சென்னை, நவ.29– டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து தி.மு.க. நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், “தித்வா புயல்” எதிர்கொள்ள அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதோடு, மாவட்டங் களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரை களும் வழிகாட்டுதல்களும் வழங்கப் பட்டுள்ளன.
மக்களுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும்
மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப் பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்ற மில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் கழகமும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என கழக உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக – ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும்.
மழைக்காலத்தில் கழகத்தினர், பொதுமக்கள் – தன்னார்வலர் களுடன் இணைந்து பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.
குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும், ஆங்காங்கே நடைபெறும் மீட்பு பணிகளிலும் உதவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மழைக்காலத்தை எதிர்கொள்ள வும் – பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையிலும் கழகம் களத்தில் முழுமூச்சுடன் துணையாக நிற்க வேண்டும் என கழக உடன்பிறப்புகளையும் நிர்வாகி களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
