மொரேனா, நவ.8 பல கோடி ரூபாய் கேட்டு ஒன்றிய அமைச்சரின் மகன் பேசும் காட்சிப் பதிவு வைரலாகியுள்ளது.
ம.பி. சட்ட பேரவைக்கு தேர்தலில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிம்னி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். நரேந்திர தோமரின் மகனான தேவேந்திர பிரதாப் சிங் தோமர் பண பரிவர்த்தனைகள் குறித்து சிலரிடம் பேசும் காட்சிப் பதிவு ஒன்று சமூக தளங்களில் வைரலானது. அந்த காட்சிப் பதிவில் ராஜஸ்தானை சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தை மாற்றக் கோரி, ஒரு நபருடன் தேவேந்திரா வீடியோ அழைப்பில் பேசுவதைக் கேட்கலாம். பரிவர்த்தனைகளுக்கு அய்ந்து வெவ்வேறு கணக்குகளின் விவரங்களை அந்த நபர் கேட்கிறார். இந்த காட்சிப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5.11.2023 அன்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா ,‘‘ஒரு அமைச்சரின் மகன் ரூ.1000 கோடி,ரூ.100 கோடி லஞ்சம் கேட்கும் காட்சிப் பதிவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாஜ ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதை நிரூபிக்கும் வகையில் இது உள்ளது’’ என்றார்.
இதனிடையே,இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தேவேந்திர பிரதாப் காட்சிப் பதிவு போலியானது என மறுத்துள்ளார். சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் மகனின் இந்த காட்சிப் பதிவு ம.பி. தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.