திராவிடர் இயக்கத்தின் நாற்றுகள் தான் – தமிழ்நாட்டின் எல்லா வயல்களிலும் நடப்பட்டிருக்கின்றன!
எந்தக் கொம்பனாலும் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்த முடியாது!!
காட்டுமன்னார்கோவில், டிச.11 இந்திய அரசியல் சட்டம் உருவான போது, இது கூடாது என்று சொன்னது ஆர்.எஸ்.எஸ். என்றும் திராவிடர் இயக்கத்தின் நாற்றுகள்தான் எல்லா வயல்களிலும் நடப்படுகின்றன என்று சுட்டிக்காட்டி காட்டுமன்னார்குடியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
சுயமரியாதைச் சுடரொளிகளின்
பெயரில் மேடை!
சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காட்டுமன்னார்கோவில் உள்ள சீரணி அரங்கில், கீழவீதி உடையார்குடி சாலையில், 9.12.2025 அன்று மாலை 5.30 மணியளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீரணி மேடை அமைக்கப்பட்டிருந்த சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள் சீரான இடைவெளிகளில் கட்டப்பட்டு அதன் ஒவ்வொரு கொடிக் கம்பத்திலும் நீளக் குழல் விளக்குகள் பொருத்தப்பட்டு பளீரென்று வெளிச்சத்தைப் பரப்பி நிகழ்ச்சியை, ஒரு கொள்கைத் திருவிழாவாக மாற்றியிருந்தது. கழக மாவட்டம் மட்டுமல்ல, கழகத் தலைவரை வரவேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுயமரியாதைச் சுடரொளிகள் மு.செங்குட்டுவன், ஜெ.கி.அருள்ராஜ் ஆகியோர் பெயரில் மேடையை அமைத்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
கழகத் தலைவர் வருகை!
கழகத் தலைவர் சரியாக 6 மணிக்கு நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். மாவட்டம் சார்பாக எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. கழகத் தலைவர் காட்டுமன்னார்குடிக்கு வருகை தந்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டதால், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்து ஆசிரியரின் உரையை கேட்க அமர்ந்திருந்தனர். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கோவி.பெரியார்தாசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
முன்னதாக திராவிட மாணவர் கழக துணைச் செய லாளர் இளமாறன் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் பற்றி உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச் செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் தங்க.விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணித் தலைவர் வைபவ் வாண்டையார் முன்னிலை வகித்து சிறப்பித்தார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கும், முன்னிலை வகித்துச் சிறப்பித்தோருக்கும் மரியாதை செய்யப்பட்டது. நிறை வாகக் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறேன்!
கழகத் தலைவர் தமது உரையை, சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளிகளான தொண்டர் ராமச்சந்திரன், தி.க.விசுவநாதன், நமச்சிவாயம், புலவர் நத்தமலை பாஸ்கர், சாமிநாதன், மு.செங்குட்டுவன், ஜெ.கி.அருள்ராஜ், கவிஞர் சின்ன புங்கனேரியன், நத்தமலை பன்னீர்செல்வம், வீரானந்தபுரம் கணபதி ஆசிரியர், சோழத்தரம் இராமதுரை ஆசிரியர் ஆகிய தோழர்களை நினைவு கூர்ந்து உரையாற்றி, “அவர்கள் செய்த தியாகத்தால் உருவான மேடையில்தான் நாம் அமர்ந்திருக்கிறோம்” என்று அவர்களுக்கு நன்றி செலுத்தினார். சிதம்பரம் மாவட்டத்தில் வேறு பல இடங்களில் பரப்புரைக்காக வந்திருந்தாலும், முழுக்க முழுக்க திராவிடர் இயக்கக் கொள்கை விளக்கத்தைப் பேசுவதற்காக காட்டுமன்னார்குடிக்கு 30 ஆண்டு களுக்குப் பிறகு வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவரின் அடுக்கடுக்கான கேள்விகள்!
