புதுடில்லி, டிச.18– ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’ என்ற நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு.
- கனிமொழி கருணாநிதி
- மசோதாக்கள் எல்லாம் ஹிந்தியிலே ஏன் இருக்கிறது?
- வேலை வாய்ப்பு உறுதி பெயரிலேயே உள்ளது
- ஏழைகளுக்கு எதிரான சட்டம்
- வ.உ.சி.யை உங்களுக்கு யார் என்றே தெரியாது!
- மாநில உரிமைகள் – மாநில சுயாட்சி அழிக்கப்படுகிறது!
- திட்டங்களுக்கு மாநில அரசுதான் அதிகம் செலவிடுகிறது
- விவசாயத் தொழிலாளர் நிலையை அறிவீர்களா?
- நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக வேலை தருகிறீர்களா?
- பெரியார் விரும்பிய ‘காந்திதேசம்’
கனிமொழி கருணாநிதி
இதன் மீதான விவாதத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி மக்களவையில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
“ஒரு மனிதனுக்கு வாழும் உரிமை என்பது, கண்ணியத்தோடு வாழ்வதையும் சேர்த்துதான் என உச்சநீதிமன்றம் 1985ேலயே தெரிவித்திருக்கிறது. பொருளாதார மேதை அமர்த்தியா சென் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ பற்றிய ஒரு விவாதத்தில் பேசும்போது, இதுபோன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தான் விவசாயி தொழிலாளர்களை வேலை இழப்பிலிருந்து காக்கின்றது என்று குறிப்பிட்டார்.
மசோதாக்கள் எல்லாம் ஹிந்தியிலே ஏன் இருக்கிறது?
நீங்கள் தாக்கல் செய்திருக்கும் இந்த மசோதா ஏழை விவசாய தொழிலாளர்களின் கண்ணியத்தையும், அவர்களது வேலை உரிமையையும் தட்டிப் பறித்து விட்டது.
ஒவ்வொரு சட்ட மசோதாவை இந்த அரசு கொண்டு வரும்போதும் ஹிந்தி அல்லது சமஸ்கிருத மொழியிலேயே பெயர் வைக்கிறீர்கள். ஏன் ஒரே ஒரு சட்ட மசோதாவுக்காவது தென்னிந்திய மொழிகளில் பெயர் வைத்தால் என்ன? ஒரே ஒரு சட்ட மசோதாவின் பெயராவது தமிழில் இருக்கிறதா? தெலுங்கில் இருக்கிறதா? கன்னட மொழியில் இருக்கிறதா? மராட்டிய மொழியில் இருக்கிறதா? ஒடிசா மொழியில் இருக்கிறதா? நீங்கள் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கவே விரும்புகிறீர்கள்.
இது வளர்ச்சி பாரதம் அல்ல; விபரீத பாரதம்… வஞ்சிக்கப்படும் பாரதம்.
வேலை வாய்ப்பு உறுதி பெயரிலேயே உள்ளது
தொழிலாளர் விரோத அரசு விவசாய தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் இந்த மசோதாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முற்றிலுமாக நான் மறுதலிக்கிறேன், எதிர்க்கிறேன். ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ என்ற அந்தப் பெயரிலேயே… வேலைவாய்ப்பு உறுதி என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் இருந்த சட்ட மசோதா வேலை கேட்பவர்களுக்கு வேலை தருகிற திட்டமாக இருந்தது.
ஆனால் இப்போது நீங்கள் கொண்டு வந்திருப்பது அதிகாரங்களை கொண்டு போய் ஒன்றிய அரசின் கையிலே குவிக்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. கூட்டாட்சி என்பது அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது, அதிகாரங்களை பறித்துக் கொள்வதல்ல, அதிகாரங்களை குவித்துக் கொள்வதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழைகளுக்கு எதிரான சட்டம்
கிராமப்புறங்களில் இந்தத் திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் என்றுதான் அழைக்கிறார்கள். இதன்படி முதியவர்கள் வேலைக்கு செல்ல முடியாதவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா இவர்களுக்கெல்லாம் எதிரான ஒன்றாக மாநில சுயாட்சியை கெடுக்கக் கூடிய ஒன்றாக, ஏழை மக்களுக்குஎதிரான ஒரு சட்டமாக இங்கே கொண்டுவரப்படுகிறது.
இந்த சட்ட மசோதாவின் 4, 5 பிரிவுகளில், இந்த திட்டத்தின் கீழ் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு வேலை வாய்ப்புகளை வழங்கலாம் என்று ஒன்றிய அரசே முடிவு செய்யும் என சொல்லப்பட்டிருக்கிறது. எந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய மக்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு வழங்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிப்பீர்கள்.
வ.உ.சி.யை உங்களுக்கு யார் என்றே தெரியாது!
உங்களுக்கு வ.உ.சி. என்றாலே யார் என்று தெரியாது. ‘செக்கிழுத்த செம்மல்’ என்றால் யார் என்று தெரியாது. தேர்தல் வந்தால் மட்டும் தான் உங்களுக்கு தமிழ்நாட்டின் ஞாபகம் வரும். தமிழ்நாட்டிலே வந்து ‘தமிழராக பிறக்கவில்லையே!’ என்று வருத்தப்படுவீர்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்தால் அங்கே போய், ‘தமிழர்கள் பிகாரிகளுக்கு எதிரானவர்கள்!’ என்று பேசுவீர்கள். ஒடிசாவில் தேர்தல் நடந்தால் அங்கே போய், ‘தமிழர்கள் இங்கே அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்!’ என்று பேசக்கூடியவர்கள் நீங்கள்.
இப்படி மாநிலங்களைப் பற்றி குறிப்பாக தமிழ்நாட்டைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாத நீங்கள் எப்படி தமிழ்நாட்டிலே நாகப்பட்டினத்தில், தஞ்சாவூரில், தூத்துக்குடியில், திருநெல்வேலியில், நாங்குநேரியில் கிராமங்களில் உள்ள மக்களின் வேலை தேவைகளை புரிந்து கொண்டு ஒதுக்கீடு செய்வீர்கள் என்று எனக்கு சொல்லுங்கள்.
மாநில அரசு அங்கே இருக்கக்கூடிய தேவைகளுக்கு ஏற்ப, இத்தனை நாட்களாக வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இப்போது அந்த உரிமையையும் மாநிலங்களிடமிருந்து பறிக்கும் வகையில் இந்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறீர்கள்.
மாநில உரிமைகள் – மாநில சுயாட்சி அழிக்கப்படுகிறது!
நீங்கள் கொண்டுவரும் அனைத்து மசோதாக்களிலும் மாநில உரிமைகள் மாநில சுயாட்சி அழிக்கப்படுகிறது – ஒழிக்கப்படுகிறது.
யூபிஏ அரசாங்கத்திலே நாங்கள் கொண்டுவந்த ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட’த்தில், தொழிலாளர்களுக்கான ஊதியம் என்பது முழுமையாக ஒன்றிய அரசின் பொறுப்பில் இருந்தது. ஆனால் இப்போது இந்த மசோதா 60: 40 என அந்த விகிதத்தை மாற்றி அமைத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளுக்கு இந்தத் தொகையை சரியான நேரத்தில் வழங்காத நீங்கள், இனி வழங்குவீர்கள் என எந்த நம்பிக்கையில் நாங்கள் இருக்க முடியும்?
திட்டங்களுக்கு மாநில அரசுதான் அதிகம் செலவிடுகிறது
அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தின் கீழ் 75% நிதியை ஒன்றிய அரசு வழங்கும், மீதி இருக்கும் 25 % நிதியை உபகரணங்களுக்காக மாநில அரசு வழங்கும் என்ற நிலையை மாற்றி… 60: 40 என மாற்றுவதற்கான காரணம் என்ன? வேலை வாய்ப்புகளை மாநில அரசுகள் அதிகரித்தால் அதற்கான ஒரு தொகையை மாநிலங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எப்படி நியாயமாக இருக்க முடியும்?
ஏனென்றால் தொடர்ந்து மாநிலங் களுக்கு வழங்கப்படும் நிதியை நீங்கள் குறைத்துக் கொண்டே வந்து கொண்டிருக்கிறீர்கள்.
89 சதவீதத்திலிருந்து இன்று 79% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. செஸ் இல் இருந்து வரக்கூடிய நிதியை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக எடுத்துக் கொள்வது ஒன்றிய அரசான நீங்கள்தான்.
மாநிலங்களுக்கு வரக்கூடிய வருமானத்தை குறைக்கக்கூடிய அதே நேரத்திலே, மாநில அரசுகளின் செலவு களை அதிகரிக்கவைக்கும் சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மாநில அரசுக்கு 39 சதவிகிதம் நிதி வழங்கிவிட்டு பிரதம மந்திரி பெயரில் திட்டம்!
60: 40 என்று சொல்கிறீர்கள். ‘பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்’ என்று ஒரு திட்டத்திற்கு பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அந்தத் திட்டத்தின் கீழ் 61% நிதியை வழங்குவது மாநில அரசு. ஒன்றிய அரசு வழங்குவது 39 சதவீதம் தான்.
அதேபோல ‘பிரதான் மந்திரி மத்திய சம்பத்த யோஜனா’. இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழங்குவது 27 சதவீதம் மட்டும்தான். இதில் தமிழ்நாடு மாநில அரசு வழங்குவது 73 சதவீத நிதி.
முதியோர் உதவித் தொகையில் ஆயிரம் ரூபாய்க்கு மேலாக வழங்குவது எங்களுடைய மாநில அரசு. நீங்கள் கொடுப்பது ரூ.200.
‘ஜல் ஜீவன் மிஷின் திட்ட’த்தில் 50: 50 என்று சொன்னீர்கள். ஆனால் தமிழ்நாடு மாநில அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 55 சதவீத நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் எங்களை – மாநிலங்களை வஞ்சித்துக் கொண்டிருக்க கூடிய ஆட்சி, இந்த மசோதாவின் மூலமாகவும் மக்களையும் மாநிலங்களையும் வஞ்சிக்க தொடங்கி இருக்கிறீர்கள். அதற்கு இதையும் ஒரு வாய்ப்பாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது, வெட்கமாக இருக்கிறது.
விவசாயத் தொழிலாளர் நிலையை அறிவீர்களா?
விவசாயப் பணிகள் நடைபெறும் 60 நாட்கள் இந்த திட்டத்தின் கீழ் பணிகள் இருக்காது என்று சொல்கிறீர்கள். விவசாயம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
விதைக்கும் நாட்கள், நடவு செய்யும் நாட்கள் என்ற இந்த ஓரிரு நாட்களைத் தவிர அந்த 60 நாட்களில் பெரும்பாலும் விவசாய தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 60 நாட்களுக்கு வேலை இல்லை என்றால் அந்த விவசாயத் தொழிலாளியின் நிலை என்ன என்பதை சற்று நேரமாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா என உங்கள் மனசாட்சியைத் தொட்டு கேட்கிறேன். இது கூலிப் பிரச்சினை மட்டுமல்ல. ‘நெகோஷியேசன்’ பவர் என்பதையும் தட்டிப் பறித்திருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
நாங்கள் யுபிஏ அரசாங்கத்தில் இந்தத் திட்டத்தை கொண்டு வந்த போது, ஒரு அட்சய பாத்திரத்தை விவசாய தொழிலாளர்களின் கைகளிலே வழங்கியது. அந்த அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு விவசாய தொழிலாளர்களின் கையில் பிச்சை பாத்திரத்தை இந்த அரசு திணித்திருக்கிறது.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக வேலை தருகிறீர்களா?
‘125 நாட்கள் வேலை கொடுப்போம்’ என்று வேளாண் துறை அமைச்சர் இங்கே பேசினார். உங்களுடைய இந்த ஆட்சியிலே எந்த ஒரு மாநிலத்துக்காவது 100 நாட்களுக்காவது வேலை வழங்கியிருக்கிறீர்களா? இல்லை. 40, 46 நாட்களை தாண்டுவது கிடையாது.
எங்கள் ஊரில் ஒரு ‘சொலவடை’ சொல்வார்கள். ‘‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவது எப்படி?’’ என்று. இதுதான் இங்கே இருக்கக்கூடிய நிலை.
பெரியார் விரும்பிய ‘காந்திதேசம்’
இதையெல்லாம் தாண்டி வெட்கப்படக்கூடிய நிகழ்வாக இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி இருக்கிறீர்கள். தந்தை பெரியார் அவர்கள் ‘மகாத்மா’ காந்தி இறந்தபோது இந்திய தேசத்திற்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் நீங்களோ இந்த திட்டத்தின் பெயரில் இருந்தே காந்தி அவர்களின் பெயரை எடுத்துவிட்டீர்கள். எனவே இதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்” என கனிமொழி கருணாநிதி உரையை முடிக்கும் முன்பே அவருடைய ஒலிபெருக்கி அணைக்கப்பட்டது.
