சுழன்றடிக்கும் சூறாவளியாக, ஏர் உழவனாக யாதுமாகி நிற்கும் நாயகர்! புலவர் பா.வீரமணி

9 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 

ஏதெல்லாம் பார்த்ததே இந்நாள் நடப்பனவோ?

ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ?”

என்று அன்றைய இந்தியாவின் அரசியல் நிலையை எண்ணி வருந்திக் கலங்கினார் பாரதியார். அந்த அபாய நிலை, இப்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. அரசியலில் நடத்தும் தில்லுமுல்லுகளை, சமுதாய வாழ்நிலையிலும் வன்மமாகப் புகுத்திக் கொண்டிருக்கிறது இப்போதைய பா.ஜ.க. அரசு. நீட்தேர்வு. விஸ்வகர்ம போஜனா போன்ற பயனற்ற பிற்போக்குத் திட்டங்களை வகுத்து நாட்டைப் பிற்போக்குத் திசையில் இழுத்துச் செல்கிறது பா.ஜ.க. அரசு என்றால், அதன் தலைமை அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்கள் பிள்ளையார் சிலையைச் சுட்டிக்காட்டி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரியை அறிந்திருந்தார்கள் என்று திருவாய் மலர்ந்தருளியதை என்னவென்று இயம்புவது. இதனைப் போவே, டில்லியில் காற்றுமாசு மிகப் பரவலாகப் பரவியிருப்பதை அகற்ற, பிரதமர் யமுனை ஆற்றில் இறங்கி சத்பூஜை செய்ய இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. இப்பூசை கடவுளான சூரியனையும், சூரியனின் மனைவியான உஷாவுக்கும் பலன் வேண்டி செய்யும் பூஜையாகும் என்பர். காற்று மாசை அகற்ற எத்தனையோ விஞ்ஞான முறைகள் இருக்கும்போது நம் பிரதமர் சத் பூஜை செய்ய நினைப்பது எத்தனைப் பிற்போக்குத்தனமானது என்பது சொல்லாமலேயே விளங்கும். இந்த மூடத்தனமான திட்டங்களின் தொடர்ச்சியின் சொல்பவன் தான் பா.ஜ.க. அரசு.

ஒன்றிய அரசும், பிரதமரும்தான் இப்படியென்றால் நம் தமிழ்நாடு ஆளுநரோ யாருக்கும் குறைந்தவர் இல்லை என்பதை அவர் பலமுறை மெய்யாக்கிக் கொண்டிருக்கிறார். அவரோ திராவிடம் என்பது மாயை என்றும், மொழி வழி மாநிலம் அமைத்தது தவறு என்றும், ஸநாதனமே உண்மையானதென்றும் நிலையானதென்றும் சிறிதும் வெட்கமின்றி, அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், தத்துவத்திற்கு முரணாகவும் அவ்வப்போது குப்பையைக் கொட்டுவதைப் போல் கொட்டிக் கொண்டிருக்கிறார். இவற்றை எல்லாம் ஒருங்கே நினைத்துப் பார்த்தால்

“பொய் சூது தீமை யெல்லாம்

அரணியத்தில் பாம்புகள்போல்
மலிந்து வளர்ந்து

ஓங்குனவே அந்த நாட்டில்”

என்று பாரதியார் கூறியது போலத்தான் தாமும் கூற வேண்டியுள்ளது. மேற்கூறிய இருளும், முள்ளும், பொய்யும், பித்தலாட்டமும் பெருகியுள்ள சூழலில்தான், நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 29.10.2025 முதல் 7.1.2026 வரை 39 மாவட்டங்களில் காலை, மாலை, இரவுகளில் தொடர் பரப்புரை செய்து வருகிறார். அவர் 92 வயதைக் கடந்து 93 வயதில் இந்தப் பரப்புரையைச் செய்ததைச் சாதாரணமாகக் கருதமுடியாது.

சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த பகுத்தறிவாளர் கருத்தரங்கில் பங்கேற்ற சுற்றுப்பயணத்தில் அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டது. அதனால் செவிப்புலன் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. அவர் மேலும் ஓய்வு எடுக்க வேண்டிய சூழலில், மீண்டும் மக்களுக்காகப் பரப்புரை செய்ய கிளம்பி விட்டார். அதுவும் 92 வயதில். இந்தப் பயணம் நெடும் பயணம் மட்டுமின்றி; கடும் பயணமும் ஆகும். இப்பயணத்திற்கு முன்னர், அவர் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஜனவரி 2020 முதல் 30 ஆம் தேதி வரை பல இடங்களில் பரப்புரை செய்ததும், தி.மு.க.வின் கூட்டணி கடந்த தேர்தலில் வெற்றி பெற 18.3.2021 முதல் ஏப்ரல் இறுதிவரை பரப்புரை செய்ததும் மறக்க முடியாதவை. இப்பயணத்தின்போது கரோனா காய்ச்சல் அடித்துக் கொண்டிருந்தபோதும், அவர் சற்று உடல்நலமின்றி இருந்த போதும், பரப்புரையை அவர் தொடர்ந்தார்  என்பதுதான் முக்கியமானது. நீட் தேர்வை எதிர்த்து 14.4.2022 முதல் 25.04.2022 வரை அவர் அனல் வீசும் பரப்புரை செய்ததும் மறக்கமுடியாத வரலாற்றுச் சாதனையாகும். அந்தச் சாதனையின் குறியீடே அவர். இப்போது அவரதுபரப்புரை “இதுதான் ஆர்.எஸ். எஸ்.-பா.ஜ.க.ஆட்சி’ இதுதான் “திராவிட மாடல் ஆட்சி” என்று பொருள் பற்றியதாகும். பாசிசமும், நாசிசமும் கலந்த ஒரு கலவைதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அது சாதி – மத வேறுபாட்டை கற்பிப்பது, காப்பாற்றுவது. இக்கொள் கைக்கு முழு முரணானது திராவிடம். பெண் சமத்துவம், பாலினச் சமத்துவம், பொருளாதாரச் சமத்துவம், விதவை மறுமணம், ஆகியவற்றை மூச்செனக் கொண்டது திராவிடம்; ஆர்.எஸ்.எஸ் இவற்றை முழுமையாக மறப்பது இந்தத் தத்துவப் போர். நம் நாட்டில் பற்பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. பவுத்தத்தை வீழ்த்திப் பார்ப்பனீயம் இப்போது திராவிடத்தை வீழ்த்த வலை விரிக்கிறது. அது இங்கு நடக்காது. சங்க காலம் முதல் பெரியார் காலம்வரை தமிழ் மண் வேதக் கொள்கையைத் தொடர்ந்து காத்திரமாகி மறுத்து வருவது இதுதான் வரலாறு. நழுவல்களும், தழுவல்களும், இருந்திருந்தாலும், இயற்கையை, மெய்ம்மையை, ஒன்றுபட்ட மாந்தநேயத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருவதுதான் தமிழ்ச்சிந்தனை மரபாகும்.

இந்த மரவை மேலும் வலிமையாகத் தூக்கிப் பிடித்தவர்தான் தந்தை பெரியார். இதனை இவருக்கு முன்னர் பரப்புரை செய்தவர்கள் தாம் சித்தர்களும், அயோத்திதாஸ் பண்டிதரும், சிங்காரவேலயரும், இலட்சுமிநரசும் போன்ற சான்றோர்கள் ஆவர். இப் போது தந்தை பெரியாரைத் தொடர்ந்து ஆசிரியர் அக்கொள்கையை வலியுறுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சி தான் ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” என்பதாகும். தந்தை பெரியாரின் காலத்தைவிட ஆபத் தும், சிக்கலும், நெருக்கடியும் மிகுந்த காலம் இக்காலம். கெடுவாய்ப்பால் பிற்போக்கு மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்ட பிற்போக்குச் சக்தி ஒன்றிய அரசை ஆண்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக,

‘பேய் ஆட்சி செய்தால்

பிணம் தின்னும் சாத்திரங்கள்”

என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. இந்த அவலநிலைதான் நம் நாட்டில் இப்போது தாண்டவமாடுகிறது. இந்தச் சூழலில்தான் நம் ஆசிரியர் பா.ஜ.க. அரசின் பிற்போக்குத்தனத்தை மோசடியை தோலுரித்துக் காட்டவே மாவட்டங்களில் பரப்புரை செய்யக் கடும் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஓர் ஏர் உழவன்: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின், பா.ஜ.க. ஆட்சியின் வஞ்சகத்தை மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டவே, தி.மு.க.வின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தன்னிகரில்லாத் தலைவரான தளபதியாகவும் களமாடவே ஒரே மனிதராகக் களமாட புகுந்துள்ளார். யாருக்காகக் களமாட புகுந்துள்ளார்? இதுதான் மிக முக்கியமானது. திராவிடர் கழகத்தின் சார்பில் அவர் களமாடினாலும், தி.மு.க.வுக்காகவும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகவும், ஒட்டுமொத்த திராவிட மக்களுக்காகவும், மற்றும் இவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும், ஏனைய பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராகவும் போராடவே களத்தில் இறங்கியுள்ளார். தலைவர்கள் பலர் கூடிச் செய்ய வேண்டிய பெருஞ்செயலைத் தாம் ஒருவராக நின்று செயலாற்றுவது எத்தனை பெரிய செயல்; இதில் எத்தனை சிக்கல்கள் வரும்? எத்தனை நெருக்கடிகள் வரும்? எத்தனை கஷ்டங்கள் இருக்கும்? எத்தனை சவால்கள் இருக்கும்? ஆம் இவற்றை எல்லாம் கடந்து செல்பவராகவே ஆசிரியர் உள்ளார். அதுவும் தொண்ணூறு வயதைத் தாண்டிய நிலையில் இவற்றை எல்லாம் செய்கிறார். ஆசிரியரின் இப்பெருஞ் செயலை எண்ணும்போது உலகப் பெருங் கவிஞர் சேக்ஸ்பியர் எழுதியிருப்பதுதான் நினைவுக்கு வருகிறது.

“Youth is nimble, age is lame

Youth is hot and cold; age is weak

and cold” (The Passionate Pilgrim)

இளமை வேகமும், சக்தியும், உறுதியும் வாய்ந்தது, முதுமையோ நொண்டித்தனமும், ஆற்றல் இன்மையும், இயலாமையும் கொண்டது என்கிறார் அவர். நம் ஆசிரியர் அந்த முதுமையைத் தான் வெல்கிறார். இந்த முதுமையை அவரால் எப்படி வெல்ல முடிந்தது? ”அசைவிலா ஊக்கம் உடையான் உழை”  என்று கூறிய வள்ளுவர் பேராசானின் வழிவந்த கொள்ளுப்பேரனாகவும், தந்தை பெரியாரின் தலைமைச் சீடராகவும் இருப்பதானல் தான் அது முடிந்தது எனலாம்.

திராவிடர் கழகம்

முதுமையில் நம் ஆசிரியர் 39 மாவட்டங்களிலும் பகல் இரவு பாராமல் தலைமைப் பேச்சாளராக சூறாவளியாக தாம் ஒருவராகவே உரையாற்றுவதை எண்ணும்போது குறுந்தொகையில் ஓர் ஏர் உழவன் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. அதாவது, பொருள் ஈட்ட வேண்டி தலைவன், தலைவியை விட்டுப் பிரியும்போது, அவன் பொருளை ஈட்டியதும், கார்காலத்திற்கு முன்னர் வந்துவிடுவதாக உறுதி கூறுகிறான். கார்காலம் வந்துவிட்டதால் தம் தலைவியை எண்ணி விருப்புற்று உடனே சொந்த ஊருக்குத் திரும்ப விழைகிறான். அப்படி விரும்போது அவன் மனநிலை எப்படியிருந்தது என்பதை அப்புலவர் ஓர் உவமை மூலம் அழகாகப் புலப்படுத்துகிறார். அதாவது, மழையால் ஈரம் கொண்ட பரந்த வயலை, அதன் ஈரம் காய்வதற்குமுன் ஒரே ஏரினைக் கொண்டு தாம் ஒருவனாக அந்தப் பரந்து விரிந்த வயலை உழவன் எப்படி விரைந்து உழுவானோ அப்படி அவன் நெஞ்சம் அவனுடைய தலைவியைக் காண விரைகிறது என்கிறார்.

ஈரம்பட்ட செவ்விப் பைம்புணத்து!

ஓர் ஊர் உழவன் போலப்

பெருவிதுப் புற்றனல் தேயகோ யானே!

– குறுந்தொகை – 131

ஒரே ஏரினைக் கொண்டு பரந்து பிரிந்த நிலத்தை விரைந்து உழும் அந்த உழவனைப்போல நம் ஆசிரியர் தாமே ஒருவராகவே பரந்து விரிந்த தமிழ்நாட்டில் கடும் பரப்புரையை மேற்கொண்டிருக்கிறார். சிங்க கால அத்தலைவன் நிலத்து ஏர் உழவன் என்றால், நம் ஆசிரியர் சொல்லோர் உழவர் எனலாம்.

