ஆஸ்திரேலியாவில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

12 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டாக்டர். அண்ணாமலை மகிழ்நன்
தலைவர், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம்.

இந்தியா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 1,2, 2025இல் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி! நன்றி!!

2025 மார்ச் மாதம், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அய்யா அவர்களும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களும், பன்னாட்டு பெண்கள் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியாவிற்கு வந்திருந்தனர். மெல்போர்ன் நகரில் ஆசிரியர் அவர்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாக் குழு உறுப்பினர் அரங்க மூர்த்தி, தன் காரில் அழைத்துச் சென்றார். அப்பொழுது, ஆசிரியர் அவர்கள் அடுத்த பன்னாட்டு மனித நேய மாநாட்டை, அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டமைப்போடு இணைந்து ஆஸ்திரேலியாவில், மெல்போர்னில் நடத்துங்கள் என்றார்.

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆசிரியர் அவர்களால், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தம்பி தொல் திருமாவளவன் வாழ்த்துக்களோடு தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்க விழா முடிந்து 8 மாதங்களிலேயே சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், வழக்குரைஞர் அருள்மொழியும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். உடனே இன்னொரு மாநாடா, எப்படி நடத்துவது என்று யோசித்து, “அய்யா, அடுத்த ஆண்டு நடத்தலாம்” என்றேன். அப்பொழுது காரோட்டிக் கொண்டிருந்த மூர்த்தி, “அய்யா, இந்த ஆண்டு (2025) நவம்பரிலே கூட நடத்தலாம்” என்றார். ஆசிரியாரும் மிகவும் மகிழ்ச்சியோடு “நடத்துங்கள் நான் வருகின்றேன்” என்றார்.

சிட்னி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ஆசிரியர் அவர்கள் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முதல் நாள், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளர்களுடன் காணொலி வழியாக உரையாடினார். இந்தக் கூட்டத்திற்கு, அமெரிக்காவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டமைப்பின் (Periyaar International) தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களையும் ஆசிரியர் அவர்கள் அழைத்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தில், ஆசிரியர் அவர்கள் பெரியார் பன்னாட்டமைப்பும், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டமும் இணைந்து நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டினை மெல்போர்ன் நகரில் நடத்த வேண்டும் என்றார்கள். அதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நவம்பர் 1,2, 2025இல் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவர்க்கும் நன்றி தெரிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர்
டாக்டர் சோம. இளங்கோவன்

இந்தியா

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளார்களுடன் கிழமை தோறும் சூம் மற்றும் டீம்ஸ் இணையக் காணொலிகள் வழியாகவும், அலைபேசிக் கூட்டங்களின் வழியாகவும் தொடர்ந்து உரையாடி, உற்சாகமூட்டி இந்த மாநாடு வெற்றி பெறுவதற்கு எல்லா வகையிலும் உதவினார். பெரியார் பன்னாட்டமைப்பின் மூலமாகப் பொருளுதவியும் செய்தார். அதே போல் மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மெல்போர்ன் வந்து, மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் இளைஞர்களோடு, மற்றொரு இளைஞராகப் பணியாற்றினார். அவருடன், அவரது துணைவியார் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களும் எங்களுடன் பணியாற்றி இம்மாநாட்டை இவ்வளவு சிறப்பாக நடத்த உதவினார். பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர், டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கும் அவரது துணைவியார் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களுக்கும், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி.

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி

இந்தியா

நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், திராவிட முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா, அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் தம்பி கார்த்திகேய சிவசேனாபதி, புதிய குரல் அமைப்பின் தலைவர் தங்கை ஓவியா, அய்க்கிய நாடுகள் சபையின் மேனாள் மூத்த அரசியல் அலுவலர் தம்பி டாக்டர் கண்ணன், கருநாடக மாநிலத்தின் மேனாள் தலைமை வழக்குரைஞர் பேராசிரியர் ரவிவர்ம குமார் உள்ளிட்ட பேராளுமைகள் அனைவரையும், ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பாக அழைப்பிதழ் வழங்கி அவர்களை மாநாட்டில் கலந்து கொள்ள தங்கை அருள்மொழி அழைத்தார்.

அதே போல் இந்த மாநாட்டில் மிகச் சிறப்பாக, அறிவார்ந்த சொற்பொழிவுகளை வழங்கிய அனைத்து அறிஞர் பெருமக்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களோடு தொடர்பு கொண்டு அவர்களின் வருகையை உறுதி செய்ததோடு நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்ததிலும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுக்கு நன்றி.

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர்
அரங்க மூர்த்தி

இந்தியா

நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் அமைப்பு, அரங்க ஏற்பாடு, பரிசுப் பொருட்கள், உணவு, போக்குவரத்து, விருந்தினர் வருகை, விமான நிலைய வரவேற்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தன் குழுவினரோடு இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர், தம்பி அரங்க மூர்த்தி அவர்களுக்கு மனங்கனிந்த நன்றி. இவரின்றி இந்த மாநாடு இவ்வளவு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.

அரங்க மூர்த்தியின் திட்டமிடல், ஒருங்கிணைத்தல், அர்ப்பணிப்பு, தளராத முயற்சி ஆகியவற்றை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒவ்வொரு கிழமையும் டீம்ஸ் வழியே குழுவினரின் கூட்டத்தைக் கூட்டி, இறுதி இரண்டு கிழமைகளில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை கூட்டத்தைக் கூட்டி நிகழ்வின் ஒவ்வொரு பகுதியையும் குறைபாடில்லாத செயல்பாடுகளுடன் இந்த மாநாட்டை இவ்வளவு வெற்றிகரமாக நடத்திய அருமைத் தம்பி அரங்க மூர்த்தி அவர்களுக்கு, உளங்கனிந்த நன்றி.

டாக்டர் ஹாரூன்

இந்தியா

இந்த மாநாட்டின் வெற்றிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்த ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்த்தின் துணைத் தலைவரான டாக்டர் ஹாரூனுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டின் திட்டமிடல் மற்றும் முக்கிய செயல்பாடுகளில் அவர் மிக முக்கிய பங்காற்றினார்.

அவருடைய சிறந்த கடிதம் எழுதும் ஆற்றல், பல்வேறு அரசு நிறுவங்களுடனான தொடர்புகளுக்கு மிகப் பெரிதும் உதவியது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களான இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ. ராசா மற்றும் ராஜாத்தி சல்மா எம்.பி. அவர்களையும், கான்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் மேலவைக்கு (Senate) ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூப்ரிட்ஜ் தன்னுடைய விருந்தினராக அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற மேலவையில் அதன் தலைவர் சூ லைன்ஸ் (Sue Lines) அவர்களால் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற மேலவையில் வரவேற்கப்பட்டனர். டாக்டர் ஹாரூனின் மிகச்சரியான ஒருங்கிணைப்பின் மூலமே இந்நிகழ்வு நடந்தது.

ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னணியில் இருந்து அனைத்து செயல்களையும் செய்து வரும் துணைத்தலைவர் டாக்டர் ஹாரூனுக்கு அளப்பரிய நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

தாயுமானவன் பாஸ்கரனார்

இந்தியா

மாநாட்டின் அமைப்புக் குழு உறுப்பினர் தாயுமானவன் பாஸ்கரனார், மாநாட்டு சிறப்பு விருந்தினர்களின் விமான நிலைய வரவேற்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். விருந்தினர்கள் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வரும் நேரம், அவர்களை யார் விமான நிலையத்தில் வரவேற்பது, அவர்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்வது போன்ற ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். பேராசிரியர் சுப. வீ, சிற்பி செல்வராஜ், வள்ளியப்பன், வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா ஆகியோரைத் தனது இல்லத்தில் தங்க வைத்து அவர்களை மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரும் பணியையும் செய்துதவினார்.

திட்டமிடல் முதல் செயலாக்கம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் முனைப்புடன் செயலாற்றி இம்மாநாட்டின் வெற்றிக்கு பேருதவி புரிந்ததோடு மட்டுமல்லாமல், மாநாட்டு நிறைவு அமர்விற்கு இணைப்புரையும் ஆற்றிய ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தாயுமானவன் பாஸ்கரனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

சுரேஷ் பாபு

இந்தியா

ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ் பாபுவிற்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்.

அமைப்புக்குழுவின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினராக, மாநாட்டின் அனைத்து தகவல் தொழில்நுட்ப பணிகளையும் அவர் திறம்பட மேற்கொண்டார். மாநாட்டுப் பேராளர்களின் பதிவு, பதிவுக் கட்டணங்களின் கண்காணிப்பு, விசா ஆவணங்களுக்கு தேவையான பதிவுச் சீட்டுக்களை வழங்கியது போன்ற அடிப்படைப் பணிகளை சுரேஷ் பாபு செய்தார்.

மேலும், போஸ்டர்கள் உருவாக்குதல், பேனர்களை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளில் அவரது தொழில்நுட்ப நிபுணத்துவத்தைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தினார். மாநாட்டின் ஒவ்வொரு காட்சித் தொகுதியும் உலகத் தரத்திற்கிணையாக இருந்ததற்கு சுரேஷ் பாபுவின் ஓய்வறியா உழைப்பே காரணம்.

மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களின் உரைகள் தடையின்றி நேரலை செய்யப்பட்டதற்கு இவரது பங்களிப்பே காரணமாகும். மாநாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் சுரேஷின் பங்களிப்பு அளப்பரியது. அவருக்கு நம் இதயங்கனிந்த நன்றி.

வசந்த்

இந்தியா

நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் புளியம்பட்டி ராஜகோபால் வசந்த் அவர்கள், இந்த மாநாட்டின் முழு நிகழ்வின்போதும் தனது அயராத உழைப்பை நல்கியமைக்காக நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான நினைவுப் பைகள், அவற்றுள் நிகழ்ச்சி அட்டவணை, குறிப்புப் புத்தகம், பேனா மற்றும் அருள்மொழி எழுதிய *Dravidian Charters* எனும் நூலையும் வைத்து ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கான பொறுப்பை வசந்த் ஏற்றுக் கொண்டார். TAMVIC தன்னார்வலர்கள் மற்றும் குறிப்பாக சையது மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து, பேராளர்களுக்கான சிற்றுண்டி, மதிய உணவு, முதல்நாள் இரவு உணவு ஆகியவற்றை ராதிகா, சரவணன் மற்றும் இளையமதி ஆகியோர் அடங்கிய உணவு ஏற்பாட்டுக் குழுவை வழிநடத்தும் பொறுப்பையும் வசந்த் ஏற்றுக்கொண்டார். இந்த ஏற்பாடுகளன்றியும், மாநாட்டில் பங்கேற்போருக்கும் தன்னார்வலர்களுக்கும் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கியதிலும் பெரும்பங்கு வகித்தார்.

தேனீக்கள் கூட ஓய்வெடுக்கலாம், ஆனால், இந்த மாநாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஓயாமல் உற்சாகமாக வசந்த் பணியாற்றினார். இளம் குடும்ப பொறுப்புகளுடன் கூடிய நிலையில் கூட அவர் காட்டிய அசாதாரண அர்ப்பணிப்பும் “செய்து முடிப்போம்” என்ற மனப்பான்மையும் மிகவும் வியக்கத்தக்கவை. அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

ராதிகா

இந்தியா

பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ராதிகாவின் உழைப்பு மாநாட்டின் வெற்றிக்கு மிகவும் உதவியது. பேராளர்களின் வரவேற்பு, பதிவு, அவர்களுக்கு மாநாட்டுப் பரிசுப் பொருட்களை வழங்கியது போன்ற பணிகளை மிகவும் திறம்படச் செய்ததோடு மட்டுமல்லாமல், மாநாட்டின் தொடக்க விழாவின் தொகுப்பாளராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.

மேலும், மேடை அலங்காரப் பொறுப்பினை ஏற்று திறம்படச் செய்தார்.  மேடைப் பணிகளுக்கு அப்பால் ராதிகா அவர்கள், வசந்த் மற்றும் பிற தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்து உணவு வழங்கும் ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். அஃதன்றியும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் சரவணன் அவர்களுடன் இணைந்து தேவையான பொருட்களை வாங்குவதிலும் பங்கெடுத்தார். மாநாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் வெற்றிக்கு ராதிகாவின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதவை. அவருக்கு நம் நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

சரவணன் இளங்கோவன்

இந்தியா

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் தம்பி சரவணன் அவர்கள் மாநாட்டின் இரண்டு நாட்களிலும் பண்பாட்டு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து செயல்படுத்தினார். நிகழ்ச்சிகள் சிறப்பானதாகவும், பேராளர்களின் நினைவில் நிற்கின்ற நிகழ்ச்சிகளாகவும் அமைந்தன.

சரவணனின் முக்கிய சாதனைகளில் ஒன்று, குழந்தைப் பருவந் தொட்டு இசை வித்தகராக விளங்கும் லிடியன் நாதஸ்வரத்தையும், அவரது தமக்கை அமிர்தவர்ஷினியையும் மாநாட்டின் இரண்டாம் நாளின் இறுதி அமர்விற்கு முன் பியானோ மற்றும் புல்லாங்குழலை இசைக்க வைத்து மாநாட்டுப் பேராளர்களை மகிழ்வித்ததாகும். இவர்களின் இசையைப் பேராளர்கள் மெய்மறந்து கேட்டு பாராட்டினார்கள். மேலும், இசைக்கலைஞர் கார்த்திக்கையும் அழைத்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ததின் மூலம், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்க சரவணன் பேருதவி புரிந்தார்.

மாநாட்டு நுழைவுச்சீட்டுகளை விற்றல், மாணவர் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தல், தேவையான பொருட்களை வாங்குதல் போன்ற பணிகளைத் திறம்படச் செய்தும், மாநாட்டின் நான்காம் அமர்வின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்படப் பணியாற்றி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த சரவணன் அவர்களுக்கு நம் மங்கனிந்த நன்றி.

இளையமதி

இந்தியா

இளையமதியின் சிறப்பான ஒருங்கிணைப்பும், அவர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் மாநாட்டின் வெற்றிக்குப் பெரிதும் துணைநின்றன. மாணவர்களின் ஆய்வுப் போஸ்டர்களை போட்டிக்கு சமர்ப்பிக்க வைப்பதில் மாணவர்களுடன் இணைந்து இளையமதி சிறப்பாகப் பணியாற்றினார். ஒவ்வொரு செயலையும் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு, நினைவுப் பரிசு சான்றிதழ்களை அச்சிடுதல், ஒவ்வொரு சான்றிதழையும் அழகாக ஃப்ரேம்களில் வைத்து பேச்சாளர்களுக்கும், மாநாட்டுக்கு நிதியளித்தவர்களுக்கும், வேறு வகையான உதவிகளை அளித்தவர்களுக்கும் வழங்கும் பணியினை சிறப்பாகச் செய்தார்.

அதே போல, கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான பெயர் அட்டைகளைத் தயாரிக்கும் பணியையும் இளையமதி ஒருங்கிணைத்தார். ஒலி-ஒளி குழுவுடன் இணைந்து மாநாட்டின் தொழில்நுட்ப நிகழ்வுகளில் எந்த சிக்கலும் இல்லாமல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

தம்பி இளையமதியின் சீரான திட்டமிடலும், பொறுப் புணர்வும், அர்ப்பணிப்பும் மாநாட்டின் ஒழுங்குமுறை மற்றும் வெற்றிகரமான நிகழ்வாக மாற்றுவதில் இன்றியமையாததாக இருந்தது.

திருமலை நம்பி

இந்தியா

இந்த மாநாட்டிற்காக மாநாடு நடைபெறும் இடத்தை அரங்க மூர்த்தி, தாயுமானவன், சுரேஷ் பாபு உள்ளிட்டோருடன் இணைந்து கிளென் அய்ரா நகராட்சியுடன் தொடர்பு கொண்டு இவ்வளவு சிறப்பான மாநாட்டு அரங்கைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்காற்றிய ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொருளாளர் திருமலை நம்பி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

உடல் நலிவுற்றிருக்கும் தன் தாயாரை கவனித்துக் கொள்வதற்காக அவர் சென்னையில் இருந்தாலும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும், இணைய வழியாக தவறாமல் கலந்து கொண்டு மாநாட்டு ஏற்பாடுகளுக்கு துணை புரிந்தார். மாநாட்டு கணக்கு வழக்குகள், கொடுக்கல், வாங்கல் ஆகிய அனைத்தையும், துல்லியமாக, குறித்த காலத்தில் சென்னையில் இருந்தவாறே செய்து இம்மாநாட்டை வெற்றி பெறச் செய்ததில் பெரும் பங்கு வகித்த தம்பி திருமலை நம்பி அவர்களுக்கு நம் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

டாக்டர் பிரதீப்

இந்தியா

மாநாட்டின் சமூக ஊடக செயல்பாடுகளைச் சிறப்பாக அமைத்து, முன்னெடுத்து, சமூக ஊடகங்களில் மாநாட்டுச் செய்திகளை இடையறாது பரப்பியமைக்காக, ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் பிரதீப் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

முகம் காட்ட மறுத்து, அவர் மேற்கொண்ட அர்ப்பணிப் புடனான பணியின் மூலம் உலகளாவிய சமூகத்திற்கு மாநாட்டுத் தகவல்கள் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் சென்றடைந்தது, மாநாடு நடப்பது பற்றிய செய்திகள் மிக விரைவாகவும் விரிவாகவும் பரவியது. டாக்டர் பிரதீப் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

பிஏடிசிஏ (PATCA)விற்கு
வெளியில் இருந்து உதவியோர்

இந்தியா

ஆசிரியர் அய்யா அவர்களிடம் பேரன்பு கொண்ட மெல்போர்ன் நண்பர் பழநிசாமியும் அவரது துணைவியார் லட்சுமி பழநிசாமி அவர்களும் நம் மாநாட்டுப் பேராளர் களைத் தங்கள் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்தமைக்காக நாம் நம் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

தங்கை ஓவியா, அருள்மொழி, தோழர் உதயகுமார், அவரது துணைவியார் ஜனனி, மகள் சாரல் ஆகியோரைத் தங்கள் இல்லத்தில் தங்க வைத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை இரண்டு நாட்களும் மாநாட்டிற்கு அழைத்தும் வந்தார்கள். அவர்களின் பேருதவிக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

ஆஸ்திரேலிய பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினைச் சாராத பலரின் பங்களிப்பும் இம்மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்த உதவியது.

குறிப்பாக மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து தன்னுடைய வெண்கலக் குரலால் பேராளர்கள் அனைவரையும் தன் பக்கமே ஈர்த்து நிகழ்ச்சியை நடத்திய ஆஸ்திரேலிய தமிழ் சேம்பர் ஆஃப் காமர்சைச் சார்ந்த மிதுனுக்கு நம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து பேச்சாளர்களை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்த டாக்டர் சுல்தான் அவர்களுக்கும் நம் நன்றியை உரித்தக்குகின்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *