உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு

3 Min Read

புதுடில்லி, நவ.27- உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது குற்றவியல் நீதியை தவறாக பயன்படுத்துவதாகும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர். மகாதேவன் அமர்வு அளித்த தீர்ப்பில், “பாலியல் வன்கொடுமை கொடூரமான குற்றம் என்பதால், அது உண்மையான பாலியல் வன்முறை அல்லது ஒப்புதல் இல்லாத சூழல்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரரான ஆணுக்கும், புகார்தாரரான பெண்ணுக்கும் முழு சம்மதத்துடன் 3 ஆண்டுகள் உறவு இருந்துள்ளது. இந்த உறவு சில காரணங்களால் திருமணத்தில் முடியாமல் போனதால் அந்த உறவின்போது நிகழ்ந்த உடலுறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது.

இத்தகைய வழக்குகளை தொடர அனுமதிப்பது நீதிமன்ற அமைப்பை தவறாக பயன்படுத்துவதாகும். முறிந்த அல்லது தோல்வியுற்ற உறவுகளுக்கு குற்றவியல் சாயம் பூசப்படும் போக்கு கவலையளிக்கிறது.

தோல்வியுற்ற ஒவ்வொரு உறவையும் பாலியல் வன்கொடுமை குற்றமாக மாற்றுவது அந்த உண்மையான குற்றத்தின் தீவிரத்தை குறைக்கும். இத்தகைய வழக்குகள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அழியாத களங்கத்தையும், அநீதியையும் ஏற்படுத்தும்.” என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

 

அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்குச் சொந்தமானதாம்!

சீன வெளியுறவு
செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்

இட்டாநகர், நவ.27- இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.

ஆனால், அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய கடவுச் சீட்டு செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.

கடவுச்சீட்டு பறிமுதல்

இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகாரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.

அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது பற்றி இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.

கேலி

சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், “சீனக் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கவும்” என கூறி கேலி செய்ததாகவும் பிரேமா குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பிரேமா, இது ‘இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம்’ என்றும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.

முதலமைச்சர் கண்டனம்

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அருணாச்சல முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், “”சாங்னான் சீனாவிற்கு சொந்தமானது. இந்தியாவால் சட்டவிரோதமாக “அருணாச்சலப் பிரதேசம்” என்று அழைக்கப்படுவதை சீனா ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. அப்பெண் துன்புறுத்தப்படவில்லை; விதிகள் மற்றும் சட்டங்களின்படியே சோதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட நபரின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விமான நிறுவனம் அப்பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதி செய்து கொடுத்தது. உணவு வழங்கியது” என்று தெரிவித்தார்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒன்று. அது சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி” என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *