திருச்சி, டிச.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சீரும் சிறப்புடன் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையேற்று சிறப்பித்தார்.
11ஆம் வகுப்பு மாணவி ரா.சஹானா விழாவில் குழுமியிருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். 11ஆம் வகுப்பு மாணவி பா.தேவதர்க்ஷினி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முதல் கூட்டம் கடலூரில் 12ஆவது வயதில் தொடங்கி 93ஆவது வயது 2.12.2025 அன்று வரை தந்தை பெரியார் அவர்களின் அடிச்சுவட்டில் சிறிதும் விலகாமல் பெரியாரை உலக மயமாக்கும் உன்னத பணியை பற்றி மிகத் தெள்ளத்தெளிவாக உரை நிகழ்த்தி, மாணவிகள் ஆகிய நாமும் அய்யாவின் கொள்கைகளை இந்த பிறந்தநாள் விழாவில் ஏற்போம் என்று உறுதி ஏற்று அய்யாவின் பொன்மொழியை கூறி உரையை நிறைவு செய்தார்.
மேலும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதமாக மாணவிகள் ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் சமுதாயத் தொண்டு, அரும்பெரும் சாதனைகளை பாடலாலும், நடனமாடியும் அனைவரையும் பிரமிக்க வைத்தனர்.
ஆசிரியரின் பிறந்தநாள் மகிழ்வாக பள்ளி வளாகத்தில் பூமரக்கன்றுகளை தலைமையாசியை, ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து இயக்கங்களை சார்ந்த (NSS, NCC, JRC, SCOUT & GUIDE) மாணவிகள் நட்டு மகிழ்ந்தனர். இறுதியாக அ.சனா ஹமிதா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சி முழுவதையும் 11ஆம் வகுப்பு மாணவிகள் வே.சே.ஜனனி மற்றும் முத்.காருண்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
