திருப்பதி, டிச.11– திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பட்டு சால்வை விநியோகத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப் பட்டுள்ளதாக அக்கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது. 2015 முதல் 2025 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் இந்த மோசடி நடந்திருப் பதாக தேவஸ்தானம் குற்றம் சாட்டியுள்ளது.
நன்கொடையாளர்கள் மற்றும் விஅய்பி தரிசனத்தின் போது வழங்கப்படும் ‘பட்டு சால்வைகள்’, ‘பட்டால்’ செய்யப்பட்டவை இல்லை என்றும் 100 சதவீதம் பாலியஸ்டர் துணியால் செய்யப்பட்டவை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது விசாரணையில் உறுதிப்படுத் தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
‘வி.ஆர்.எஸ்.எக்ஸ்போர்ட்’ என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இந்த பட்டு சால்வைகளை கோயிலுக்கு விநியோகித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது. இந்த மோசடி மூலம் ரூ.54 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, “கொள்முதல் துறையில் சில முரண்பாடுகள் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, விசாரணையை மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள் ளோம்” என்று அவர் கூறினார்.
கலப்பட நெய், நன்கொடை திருட்டு சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது பட்டு சால்வை ஊழல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
