
இன்று டிசம்பர் 19.
இந்தத் தேதி – தமிழ்நாடு வரலாற்றிலும், மனித குல வரலாற்றிலும் பெரும் முக்கியத்துவமுடையது – என்ன தெரியுமா?
மனித குலத்தின் வரலாற்றில் – கலைஞர் பாணியில் எழுத வேண்டுமெனில் தந்தை பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்ளுமுன், ஜாதி தீண்டாமையை ஒழிக்க – கடைசியாக சமத்துவ உரிமைப் போருக்கான களத்தில் தான் மறைவதற்கு 4 நாட்களுக்கு முன் (டிச 19, 1973) – இறுதி முழக்கமிட்டார்! தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கக் கொள்கை – செய்ய வேண்டிய சாதனை – காண வேண்டிய ஜாதி ஒழிப்புப் போரில் இறங்கிப் போராட, களம் நோக்கி விரைந்து வருக! என்று பிறவி இழிவு ஒழிப்புப் அறப் போர்க் களம் காண உற்சாக முழக்கமிட்டார்.
(இரவு உடல் நலக்குறைவினால், சென்னைப் பொது மருத்துவமனை, பிறகு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், நான்கு நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 24 (1973) காலை உடலால் மறைந்தார்; உணர்வால் நிரந்தரத் தத்துவமாக நிறைந்தார் என்ற ஒரு வரலாற்றுக குறிப்பு நாள் இன்று).
தி.மு.க. ஆட்சி மாறினால் நம் மக்கள் ஜாதி – இழிவு, பெண்ணடிமை, எல்லாம் முந்தைய பழைய வர்ணாசிரம, குலதர்மத்திற்கு திரும்பும் அபாயம் எற்படும்; ஆகவே பயன்பெற வேண்டும் ஒடுக்கப்பட்ட மக்கள்; ஆரிய மாயையில் சிக்கி, தங்களை அழித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை கொடுத்த வரலாற்றுக் குறிப்பு நாள் இன்று.
அதுபோன்று மற்றொரு முக்கிய திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவரான நம் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களது பிறந்த நாள் (இவ்வாண்டு 19.12.2025 – 103ஆவது பிறந்த நாள்).
நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலம் தொட்டு, மறையும் வரை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தாய்க்கழகமான திராவிடர் கழகம் – மீது தனிப்பற்றுக் கொண்ட உண்மையை மட்டுமே பேசும் உணர்வாளர்.
மனதில் பட்டதை – துணிவுடன் அப்படியே – வெளியிடத் தயங்காத வாய்மையாளர்!
‘பெரியார் உலகம்’ உருவாவதை வெகுவாகப் பாராட்டி, 25000 ரூபாய் நன்கொடை – உடல் நலக் குறைவாகி, வீட்டுக்குள்ளே தங்கியிருந்த இறுதி நாட்களில் நம்மை அழைத்துத் தந்து உற்சாகம் ஊட்டிய பெருமகன்!
இன்றைய திராவிட மாடல் ஆட்சியின் முதல் அமைச்சரை வெகுவாகப் பாராட்டிய, பேராதரவு தந்து, பெரும் ஊக்க செயலியாக விளங்கி, மூத்தவர்கள் இளைஞர்களை களத்தில் இறக்கி, பயிற்சி தரவேண்டியது தங்களது கடமை என்பதை உணர்ந்த நல்ல சுயமரியாதைக் கொள்கை கலங்கரை விளக்கம் ஆவார்!
நமது திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதல் அமைச்சரான மானமிகு – மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், இனமானப் பேராசிரியருக்கு – வரலாற்றுப் புகழ்மிக்க கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்திற்கு, இனமானப் பேராசிரியர் மேனாள் கல்வி அமைச்சரின் பெயர் சூட்டி சிறப்பு செய்யத் தவறவில்லை!
பேராசிரியரை – அவர் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவராக இருந்த போது அடிக்கடி கடலூருக்கு பேச்சாளராக அழைத்த எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களின் ஏற்பாட்டில், பொதுக் கூட்டங்கள் நடந்தபோது, அதில் ஒரு தொண்டனாக – மாணவ பட்டாளத்துடன் செயல்பட்டு செதுக்கப்பட்டவன் என்ற உணர்வோடு இதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரோடு பழகியவன்.
தந்தை பெரியார் கொடுத்த இறுதி எச்சரிக்கை – 1973இல் கூறியது – இன்றும் – அதிகமாக கவனிக்கப்பட்டு, கருத்தூன்றி செயலாற்றி, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதிக்கான நம் சரித்திர நாயகர் தலைமையில் – மேலும் பெரும் பலத்துடன் வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டு மண் பெரியார் மண்தான், சமூகநீதி அரசுதான் என்பதை உலகுக்குப் பறைசாற்ற வேண்டிய கடமை நமக்குண்டு.
– (கி.வீரமணி)
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.12.2025