நிகழ்ச்சிக்கான தலைப்பான, ‘இதுதான்
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்ற நிகழ்ச்சியின் தலைப்பை ஒட்டி, “இந்தியாவிலேயே இருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை அந்தந்த கட்சிகளே எடுக்கும். ஆனால், பி.ஜே.பி. மட்டும் சொந்தமாக முடிவு எடுக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். விரல் நீட்டுகிற திசையில் தான் நடைபோடும்’ என்ற முக்கியமான தகவலை எடுத்துரைத்து, நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக ஆர்.எஸ்.எஸ்.க்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை புரிய வைத்தார். ‘‘இதற்கு ஆதாரங்கள் வேண்டுமானால் புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறோம். வாங்கிப் படித்து பிறருக்கும் கொடுத்துப் பரப்புங்கள்” என்றார். மேலும் அவர், “அந்த ஆர்.எஸ்.எஸ்.க்கு என்ன பெருமை? ஆர்.எஸ்.எஸ். என்ன பெரிய தியாகம் செய்த அமைப்பா? அது என்ன 24 கேரட் தேச பக்தர்களைக் கொண்டதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, தொடர்ந்து, ‘‘ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு” என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், “அவர்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்வதற்கு அல்ல, தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும். இந்த மண் பெரியார் மண்! சமூக நீதி மண்! இங்கே பேதம் இருக்கக்கூடாது. பேதத்திற்கு அடிப்படை வர்ணாஸ்ரமம்; ஜாதி… அந்த ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை எப்படி ஒழிப்பது?” என்று எதிர் கேள்வி கேட்டார். தொடர்ந்து, பெரியாரும், அம்பேத்கரும் அதே கேள்வியைக் கேட்டதை எடுத்துரைத்தார்.
ஜாதி ஒழிப்பில் திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியான பணிகள்!
மேலும் அவர், திராவிடர் இயக்கம் ஒடுக்கப்பட்டோ ருக்கு என்ன செய்தது? என்று சிலர் அவதூறு செய்து கொண்டிருப்பதை எடுத்துரைத்து, அதுதொடர்பாக காட்டுமன்னார்குடியில் இருந்த தோழர் இளையபெருமாள் அவர்களை நினைவு படுத்தி, ‘‘அவர் தலைமையில் அமைக்கப்பட்ட, ‘அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் குழு’ கொடுத்த அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். திராவிடர் கழகம் தான் அவ்வப்போது அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று போராடியது” என்றும் ”இதை அவரே நேரில் சந்தித்த போது நன்றி தெரிவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார். அனைவரும் அந்த அறிக்கையை மறந்திருந்த போது, தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று போராட முன்வந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர், சட்டம் செய்வதற்கு Objects and Reason எழுதுவதற்காக இளையபெருமாள் கொடுத்த அறிக்கையின் சாரத்தைதான் பயன்படுத்திக்கொண்டார். அதன் அடிப்படையில் தான் சட்டம் வந்தது. நீதிமன்றங்களில் போராடி வெற்றி பெற்று, இப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்கியிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு மணிமண்டபமும் இப்போதிருக்கும் முதலமைச்சரால் கட்டப்பட்டது என்று ஜாதி ஒழிப்பில் திராவிடர் இயக்கத்தின் தொடர்ச்சியான பணிகளை, “ஒடுக்கப்பட்டோருக்கு திராவிடர் இயக்கம் என்ன செய்தது?” என்று கேள்வி கேட்போருக்கு பதிலடியாகக் கூறினார்.
திராவிட இயக்கத்தின் நாற்றுகள்தான் தமிழ்நாட்டின் எல்லா வயல்களிலும் நடப்பட்டிருக்கின்றன!
