2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏவுக்கும், இஸ்ரேலின் மொசாத்திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராட்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.
இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “2004 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-இல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.
காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-இல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதிக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.அய்.ஏ.வும், மொசாத்தும் முடிவு செய்தன.
இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.
ஒன்றியத்தில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின” என்று தெரிவித்தார்.
