புதுடில்லி, நவ.26- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில், நேற்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்ட நிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்தார்.
மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, “2024-2025ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது.
அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார்.