யாதுமாயி நிற்கும் நாயகர்:

மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, வருண ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம், சமயவெறி ஆகியவற்றைக் குறித்து ஆசிரியர் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ததைப் போன்று அவர், கடந்த காலத்தில் பகவத் கீதையின் மாயை ஒழிக்க ‘கீதையின் மறுபக்கம்’ என்னும் ஆய்வு நூலை எழுதி விழிப்பை ஏற்படுத்தியது போல, சங்கராச்சாரி யார்? என்று அறிவுப் பிரச்சாரம் செய்ததோடு, பிற்போக்குச் சிந்தனையாளர்கள் அருண் சோழி, சோ போன்றோர்க்கு அவ்வப்போது மறுப்புரை அளித்ததும் நாம் அறிந்தவையாகும். இவையெல்லாம் பிற்போக்குச் சக்திகளை எதிர்த்து அவர் நடத்திய கருத்துப் போர், தத்துவப்போர் ஆகும். இவ்வாறு கருத்துக் களத்தில் போராடும் வெற்றி  வீரரான அவர், சமூக தளத்திலும் விகிதம் அறியப் போராளியும் ஆவார். இதற்குச் சிலவற்றை நோக்கினாலேயே உணரலாம். குறிப்பாக, சமுகநீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டுக்குத் தடையா? முத்தலாக் கொடுமைச் சட்டமா? மதமாற்றச் சட்டமா? மாற்றுத்திறனாளிகளுக்கு முட்டுக்கட்டையா? மூன்றாம் பாலினத்தவர்க்குக் கொடுமையா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடையா? தமிழ்வழிபாட்டுக்கு மறுப்பா? ஸநாதனம் சமத்துவம் நிறைந்ததா? இவ்வாறு தமிழ்ச் சமுதாயத்திற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் அனைத்துத் துறைகளிலும் இவரது சிந்தனையும், செயலும் போர் முரசு கொட்டி வருகின்றன.

ஸநாதனம் என்பது மனித தர்மம் என்றும், அது நிலையானது என்றும் பெருமையுடையது என்றும் தமிழ்நாடு ஆளுநர் கூறியபோது, அதனை உடனுக்குடன் எதிர்த்து எழுதியும், பேசியும் மட்டுமல்லாமல், அதனைத் தோலுரித்துக் காட்ட அனைத்துக் கட்சியினரையும் அழைத்துப் பெரியார் திடலில் பேசவும் வைத்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்பமை கவாய் அவர்கள் மீது ஒரு பிற்போக்கு வழக்குரைஞர் செருப்பு வீசியபோது அதனை உடனே கண்டித்து அறிக்கை விடுத்தும், பேசியும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பெரியார் திடலில் அதற்கு மாபெரும் கண்டனக் கூட்டம் நிகழ்த்தியும் காட்டினார். எப்போதெல்லாம் சமூகநீதிக்கும், ஒற்றுமைக்கும், அதன் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் பெரியார் திடல் பகுத்தறிவுப் பாசறையாக, கொள்கை உரைக்களமாக ஆர்ப்பரிக்கும்; கொப்பளிக்கும்; குமுறும் எரிமலையாக வெடிக்கும்; போர் ஒலியை எழுப்பும். முரசு கொட்டும், சூரியனாக, தீயவற்றை, வேண்டாதவற்றை தீய்க்கும்; மாய்க்கும் தன்மையைப் பெருக்கும்; பகுத்தறிவை வளர்க்கும். அதுதான் பெரியார் திடல்; அதன் தலைவர் தான் ஆசிரியர். இவ்வாறு நம் ஆசிரியர் அரசியல் மற்றும் சமுதாயம், இனம், மொழி போன்ற அனைத்துத் துறையிலும், தம் சிந்தனையைச் செலுத்துபவர். சூரியனின் கதிர் அனைத்திலும் பரவுவதைப் போல் அவரது சிந்தனையும் அனைத்திலும் ஊடுறுவும். பாரதியார் ஆன்மீகப் பார்வையில் அனைத்திலும் நிறைந்திருக்கும் சக்தியை “யாதுமாகி நின்றாய்” என்றார். சமுதாயப் பார்வையில் நாம் ஆசிரியரை “யாது மாகி நிற்கும் நாயகர்’ என்று போற்றலாம் அன்றோ! கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது (2021) ஆசிரியர் தி.மு.க. கூட்டணியை ஆதரித்துப் பரப்புரை செய்து முழு வெற்றியடைய உதவினார். இதனைப் போலவே “இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்னும் பரப்புரைப் பயணம் செய்து வெற்றியை ஈட்டித் தரும் என்பதில் அய்யமில்லை. பயணம் தொடரட்டும்; வெல்லட்டும். 2.12.2025 அன்று 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் ஆசிரியருக்கு ஆயிரம் வாழ்த்துகள்

“Never take things at my ease

I must press on without rest”

“நான் எதனையும் சுலபமானதாக

எண்ணவில்லை

நான் ஓய்வில்லாமல் முன்னேற

வேண்டும்”

-காரல் மார்க்ஸ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *