் அ.சதீஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திண்டிவனம் தம்பி.பிரபாகரன், விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட ப.க.செயலாளர் சிவராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் த.பகவான் தாஸ், விழுப்புரம் நகர ப.க.தலைவர் ஆ.மு.ரா.இளங்கோவன் மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் அரங்கம் நிறைந்திருந்து நிகழ்ச்சி முடியும் வரை இருந்து கருத்துகளைக் கேட்டுப் பயன்பெற்றனர்.
