மாட்ரிக், நவ. 28- சுற்றுச் சூழலைக் காக்கப் போராடும் இளம் போராளிகளில் ஒருவர், லிசிப்பிரியா கங்குஜாம். இவர் எந்த அளவு இளையவர் என்றால், தற்போது 14 வயதுதான் ஆகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள பாஷிகோங் என்ற கிராமத்தில் பிறந்தவர், லிசிப்பிரியா. லிசிப்பிரியா 6 வயது சிறுமியாக இருக்கும்போதே, சுற்றுச்சூழல் குறித்த உணர்வு இவருக்கு வந்துவிட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல், சுற்றுச் சூழலைக் காக்கப் போராடி வருகிறார், அதற்காக குரல் கொடுக்கிறார் லிசிப்பிரியா.
இந்தியாவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளிப் பாடத் திட்டத்தில் நிலை மாற்றம் குறித்த பாடங்களை சேர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
2019ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற அய்.நா.வின் பருவநிலை மாற்ற மாநாட்டிலும் லிசிப்பிரியா பங்கேற்று பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில், மங்கோலியாவில் நடந்த, பேரழிவு குறித்த அய்.நா. மாநாட்டில் தனது தந்தையுடன் லிசிப்பிரியா பங்கேற்றார். அதுதான், சுற்றுச்சூழல் செயல்பாட்டில் தான் தீவிரமாக இறங்க ஊக்கமாக அமைந்ததாக இவர் கூறுகிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்துக்காக, ‘குழந்தைகள் இயக்கம்’ ஒன்றையும் லிசிப்பிரியா தொடங்கியிருக்கிறார். இவரின் இதுபோன்ற பணிகளுக்காக, அமெ ரிக்காவின் எர்த் டே அமைப்பின் சார்பில் ‘வளரும் நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் அப்துல் கலாம் குழந்தைகள் விருது, உலக குழந்தைகளுக் கான அமைதி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ்பெற்ற இளம் சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பர்க். லிசிப்பிரியாவை ‘இந்தியாவின் கிரேட்டா தன்பர்க்’ என்கிறார்கள்.