மேலும் அவர், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான போது, ஆர்.எஸ்.எஸ். அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை” எனும் வரலாற்று உண்மையை சொல்லிக்கொடுத்தார். ”110 வயதான நீதிக்கட்சி; 100 வயதான சுயமரியாதை இயக்கம்; 81 வயதான திராவிடர் கழகம் ஆகிய திராவிட இயக்கத்தின் நாற்றுகள்தான் தமிழ்நாட்டின் எல்லா வயல்களிலும் நடப்பட்டிருக்கின்றன. ஆகவே, எந்தக் கொம்பனாலும் திராவிட மாடல் அரசை வீழ்த்த முடியாது” என்று வீரியத்துடன் சொல்லி, மணிக்கணக்கில் பேசிப் புரிய வைக்க வேண்டியதை எளிமையான உவமை மூலம் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, ”எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை” என்றும் போகிற போக்கில் விமர்சித்தார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் குஜராத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியில் தி.மு.க.வை துடைத்து எறிந்து விடுவோம் என்று பேசியதை கடுமையாகக் கண்டித்தார். ”தூக்கத்தில் கூட தி.மு.க.வை எண்ணி எண்ணி பா.ஜ.க. அஞ்சுகிறது” என்று அதற்கு விளக்கம் கொடுத்தார்.
மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!
மேலும் அவர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 110 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேருக்கு மேல் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்தில் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் அவர், “2026 தேர்தலில் ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் வரவேண்டும் என்று சொல்வது தனிப்பட்ட ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு அல்ல நண்பர்களே! உங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமா? இல்லையா? உங்கள் பெண் பிள்ளைகள் பொறுப்புக்கு வரவேண்டுமா? இல்லையா? நம்முடைய பிள்ளைகள் வழக்குரைஞர்கள் ஆக வேண்டாமா? நம்முடைய பிள்ளைகள் அய்.ஏ.எஸ்.அதிகாரிகளாக வர வேண்டாமா? இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திராவிட மாடல்’ ஆட்சி வந்ததனால்தான்; சமத்துவ ஆட்சி வந்தத னால்தான் தந்தை பெரியாருடைய பிறந்த நாளை சமூக நீதி நாள் என்றும், பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்று சொல்லக்கூடிய ஒரே ஆட்சி திராவிட ஆட்சியைத் தவிர வேறு உண்டா? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு, ஆகவே மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். வாழ்க பெரியார்! வருக மறுபடியும் திராவிட ஆட்சி! நன்றி” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிறைவாக நகர அமைப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வில், வி.சி.க. ஒன்றியச் செயலாளர் மணவாளன், திராவிடர் கழகத் தோழர்களான மாவட்டத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ப.முருகன், பொதுக்குழு உறுப்பினர் பா.இராசசேகரன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், ஒன்றியத் தலைவர் செல்வகணபதி, ஒன்றியச் செயலாளர் குணசேகரன், காட்டுமன்னாகுடி நகரத் தலைவர் தி.க. பொன்.பஞ்சநாதன், நகரச் செயலாளர் தி.க. கு.இராஜபிரபு, மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் தெ.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.பஞ்சநாதன், மாவட்ட ப.க.தலைவர் கோவி.நெடுமாறன், கழகப் பேச்சாளர் சு.பெ.தமிழமுதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் யாழ் திலீபன், தி.மு.க. ஒன்றியச் செய லாளர் அ.முத்துசாமி, நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி, திருமுட்டம் ஒன்றியத் தலைவர் கு.பெரியண்ணசாமி, திருமுட்டம் ஒன்றியச் செயலாளர் இராசசேகரன், பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் கு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் துரை. செயபால், மாவட்ட மகளிரணித் தலைவர் சுமதி பெரியார்தாசன், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தோழர்கள், மாவட்ட தொழிலாளரணித் தெ.ஆறுமுகம், குமாரகுடித் தலைவர் செல்வம், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் அள்ளூர் ஜெயபால், காட்டுமன்னார்குடி தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆ.முத்துசாமி, காட்டு மன்னார்கோவில் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பல்வேறு கருத்துகளைக் கேட்டுப் பயன் பெற்றனர்.
