சென்னை, டிச. 2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2025) அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கழகத் தோழர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று (2.12.2025) காலை தமிழர் தலைவர் இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். ஆசிரியர் கி.வீரமணி-மோகனா இணையர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன் சென்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து பெரியார் திடலுக்கு கொட்டும் மழையிலும் வருகை தந்த கழகத் தலைவருக்கு பெருந்திரளாகக் கூடியிருந்த கழகத் தோழர்கள் ‘தமிழர் தலைவர் வாழ்க’ என்ற ஒலி முழக்கத்துடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்து நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிறந்த நாள் மேடைக்கு கழகத் தலைவர் வந்தவுடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்-
சி.வெற்றிச்செல்வி இணையர் மற்றும் மாநில கழக நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து ஆசிரியர் கி.வீரமணி-மோகனா இணையருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க வைக்கப்பட்ட உண்டியலில் நிதியை செலுத்தினர்.
மேடையில் அமர்ந்திருந்த கழகத் தலைவ ருக்கு கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், பத்திரிகையாளர்கள், பெரியார் கல்வி நிறுவன நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துக் கூறினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர்கள் சாக்கோட்டை அன்பழகன், நீலமேகம், துரை சந்திரசேகர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், உ.பலராமன் (காங்கிரஸ்), புலவர் பா.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மேனாள் துணைவேந்தர் திருவாசகம், கோவை கு.ராமகிருஷ்ணன், பேராசிரியர் மு.நாகநாதன், மேனாள் நீதிபதி இரா.பரஞ்சோதி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், சட்டமன்ற பேரவையின் மேனாள் செயலாளர் மா.செல்வராஜ், பேராசிரியர் வா.மு.சே.திருவள்ளுவன், தமிழ்நாடு அரசின் செய்தித்துறை மேனாள் அதிகாரி அம்பலவாணன், திமுக செய்தி தொடர்பாளரும், மேனாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக அமைப்புச செயலளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி,
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி மற்றும் பல்வேறு கட்சித் தோழர்கள் திரளாக வந்து தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
