மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் பேட்டி
சென்னை, டிச.11– உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் விமர்சித்துள்ளார். திருப் பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக மேனாள் நீதிபதி அரி பரந்தாமன், வாஞ்சிநாதன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது பேசிய நீதிபதி அரி பரந்தாமன், “திருப்பரங் குன்றம் விவகாரத்தில் அவசர அவசரமாக வழக்கை விசாரித்து, சட்டவிதிகளை மீறி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இவர் RSS அமைப்பைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நடுநிலையோடு செயல் பட வேண்டும். ஆனால், இவர் அப்படி செயல்பட வில்லை. கோயில் நிருவாகம் தவிர்த்து வேறு யாரும் தீபம் ஏற்ற உரிமை இல்லை. தீபம் எங்கே ஏற்றுவது என்பதையும் கோயில் நிருவாகம்தான் முடிவு செய்ய வேண்டும்.
2021-இல் திருப்பதி கோயில் வழக்கில் தேவஸ் தானம்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை என்றால் லட்டு சாப்பிடுவது போல் இருக்கிறது. இங்கே இருக்கும் மத நல்லிணக்கம் அவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. திருப்பரங் குன்றம் தீப வழக்கில் எதிர் மனுதாரரின் பதிலைக் கேட்காமலேயே இறுதி ஆணை வழங்கப்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பாஜக தலைவர் எச்.ராஜா போலவும், ஆளுநர் ஆர்.என்.ரவி போலவும் செயல்படலாமா?. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு 100க்கும் மேற் பட்ட நீதிமன்ற அவ மதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதம் சம்பந்தப்படாத வழக்கு தவிர்த்து வேறு ஏதாவது வழக்கில் இவ்வளவு தீவிரம் காட்டி யிருக்கிறாரா நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்? கோயிலுக்கே முழு உரிமை; சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டே தீபம் ஏற்றுவதை தீர்மானிக்க வேண்டும்,”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
