சென்னை,டிச.11 தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்கட்ராமன் பதவி வகித்து வருகிறார். பொறுப்பு டிஜிபி எனும் நடைமுறை எங்குமே கிடையாது, தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருக்கிறார் என, சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபி நியமிக்கப்படாதது குறித்து பாஜக, அதிமுக என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தற்போது வரை பொறுப்பு டிஜிபிதான் பதவியில் இருக்கிறார் என திமுக இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.
இப்படி விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், நேற்றிரவு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 15 மருத்துவ விடுப்பில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு பதில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநர் அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
