தமிழ்நாடு அரசியல் களத்தில் சமூக நீதிப் போராட்டம் என்பது இந்தி யாவிற்கு மட்டுமல்லாமல் இந்த பூமிப் பந்திற்கே வழிகாட்டி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
சமூக நீதி அரசியலை, ஒரு நூற்றாண்டு கருத்தியல் அரசிய லாக கொண்டாடினாலும், சமூக சிந்தனையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இந்த அரசியல் களத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.
இக்கருத்து சமூக இயக்கங்களுக்கு இடையில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த சூழலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, முனைப்போடு, பலதரப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலாக தொடர்ந்து குரலெழுப்பி வந்திருக்கிறார் என்பது தான் உண்மை. அரசியல் களத்திற்கும் சமூக களத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தாலும் கூட, சில ஆழமான சமூக சிக்கல்களின் தீர்வு அரசியல் களத்தில்தான் அமைந்திருக்கிறது என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பல நேரங்களில் தத்துவார்த்த ரீதியிலும் சரி, கொள்கை சித்தாந்தத்தின் படியும் சரி, திராவிடப் பார்வையிலும் சரி, அதற்கான தீர்வை முழங்கிக் கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட அற்புதமான முன்னெடுப்பு தான், மாற்றுதிறனாளிகளுக்கான அரசியல் பங்கேற்பு உரிமையை உறுதி செய்ய வேண்டுமென்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் முழக்கம் என்பது வர லாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
திராவிட இயக்கத்தில், புரட்சிகர கருத்துகளின் ‘‘தாய்’’ என்பதில் அய்யமில்லை! விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான ‘‘உளி’’ என்பதை, வரலாறு நமக்கு உணர்த்துகின்ற செய்தியாக இருக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டை தொட்டிருக்கின்ற இந்த வேளையில், சுயமரியாதை கோட்பாடு தான் பல விளிம்பு நிலை மக்களினுடைய ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் போராட்ட களத்திற்கான தளத்தை உருவாக்கிய அடிப்படை கோட்பாடு என்பதை, பல அய்.நா. உரிமை உடன்ப டிக்கையின் அடிப்படைக் கருத்துகளில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
சுயமரியாதை இயக்கத்தின் தத்து வமான ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்ற இந்த கருத்தியல், அய்.நா. பெருமன்றத்தின் மனித உரிமைக்கான கோட்பாடுகளிலும் பார்க்க முடிகிறது. மனிதன் பிறக்கின்ற பொழுது, வகுக்க முடியாத, பிரிக்க முடியாத, பகுக்க முடியாத அளவில் மனிதன் மண்போடு பிறக்கிறான் என்ற கருத்தியலே திராவிட இயக்கத்தின் சுயமரியாதை கருத்தியல் தத்துவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகள், அவர்களுடைய அடிப்படை உரிமைகளாக இருக்கிறது.
இவ்வுரிமைகள் நடைமுறைக்கு வர வேண்டுமேயானால் அவர்களுக்கான அரசியல் பங்கேற்பு வேண்டும் என்பதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிக அழமாக உணர்ந்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 இயக்கத்தினுடைய இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளிகள் அரசியல் மாநாட்டை, தானே தலைமையேற்று வழிநடத்தி, அவர்களுக்கான சென்னை பிரகடனத்தில் கையெழுத்திட்டு, உலகமக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் தேவையை, ஒரு அறைகூவலாகவே விடுத்து வழிமுறைகளை முன் மொழிந்திருக்கிறார். பின்னாளில் 2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற திராவிட நாயகர் திராவிட மாடல் அரசை முன்னெடுத்து நடத்துகின்ற நம் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் உரிமையை அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும், நியமனப் பொறுப்பு வழங்கி, இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக, சட்டத் திருத்தத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து, அதுவும் மாற்றுத்திறனாளி தோழர்களை சட்டமன்றத்திற்கு வரவழைத்து, அவர்கள் முன்னால் இச்சட்டத்தை நிறைவேற்றி, மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றில், புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.
இதற்கான முன்னோடியாகவும், அரசியல் கோட்பாட்டின் அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்தவராகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 2018 இல் நடந்த சென்னை பிரகடனத்தின் வழியாக நம்மையெல்லாம் அடுத்த களத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்கள் என்பது தான் யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் நீதியும், அரசியல் தளத்தில் உடலால் ஒடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நீதியும், அரசியல் கோரிக்கையை சரிவர முன்மொழிந்து, சமூக நீதி அரசியலை 180 டிகிரி அளவில் நில்லாமல், 360 டிகிரி அளவில் எடுத்துச் சென்ற பெருமை, நம் தமிழ்நாட்டின் தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களையே சாரும். நமது ஆசிரியர் அவர்கள் நீடூடி வாழ்ந்து இன்னும் பல சமூகப் புரட்சிகளை, கருத்தியல் தெளிவுகளை நமக்கெல்லாம் வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சார்பாக விழைந்து வாழ்த்துகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
