தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி .வீரமணி தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்.
டிசம்பர் 2 அவருக்குப் பிறந்தநாள். 93 வயது.
பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தோழர்கள் ஏற்பாடு செய்துவிட்டார்கள்.
இரண்டு நாள்கள் விழா.
“கருத்தரங்கம்”
“கவியரங்கம்”
“வாழ்த்தரங்கம்”
“பட்டிமன்றம்”
“புத்தக வெளியீடு” என்று அடர்த்தியான நிகழ்ச்சிகள் .
திடல் மகிழ்ச்சிக் கடலானது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோழர்கள் ஏராளமாகக் கூடினார்கள்.
கருஞ்சட்டை அணிந்தவர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், பொதுவானவர்கள், தாய்மார்கள், கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், தமிழின உணர்வாளர்கள் என்று பெருங்கூட்டம் மண்டபத்தில் முண்டியடித்தது.
ஆசிரியர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர் அல்லர்; அதிகாரத்தில் உள்ளவர் அல்லர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற பதவி மட்டுமல்ல; ஊராட்சி மன்ற பதவி கூட அவரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் கூட்டம் அலைமோதியது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம். தலைவரை நெருங்கி வாழ்த்துச் சொல்லும் அளவில்லா ஆர்வம் . உள்ளத்தில் அன்பின் பெருக்கு. சுயநலம் கலக்காத தூயத் தோழமை. புரட்சிக் குரல் ஓங்கி ஒலிக்கும் ராதா மன்றத்தில் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என்று ஓயாது ஒலிக்கும் முழக்கம்.
மழைக்கு முன்னால் மேகம் கருப்பதும், மின்னல் வெட்டுவதும், இடி முழங்குவதும் வாடிக்கை. அதுபோல பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாளே பெரியார் திடல் களை கட்டி விட்டது. டிசம்பர் 1 மாலை 7 மணிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி . பூங்குன்றன் தலைமையில் சிறப்புக் கருத்தரங்கம். நுட்பமான தலைப்பு. தலைவரை முன்னிலைப்படுத்தாமல் இயக்கத்தை முன்னிறுத்தும் தலைப்பு. உரை நிகழ்த்தும் கருத்தாளர்கள் அனைவரும் பெரியாரியலில் தோய்ந்தவர்கள். இயக்கச் செயல்பாடுகளில் ஊறியவர்கள். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால் வரவேற்புரை நல்கினார்.
கருத்தரங்கம் தொடங்கியது. உரையாளர்களுக்கு வழங்கப்பட்ட 15 நிமிடத்தில் அனைவரும் சரியாக தம் சொற்பொழிவுகளை நிறைவு செய்தனர்.
முதலாவதாக தஞ்சை இரா. பெரியார் செல்வன், “இயக்கம் சந்தித்த எதிர்ப்புகளும் அடக்குமுறைகளும்” எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
- தமிழர் தலைவர் மீது மம்சாபுரம், தம்மம்பட்டி, வடசென்னையில் தொடுக்கப்பட்ட வன்முறைகளைப் பட்டியலிட்டார்.
- டில்லி பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட வரலாற்றை உணர்ச்சி பொங்க விவரித்தார்.
- பிரதமர் வாஜ்பாய் சந்திப்பையும், இடிக்கப்பட்ட பெரியார் மய்யத்திற்குப் பதிலாக இரண்டு மய்யங்களை உருவாக்கிய ஆசிரியரின் திறத்தையும் எடுத்துரைத்தார்.
- “தடா” சட்டத்தை முறியடித்த விவேகத்தை விளக்கினார்.
“தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத்தின் இலட்சியப் பயணத்தில் ஏடுகளும் வெளியீடுகளும் “எனும் தலைப்பில் பேராசிரியர் நம் . சீனிவாசன் கருத்துரை வழங்கினார்.
- தந்தை பெரியார் காலத்தில் நான்கு பக்கமாக இருந்த’ விடுதலை ‘ இப்போது எட்டுப் பக்கங்களில் வெளிவருகிறது.
- இணைய வழியில் ‘ விடுதலை’ வாசிக்கப்படுகின்றது.
- Periyar Vision OTT இயங்குகிறது .
- பெரியாரின் மறைவுக்குப் பின் புதிய இதழ்கள் பெரியார் பிஞ்சு, திராவிடப் பொழில் வெளி வருகின்றன.
- தந்தை பெரியாருக்குப் பின் ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது
- பெரியார் களஞ்சியம் 38 தொகுதிகள்,
- ‘குடிஅரசு’ களஞ்சியம் 42 தொகுதிகள்
- உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு 12 தொகுதிகள்
- திராவிடர் கழக வரலாறு இரண்டு தொகுதிகள்
- தமிழர் தலைவர் ஆசிரியரின் 300 க்கு மேற்பட்ட நூல்கள்
- அறிஞர் அண்ணா, கலைஞரின் நூல்கள்
என்று வரிசைப்படுத்தினார்.
- ‘வரலாற்று நிகழ்வுகளை ஆவணமாகப் பாதுகாப்பதில் தமிழர் தலைவருக்கு நிகர் உலகில் எவரும் இல்லை’ என்றும், ‘தி.மு.கழகத் தம்பிமார்கள் அதனைப் பின்பற்ற வேண்டும்’ என்றும் 2008 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டினார்.
வழக்குரைஞர் சு. குமாரதேவன் கருத்தாழமிக்க உரையை வழங்கினார். சமூக நீதியை விளக்கினார்.
- சமூக நீதி சந்தித்த சட்டப் போராட்டங்களை கண் முன்னால் காட்சிப்படுத்தினார்.
- வரலாற்றை மண்டலுக்கு முன் மண்டலுக்குப் பின் என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
- அ.தி.மு.க .அரசு கொண்டு வந்த 9,000 ரூபாய் வருமான வரம்பாணையை எதிர்த்த வரலாற்றையும், மண்டல் குழு அமைக்கப்பட்ட நிகழ்வு, அறிக்கை வெளியிட வலியுறுத்தியது, நடைமுறைப்படுத்த போராட்டங்களை நடத்தியது எல்லாவற்றையும் விளக்கினார்.
- தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்த போது 31 சி சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்றையும் அதில் தமிழர் தலைவர் ஆசிரியரின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
- தந்தை பெரியார் அவர்களின் முயற்சியால் நடைபெற்ற முதலாவது அரசியல் சட்டத் திருத்தம், ஆசிரியர் அய்யா அவர்களின் முயற்சியால் நடைபெற்ற
76ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இவற்றை நுட்பமாகக் குறிப்பிட்டார்.
தகடூர் தமிழ்ச்செல்வி உரையில் பெண்ணுரிமைக் கருத்துகள் அணிவகுத்தன.
- தந்தை பெரியாருக்குப் பின் பெண் விடுதலைக்காக திராவிடர் கழகம் ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டார்.
- பெண்களை இழிவாகப் பேசிய பூரி சங்கராச்சாரியாருக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்திய போராட்டத்தை விவரித்தார்.
- சபரிமலை கோயிலில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து கழகம் நடத்திய போராட்டத்தைக் கூறினார்.
- தருமபுரியில் நடைபெற்ற பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தை விவரித்தார்.
- பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டங்களை இயற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்து பட்டம் வழங்கியதையும் நினைவு கூர்ந்தார்.
முனைவர் அதிரடி க. அன்பழகன் உணர்ச்சிமயமாய் உரை நிகழ்த்தினார். தந்தை பெரியாருக்குப் பின் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் பணிகளை விவரித்தார்.
- மற்றவர்கள் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் மட்டும் நிகழ்த்துவார்கள். ஆனால் தம்முடைய குடும்பத்திலேயே மண விழாக்களில் ஜாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர் தமிழர் தலைவர் என்பதை எடுத்துரைத்தார்.
- ஜாதி ஒழிப்புக்காக நடைபெற்ற பிரச்சாரத்தை, பேரணிகளை, பெரும் பயணத்தை, மாநாடுகளை வரிசைப்படுத்தினார்.
- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வந்ததற்கு தமிழர் தலைவரின் பங்களிப்பை எடுத்துரைத்தார்.
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, அன்னை மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற ஆக்கப் பணிகளைப் பட்டியலிட்டார்.
- ராவண லீலா நடத்தியதை எடுத்துரைத்தார்.
- அவசரநிலை காலத்தில் இயக்கத்தை நடத்திய திறத்தை விளக்கினார்.
- ஆளுநர் மாளிகையில் உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.
- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வருவதற்காக ஒன்றிய அமைச்சர் ஒய்.பி. சவான் அவர்களுக்குக் கருப்புக்கொடி காட்டியதை விவரித்தார்.
வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் கணீரென்ற குரலில் பெரியார் உலகமயமாவதை எடுத்துரைத்தார்.
- சுயமரியாதை இயக்கம் உலக இயக்கம் என்று தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மொழிந்ததை நினைவூட்டினார்.
- தந்தை பெரியார் அவர்கள் மலேசியாவிற்கு சென்றதை, சிங்கப்பூருக்கு சென்றதை, இலங்கைக்கு சென்றதை வரிசைப்படுத்தினார்.
- தந்தை பெரியாரின் அய்ரோப்பியச் சுற்றுப் பயணத்தையும் விவரித்தார்.
- தந்தை பெரியாரின் வடநாட்டுச் சுற்றுப்பயணத்தை எடுத்து கூறினார்.
- வாழும்போதே தந்தை பெரியார் தம்முடைய கருத்துகளை உலகம் முழுதும் பரப்யதை எடுத்துக் கூறிய பிரின்சு என்னாரெசு பெரியார் அடுத்த கட்டமாக தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெரியாரை உலகமயமாக்குவதை வெளிப்படுத்தினார்.
- ஆசிரியர் அய்யா அவர்களின் ஆங்கிலப் புலமை தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் உலகம் முழுவதும் செல்வதற்குப் பயன்பட்டதை சுட்டிக்காட்டினார்.
- அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் ஜெர்மனிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றபோது தந்தை பெரியாரின் அமைப்புகள் வரவேற்றதை எடுத்துக் கூறி வியக்க வைத்தார்.
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் உரையுடன் பெரியார் விழா நடைபெறுகிறது.
- “பெரியாரை உலகமயமாக்குவோம் என்ற லட்சியத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர் தலைவருடன் எங்களையும் இணைத்துக் கொள்கின்றோம் ” என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை உணர்ச்சி பொங்க விளக்கினார்.
- உலக நாத்திக அமைப்புடன் இணைந்து உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்புவதை எடுத்துக் கூறினார்.
- உலக நாத்திக அமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததையும் இயக்கச் செயல்பாடுகளை கண்டு வியந்ததையும் பட்டியலிட்டார்.
- நாத்திகத்தின் தாய் பூமி தமிழ்நாடு என்றார்.
- தந்தை பெரியாரின் நினைவு நாளில், அவருடைய புத்தகங்களை அமேசானில் 50 ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்ததை மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்; அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.
முனைவர் துரை .சந்திரசேகரன், திராவிடர் கழக இயக்கத்தைப் பற்றியும், அறக்கட்டளைகளின் பணிகள் குறித்தும் கார் மேகமெனக் கொட்டினார்.
- பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
- பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்
- திராவிடர் கழகம் இயக்கம் ஆகிய மூன்று அறக்கட்டளைகள் பற்றி கூறினார்.
- வருமானவரித்துறையினர் கொடுத்தத் தொல்லை, அதிலிருந்து மீண்ட திறன் பற்றி விளக்கினார்.
- இயக்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றார்.
- நூற்றாண்டு விழாவில் ஒரு ரூபாய் நன்கொடை தந்த மக்கள் இன்றைக்கு நன்கொடையாக ஒரு லட்ச ரூபாய் தருகிறார்கள் என்றார்.
கருத்தரங்கத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையுரையில் தந்தை பெரியாருக்குப் பின் இலட்சியப் பயணம் தொடர்வதை செறிவாக விளக்கினார். கருத்துகளை அடுக்கினார். எல்லாத் தலைப்புகளிலும் செய்திகளைத் தொகுத்துத் தந்தார். 9ஆயிரம் ரூபாய் வருமான வரம்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவத்தை சொற்களால் ஓவியம் தீட்டினார்.
நிறைவுரை நிகழ்த்திய தமிழர் தலைவர்,
- தந்தை பெரியாருக்கு பின் பெரும் சாதனை நடைபெற்றிருக்கிறது. அதற்கு தலைமை மட்டும் காரணம் அல்ல; அனைவரின் கூட்டு உழைப்பு காரணம் என்றார்.
- இந்த கருத்தரங்கத்தை மீள் பார்வை, மீள்வாசிப்பு என்று வர்ணித்தார்.
- இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைகளை விவரித்தார்.
- நள்ளிரவில் தந்தை பெரியாரின் சிலைக்கு தம்முடைய குடும்பத்தார் மாலை அணிவித்ததை சுருக்கமாகச் சொன்னார்.
- அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தையும் எடுத்து கூறினார்.
- திருவாரூரில் நடைபெற்ற காவிரி நீர் போராட்டத்தில் பெண்கள் காட்டிய ஆர்வத்தை நினைவு கூர்ந்தார்.
- இந்த இயக்கம் மின்சாரம் போன்றது ; எல்லோருக்கும் பயன்படும் என்றார்.
- இந்த இயக்கம் எப்போதும் தோற்றதில்லை என்றார்.
- நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி, நரிமணம் பெட்ரோலுக்கு ராயல்டி பற்றி முதலமைச்சர் கலைஞருடனான பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றியுரையுடன் விழா இரவு 9.40 மணிக்கு நிறைவு பெற்றது. தலைவர் பிறந்தநாள் விழாவின் முதல் நாள் நிகழ்வு இயக்க வரலாற்றை நினைவூட்டுவதாக, தோழர்களுக்கு எழுச்சியூட்டுவதாக அமைந்தது.
“நூறு நூல்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகளை ஒரு கூட்டத்திலே பெற்றோம்” என்று பார்வையாளர் ஒருவர் நெகிழ்ந்து கூறிய வாசகமே கருத்தரங்கின் வெற்றி ; பிறந்தநாள் விழாவின் வெற்றியும் கூட .
மகிழ்ச்சி தொடரும்….
