தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது!
சி.பி.அய். – வருமான வரித் துறை – அமலாக்கத் துறை போன்றவற்றோடு எஸ்.அய்.ஆர்.கூட மோடி பி.ஜே.பி. அரசின் ‘புதிய அங்கமாக’ ஆக்கப்பட்டுள்ளது!
தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது!  சி.பி.அய். – வருமான வரித் துறை – அமலாக்கத் துறை போன்றவற்றோடு எஸ்.அய்.ஆர். என்பதும் ‘புதிய அங்கமாக’ ஆக்கப்பட்டுள்ளது! தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசின்மீது குற்றச்சாற்றுகளைக் கூறி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வழங்கப்பட்டிராத ஓர் அதிகாரத்தை – அதாவது தனக்கு இல்லாத ஓர் அதிகாரத்தைத் தானாகக் கையில் எடுத்துக்கொண்டு செய்யப்படும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர சீராய்வு (Special Intensive Revision – SIR) என்பது ஒரு புதிய அதிகார நடவடிக்கை. இந்தத் தவறான வழி, பயன்பாடு குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகின்றன!

கடும் விமர்சனத்திற்குள்ளான
தேர்தல் ஆணையம்!

‘‘எஸ்.அய்.ஆர். (S.I.R.) தொடர்பான பிரச்சினை களுக்குத் தேர்தல் ஆணையம் ‘இயந்திரத்தனமான’ பதில்களையே தருகிறது என்று உச்சநீதிமன்றத்தின் கடும் விமர்சனத்திற்கு நேற்று முன்தினம் (9.12.2025) ஆளாகியிருக்கிறது!

அரியானா, பீகார் போன்ற பல மாநிலங்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெருத்த வெற்றியை அள்ளியதற்கு இதுதான் முக்கியமாக வழி வகுத்துள்ளது என்ற குற்றச்சாற்று  இந்தியா கூட்டணி மூலம் எதிரொலிக்கின்றது!

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின்
மற்றொரு ‘‘புதிய அங்கமாக!’’

எப்படி சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவை, ஆளும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியின் திரிசூலங்களாக எதிர்க்கட்சியினர் அல்லது பா.ஜ.க., மோடி அரசினை விமர்சிப்பவர்களின் மேல் பாய்கின்றனவோ அதுபோல, சுதந்திரமாக இயங்கவேண்டிய தேர்தல் ஆணையம், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் மற்றொரு ‘‘புதிய அங்கமாக’’வே ஆக்கப்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் இந்திய நாட்டின் ஜனநாயகத்தினைப் பாதுகாக்க விரும்பும் அனைவரது கவலையும், பொறுப்பும் மிக்கதொரு வினாவாகவே முன்வைக்கப்படுகிறது!

நமது பரப்புரைப் பயணக் கூட்டங்களிலும் மக்களுக்கு விளக்கி வருகிறோம்!

இதுபற்றி மக்களவையில் பேசிய காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞர்களில் ஒரு வருமான மணீஷ் திவாரி அவர்கள்,

‘‘அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களிலோ வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு ஏற்பாடு இல்லை; அது நிறுத்தப்பட வேண்டும்’’ என்று ஓங்கிக் கூறியுள்ளார்!

(இதை  2.10.2025 ஆம் தேதியன்று திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே நாம் பேசி, எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியதுடன், நாடு முழுவதும் நடைபெற்று வரும் நமது பரப்புரைப் பயணக் கூட்டங்களிலும் மக்களுக்கு விளக்கி
வருகிறோம்).

எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற
மாநிலங்களில் மட்டும்தான்….

இதுபற்றி நாடாளுமன்றத்தில் 9.12.2025 அன்று நடந்த விவாதத்தில், இந்த ஏற்பாடு, பா.ஜ.க.வை தேர்தல்களில் வெற்றி பெற விடாது தடுத்து, பாசிசத்திற்கு வழிவிடாது – ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று இந்தியா கூட்டணியினர் குற்றம்சாட்டி யுள்ளனர்.

2026 இல் அசாமிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்றாலும், அதற்கு S.I.R. சிறப்புத் தீவிர சீராய்வு நடைமுறைப்படுத்தப்படாமல், வெறும் Special Revision(S.R.) வழக்கப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முதலியவையே நடைபெறுகின்றன.

இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை யைச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகக் காட்டுகிறதா?

நாடாளுமன்றத்தில்,
ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேசுகையில், மூன்று முக்கிய நெற்றியடிக் கேள்விகளை நேருக்கு நேர் கேட்டுள்ளதை உலகமே வியந்து பார்த்துள்ளது!

  1. தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் நிய மனக் குழுவில், முன்பு உச்சநீதிமன்றத்தால் பரிந்து ரைக்கப்பட்டபடி இடம்பெற்றிருந்த இந்தியத் தலைமை நீதிபதி நியமனக் குழுவிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
  2. தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கும்போது எடுக்கும் (நியாயமற்ற முடிவுகள் எடுத்த பிறகு உண்மைகள் வெளிவந்து தெளிவு பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதுபற்றி) முடிவுகளுக்கு பிற்காலத்தில் தண்டிக்கப்படக்கூடாது என்று மோடி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு சட்டத்தை மாற்றியது ஏன்?
  3. தேர்தல் நடந்தபோது சி.சி.டி.வி. (C.C.T.V.) பதிவுகளை 45 நாள்களுக்குள் அழித்து (Erase) விட வேண்டும் என்று சட்டத் திருத்தத்தை ஏற்படுத்தியது ஏன்?

இதற்குப் பதில் பிரதமர் மோடியிடமிருந்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமிருந்தோ இதுநாள் வரை கிடைத்துள்ளதா?

ஜனநாயகப் படுகொலைக்கான முன்னோட்டம்!

தங்களை எவரும் கேள்வி கேட்கவே முடியாது; தவறு நிரூபிக்கப்பட்டாலும் – வருங்காலத்திலும்கூட – தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த தவறின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதைவிட, பெரும் ஜனநாயகப் படுகொலைக்கான முன்னோட்டம் வேறு உண்டா?

அவசிய, அவசரமாகும்!

இந்தக் கருத்துகளை முன்னிறுத்தி, வெகுமக்கள் முன், பெரும் பிரச்சாரத்தைச் செய்தாக வேண்டியது அவசியம், அவசரமாகும்!

தேர்தல் ஆணையம் – இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி தலைமையிலான ஆட்சியில், கிராமத்துப் பழமொழி போல, ‘‘ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி’’யாகவே நடந்து கொள்வதை சகித்துக் கொண்டால், ஜனநாயகம் மரணப் படுகுழியில்தானே தள்ளப்படும்?

திரிசூலங்களில் உள்ள மேற்காட்டிய மூன்றையும் தாண்டி, தேர்தல் ஆணையமும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சார்பு அமைப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டது என்ற குற்றச்சாற்றுக்கு இடம் ஏற்படலாமா?

‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்கவேண்டும்!’’

நீதிமன்றங்களில் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அடிக்கடி பயன்படுத்தும், ‘‘சீசரின்  மனைவி  சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்கவேண்டும்’’ என்ற அறிவுரைச் சொற்றொடர்,  இதற்குப் பொருந்தாதா? என்பதே நமது கேள்வி!

பதில் கிடைக்குமா?

மக்கள் மன்றம் கேட்கட்டும்!

வாக்காளர்களே, உங்கள் வாக்குரிமைத் திருட்டை ஒருபோதும் அனுமதிக்காதீர், எச்சரிக்கை!

சென்னை   
11.12.2025          

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *